ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றியோ தோல்வியோ அதிமுக போட்டியிட்டிருக்க வேண்டும் என திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.
சமீபமாக தேசிய அளவில், மாநில அளவில் நடந்து வரும் அரசியல் நிலவரங்கள் குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்கு விசிக தலைவர் திருமாவளவன் பதில் அளித்தார். டெல்லியில் பாஜக வெற்றி குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர் “டெல்லியில் பாஜக, ஆம் ஆத்மியை விட 2 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றுள்ளது. காங்கிரஸ் 6 சதவீத வாக்குகளை பெற்றது. காங்கிரஸும், ஆம் ஆத்மியும் ஒற்றுமையாக இருந்திருந்தால் பாஜகவை வீழ்த்தி இருக்கலாம். இனியாவது இந்தியா கூட்டணி கட்சிகள் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்” என்றார்.
அதுபோல அதிமுக கட்சியின் உட்கட்சி பூசல் குறித்து பேசிய அவர் “அதிமுகவின் உள்கட்சி விவகாரங்களில் நான் கருத்து சொல்ல முடியாது. ஆனால் அதிமுக தன்னை வலுப்படுத்திக் கொண்டு வலிமையான எதிர்கட்சியாக இருக்க வேண்டும். வெற்றியோ தோல்வியோ அவர்கள் ஈரோடு இடைத்தேர்தலில் நின்றிருக்க வேண்டும். அவர்களும், பாஜகவும் ஒதுங்கியது நாம் தமிழரை வளர்த்து விடுவது போல ஆகிவிட்டது. தமிழ்நாட்டில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்ததாலேயே பாஜக வளர்ந்தது” என்று கூறியுள்ளார்.
மேலும் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ள சாதிவாரி கணக்கெடுப்பு போராட்டம் குறித்து பேசிய திருமாவளவன் “சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது தமிழகத்தின் கோரிக்கை மட்டுமல்ல. நாடு தழுவிய கோரிக்கை. இதற்கு அன்புமணி ராமதாஸ் பாஜகவை வலியுறுத்திதான் போராட்டம் நடத்த வேண்டும். ஆனால் அரசியல் காரணங்களுக்காக திமுகவை எதிர்த்து போராட்டம் செய்ய முயல்கிறார்” எனக் கூறியுள்ளார்.
Edit by Prasanth.K