பாம்பிடமிருந்து எஜமானியை காப்பாற்றிய நாய்: பரிதாபமாக உயிரை விட்டது

வெள்ளி, 5 ஜூலை 2019 (11:22 IST)
தூத்துக்குடியில் எஜமானியின் குடும்பத்தினரை காப்பாற்றுவதற்காக, பாம்பை கடித்து கொன்ற நாய், பின்பு தானும் உயிரை விட்ட துயர சம்பவம் நடந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் ஜூபிலி தெருவைச் சேர்ந்தவர் பாபு. இவர் வெளிநாட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார்.

பாபுவின் மனைவி பொன்செல்வி நாசரேத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் தனது இரட்டை பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

பொன்செல்வி தனது வீட்டில் ஒரு ஆண் நாயும், ஒரு பெண் நாயும் வளர்த்துவந்தார். இந்நிலையில் நேற்று முன் தினம் இரவில் தன்னுடைய இரண்டு மகள்களுடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது, வீட்டின் வளாகத்தில் 5 அடி நீள நல்ல பாம்பு ஒன்று ஊர்ந்து வந்துள்ளது. அதனைப் பார்த்த இரண்டு நாய்களும் குரைத்தன.

அப்போது ஆண் நாய், அந்த பாம்பை கடித்து குதறியது. கடித்து குதறிய நாயை அந்த நல்ல பாம்பு கொத்தியது.. இதனால் அந்த நாயின் உடலில் விஷம் ஏறியது. அப்படி இருந்தும் அந்த நாய் அந்த பாம்பை கடித்து குதறுவதை விடவில்லை.

பின்பு அந்த பாம்பை, கவ்வியபடியே மாடிக்கு சென்றது. அடுத்த நாள் அதிகாலையில் பொன்செல்வி கண்விழித்து கதவைத் திறந்தபோது அங்கே பெண் நாய் மட்டும் நின்றுள்ளது.

பின்பு வீடு முழுவதும் தேடிய நிலையில், மாடிக்கு சென்ற பொன்செல்விக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கே ஆண் நாயும் அதன் அருகே 5 அடி நீள நல்ல பாம்பும் இறந்த நிலையில் கிடந்தன.

எஜமானரின் குடும்பத்தை காப்பற்றுவதற்காக பாம்பை கொன்று, தானும் உயிரை விட்ட நாயைக் குறித்து கேள்விப்பட்ட  அப்பகுதி மக்கள் வியப்புடனும் நெகிழ்சியுடனும் இறந்த நிலையிலிருந்த நாயை பார்த்து சென்றனர். பின்பு இறந்த நாயையும் பாம்பையும் அப்பகுதியிலேயே குழி தோண்டி புதைத்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்