கரூர் பரணி பார்க் சாரணர் மாவட்டம் சார்பாக எல்லையைப் பாதுகாக்கும் நமது இராணுவ வீரர்களுக்கு ராக்கி அனுப்பும் விழா கரூர் அட்லஸ் கலையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார்.பரணி பார்க் கல்விக் குழும தாளாளர் மோகனரெங்கன், செயலர் பத்மாவதி மோகனரெங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் 'தமிழ் தூதர்' தருண் விஜய் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இராணுவ வீரர்களுக்காக பரணி பார்க் கல்விக் குழும மாணவர்கள் தயாரித்திருந்த 75,000 ராக்கிகளை பெற்றுக் கொண்டு பேசுகையில், பரணி பார்க் சாரண, சாரணீய மாணவர்கள் நாட்டுப் பற்றோடு இராணுவ வீரர்களுக்கு ராக்கி அனுப்பி அவர்களின் அன்பை வெளிப்படுத்துவதிலும் நாட்டிற்கே முன் உதாரணமாக திகழ்கின்றனர் என்று கூறினார்.
இவ்விழாவில் பேசிய பரணி பார்க் கல்விக் குழும முதன்மை முதல்வர் முனைவர் ராமசுப்பிரமணியன் பேசுகையில், “இராணுவ வீரர்களுக்கு நாடு முழுவதும் அவர்கள் மீது அன்பும், அக்கறையும் கொண்ட சகோதரிகள் உள்ளார்கள் என்பதை உணர்த்தும் வகையில் 75,000 ராக்கிகள் அனுப்பபடுகிறது.
முதல் வருடம் 15000 ராக்கிகள் டோக்லாமிற்கும், இரண்டாம் வருடம் 16000 ராக்கிகள் இராணுவ மருத்துவ முகாம்களில் இருந்த இராணுவ வீரர்களுக்கும் அனுப்பி வைக்கப்படது. இவ்வருடம்75,000 ராக்கிகள் இன்று வரை தயாரித்துள்ளனர் மேலும் இராணுவ வீரர்களுக்கு அனுப்புவதற்கு முன் 1,00,000 ராக்கிகள் தயாரித்து முடிக்கப்படும்” என்றும் கூறினார்.