தமிழகத்தில் கடந்த 7ஆம் தேதி மற்றும் 8ஆம் தேதி மட்டும் மதுக்கடைகளை திறந்த நிலையில் திடீரென சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு காரணமாக 9ஆம் தேதி மூடப்பட்டது. அதன் பின்னர் உச்ச நீதிமன்றம் சென்று தடை உத்தரவை உடைத்த தமிழக அரசு கடந்த 16ஆம் தேதி முதல் மதுக்கடைகளை திறந்து விற்பனை செய்து வருகிறது. ஒவ்வொரு நாளும் ரூ,100 கோடிக்கும் மது விற்பனை ஆவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன
இந்த நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுவையிலும் இன்று முதல் மதுக்கடைகளை திறக்க இருப்பதாக அமைச்சரவை முடிவு செய்து அதற்கான அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டது. காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை சில்லறை மதுக்கடைகளும் காலை 9.30 மணி முதல் இரவு 7 மணி வரை மொத்த மது கடைகள் திறக்கப்படும் என்று புதுவை அரசு அறிவித்து இருந்தது. ஆனால் இதில் தற்போது திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது
புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் கவனத்திற்கு மதுக்கடைகள் திறக்கப்படுவது குறித்த கோப்பு சென்றுள்ளதாகவும் அவருடைய அனுமதி பெற்று அரசிதழில் வெளியிட வேண்டிய நிலை இருப்பதால் இன்று கடைகள் திறக்க வாய்ப்பு இல்லை என்றும் அனேகமாக நாளை திறக்க வாய்ப்பு இருப்பதாகவும் புதுச்சேரி அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
இன்று மது கடைகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பு மது பிரியர்கள் மகிழ்ச்சி அளித்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவல் அவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இருப்பினும் நாளை மதுக்கடைகளை திறக்க அதிக வாய்ப்புள்ளது என்பதால் ஒரு நாள் பொழுது காத்திருக்க வேண்டிய நிலையில் மது பிரியர்கள் உள்ளனர்