தமிழக அரசுக்கு வருமானம் ஈட்டித்தரும் சிறந்த குடிமகன்கள்!!

Webdunia
வெள்ளி, 5 ஜூலை 2019 (15:38 IST)
தமிழக அரசுக்கு டாஸ்மாக் மூலம் இந்த ஆண்டு 31,157.83 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 2016 ஆம் ஆண்டு, அதிமுக ஆட்சியின் போது 7896 டாஸ்மார்க்குகள் இயங்கிகொண்டிருந்தன. அதன் பின்பு மதுவிலக்கு அமல்படுத்தும் முதல் முயற்சியாக 500 டாஸ்மாக் கடைகளை மூடியது.

அத்தோடு இல்லாமல் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை இருந்த டாஸ்மாக் நேரத்தை பகல் 12 மணிமுதல் இரவு 10 மணியாக மாற்றியது.

மதுவிலக்கின் முதல் படியாக பார்க்கப்பட்ட இந்த முயற்சி, பெரும் தோல்வியைத் தழுவியது. தோல்வி என்றால் மதுவிலக்கு முயற்சிக்கு தோல்வியே ஒழிய, தமிழக அரசின் கஜானாவிற்கு ஒரு வெற்றியாகத் தான் அமைந்தது.

டாஸ்மாக் கடைகளை மூடுவதாலும், நேரத்தை குறைப்பதாலும் பொதுமக்களின் குடிப்பழக்கத்தை கட்டுக்குள் கொண்டு வரலாம் என்றும், மதுவால் நேரும் உயிரிழப்புகளை தவிர்க்கலாம் என்றும் தமிழக அரசு எதிர்ப்பார்த்து கொண்டு இருக்கையில், அதற்கு நேர் மாறாக பல மைல்களையும் பல தடைகளையும் கடந்து வந்து மது பிரியர்கள் 12 மணி வரை வெயிலில் காத்திருந்து குடிக்க ஆரம்பித்தனர்.

மது பிரியர்களுக்கு இது முதலில் சிரமமாக இருந்தாலும், அவர்கள் அன்றாடம் இதை கடைப்பிடித்து வந்த நிலையில் நாட்கள் செல்ல சகஜமானது.

அதன்பின்பு கடந்த 2017 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமியின் தமிழக அரசு, பிப்ரவரி 24 ஆம் தேதி, மதுவிலக்கை இன்னும் சிறிது மேம்படுத்த முடிவெடுத்து மேலும் 500 டாஸ்மாக் கடைகளை மூடியது மட்டுமல்லாமல், தேசிய நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் இருக்க கூடாது என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. ஆதலால் மேலும் 3231 கடைகள் மூடப்பட்டன.

இதன்பிற்கு தற்போது நிலவரப்படி, தமிழகத்தில் 5198 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. ஆனால் தன்னுடைய முடிவில் சற்றும் மனம் தளராத மதுபிரியர்கள் தங்களுடைய கடமைகளை தவறாமல் செய்ததன் விளைவாக சாதாரண நாட்களில் தினமும் ரூ.70 கோடியும், பண்டிகை நாட்களில் ரூ.100 கோடி வரையும் தமிழக அரசுக்கு வருமானம் வருகிறது.

இந்நிலையில் தற்போது சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட ,மதுவிலக்கு ஆய்வுத்தீர்வு கொள்கை விளக்க குறிப்பில், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டிற்கு பீர் ஏற்றுமதி செய்யப்பட்ட வகையில்,2017-2018 ஆம் ஆண்டு ஈட்டப்பட்ட வருவாய் ரு.172.98 லட்சம். இந்த வருவாய் 2018-2019 ஆம் ஆண்டில் ரூ.577.91 லட்சமாக உயர்ந்துள்ளது.

இதன்மூலம் அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.23.35 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் எனவும், இரக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மதுபானங்களின் சிறப்பு கட்டணம் மூலமாக ரூ.22.52 கோடி வருவாய் கிடைத்துள்ளது எனவும் கூறியுள்ளது.

மேலும் மது வருவாயை பொருத்தவரை கடந்த ஆண்டு 26,797.96 கோடி ரூபாய் வருவாய் எட்டபபட்ட நிலையில், இந்த ஆண்டு 31,157.83 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்