கோடையில் வதைக்கும் நீர்க்கடுப்பு.. இதை செய்தால் 10 நிமிடத்தில் சரியாகும்!

Prasanth Karthick
திங்கள், 8 ஏப்ரல் 2024 (11:21 IST)
கோடை காலம் வந்தாலே நீர்க்கடுப்பு பிரச்சினை ஏற்படுவது பலருக்கும் வாடிக்கையாக உள்ளது. இவ்வாறு நீர்க்கடுப்பு ஏற்படும்போது உடனடி நிவாரணத்திற்கு என்ன செய்யலாம் என்று பார்ப்போம்.



பொதுவாக வெயில் காலங்களில் உடலில் உள்ள நீர்ச்சத்துக்கள் வேகமாக வெளியேறுவதாலும், உடல் உஷ்ணமடைவதாலும் நீர்க்கடுப்பு உண்டாகிறது. அதிகம் இரவு நேரங்களில் ஏற்படும் இந்த நீர்க்கடுப்பு தூக்கத்தையும் கெடுக்கிறது. இவ்வாறு நீர்க்கடுப்பு ஏற்படும் சமயங்களில் உடனடி நிவாரணம் பெற சில விஷயங்களை செய்யலாம்.

நீர்க்கடுப்பு ஏற்படும்போது 2 சொம்பு தண்ணீரை முழுவதுமாக குடிக்க வேண்டும். சிறிது நேரம் கழித்து சிறுநீர் கழிக்க தோன்றும். அப்போதும் சிறுநீரில் எரிச்சல் இருக்கும். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக எரிச்சல் அடங்கி உடல் உஷ்ணம் அடங்கும்.

வெந்தயத்தை மிஞ்சிய நீர்க்கடுப்பு நிவாரணி கிராமங்களில் இல்லை. இன்றும் நீர்க்கடுப்பு, உடல் உஷ்ண பிரச்சினைகள் ஏற்பட்டால் வெந்தயம் சாப்பிடுவார்கள். நீர்கடுப்பு ஏற்பட்டால் உள்ளங்கை நிறைய வெந்தயம் எடுத்து மென்று சாப்பிட்டு ஒரு சொம்பு தண்ணீர் குடித்தால் சில நிமிடங்களில் நீர்க்கடுப்பு பறந்து போகும்.

நீர்கடுப்பு ஏற்படமால் இருக்க முன்கூட்டிய நடவடிக்கைகளை செய்வதும் நல்லது. பலரும் வெயிலில் ஓடி ஆடி வேலை செய்வார்கள். அப்படி வெயிலில் வேலை செய்பவர்கள் மாலையில் குளித்த பின் சில மணி நேரம் கழித்து இளநீர் அல்லது நீர் மோர் அருந்தலாம். இது நாக்கில் எச்சில் சுரப்பை தூண்டி விடுவதுடன், உடலில் நீர்ச்சத்தையும் தக்க வைக்கும். பொதுவாக தினசரி அடிக்கடி தண்ணீர் குடித்து வந்தாலே நீர்க்கடுப்பை சமாளிக்கலாம்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்