தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை என்பது இந்தி திணிப்பு என தவறான கண்ணோட்டத்தை கட்சிகள் ஏற்படுத்தி வருவதாக பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
சமீபமாக தமிழ்நாட்டிற்கு மும்மொழி கொள்கையை ஏற்காததால் மத்திய நிதி அளிக்கப்படாத சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இன்று பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அதில் அவர் “மும்மொழி கொள்கை வழியாக பாஜக இந்தியை திணிக்க முயல்வதாக பலரும் தவறாக சித்தரிக்கின்றனர். புதிய கல்விக் கொள்கை பரிந்துரையை பிரதமர் மோடியிடம் காட்டியபோது அதில் மூன்றாவது மொழியாக இந்திதான் இருந்தது. ஆனால் பிரதமர் மோடி மூன்றாவது மொழியாக இந்திய மொழிகள் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம் என்று சொன்னார்.
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை விட தனியார் பள்ளிகளில் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர். தமிழகத்தின் தனியார் பள்ளி மார்க்கெட் சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய். மாணவர்கள் தனியார் பள்ளிகளுக்கு செல்ல வேண்டும் என்பதற்காக அரசு பள்ளிகளில் தொடர்ந்து இருமொழிக் கொள்கையை வைத்திருக்கிறார்களா? என்று நான் கேட்கிறேன்.
நடிகர் விஜய் தனது இடத்தை ஒரு அறக்கட்டளைக்கு லீஸ் கொடுத்துள்ளார். அந்த அறக்கட்டளை அவரது அப்பா எஸ்.ஏ.சி பெயரில் உள்ளது. அந்த அறக்கட்டளை படூரில் விஜய் வித்யாஸ்ரம் என்ற பெயரில் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறது. கல்வி அமைச்சர் அன்பில் மகேஸின் பிள்ளை ப்ரெஞ்சு படிக்கிறது. அரசியல் தலைவர்கள் பலர் சிபிஎஸ்இ பள்ளிகளை நடத்துகிறார்கள். அப்படி இருக்கும்போது எந்த விதத்தில் அரசுப்பள்ளி மாணவர்களை மட்டும் இரண்டு மொழி படிக்கச் சொல்கிறார்கள்.
மூன்றாவது மொழியாக இந்தி வேண்டாம் என்றால் வேறு ஏதாவது ஒரு மொழியை தேர்வு செய்து படிக்கலாம் என்றுதான் சொல்கிறோம்” என பேசியுள்ளார்.
Edit by Prasanth.K