மதுரை சித்திரை திருவிழா.. முகூர்த்தக்கால் நட்டு நிகழ்ச்சி தொடக்கம்..!

Mahendran

வெள்ளி, 4 ஏப்ரல் 2025 (11:57 IST)
மதுரை சித்திரை திருவிழாவின் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி தொடங்கியுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 
 
ஒவ்வொரு ஆண்டும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா 15 நாட்கள் சிறப்பாக நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. முக்கிய நிகழ்வுகளில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், தேரோட்டம், அழகர் ஆற்றில் இறங்குதல் உள்ளிட்டவை அடங்கும், மேலும் இந்த நிகழ்ச்சிகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.
 
இந்த ஆண்டு சித்திரை திருவிழாவுக்கான பணிகள் தொடங்கியுள்ள நிலையில், முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. யானை மூலம் முகூர்த்தக்கால் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, கோவில் சிவாச்சாரியார்களால் சிறப்பு பூஜை செய்யப்பட்டு நடப்பட்டது.
 
இந்த நிலையில், ஏப்ரல் 29ஆம் தேதி சித்திரை திருவிழா கொடியேற்றம் நடைபெறும் என்றும், மே 6ஆம் தேதி மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், 8ஆம் தேதி மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், 9ஆம் தேதி தேரோட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மே 10ஆம் தேதி கள்ளழகர் புறப்பாடு, 11ஆம் தேதி எதிர்சேவை, 12ஆம் தேதி வைகை ஆற்றில் "எழுந்தருளும்" நிகழ்வு நடைபெறவுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்