தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி அளித்தார். அப்போது, கடந்த 2020ஆம் ஆண்டு, அதிமுக ஆட்சியில் இருந்தபோது, உறுப்பு கல்லூரிகளாக செயல்பட்டு வந்த 41 கல்லூரிகள் ஒரே அரசாணையில் அரசு கல்லூரிகளாக தரம் உயர்த்தப்பட்டதாக தெரிவித்தார்.
மேலும், உறுப்பு கல்லூரிகளாக செயல்பட்ட கல்லூரிகளில் பணிபுரிந்த 7,300 கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம் செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், திமுக தேர்தல் அறிக்கையில் "கௌரவ விரிவுரையாளர்கள் நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று கூறப்பட்ட நிலையில், ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளாகியும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. வெறும் ₹25,000 சம்பளம் மட்டுமே அவர்களுக்கு வழங்கப்படுகிறது.
இதன்மூலம், படிக்காத பாமர மக்களை ஏமாற்றுவது மட்டுமின்றி, பட்டம் பெற்ற விரிவுரையாளர்களையும் திமுக அரசு ஏமாற்றுகிறது. எனவே, கௌரவ விரிவுரையாளர்களின் சம்பள உயர்வு கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.