டோக்கன் வாங்கியதுமே கலர் ஜெராக்ஸ்! – மதுப்பிரியர்கள் கையும் டோக்கனுமாக கைது!

சனி, 16 மே 2020 (12:10 IST)
மதுக்கடைகளில் மது வாங்க அளிக்கப்பட்ட டோக்கனை கலர் ஜெராக்ஸ் எடுத்து மோசடி செய்ய முயன்ற மதுப்பிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் கடந்த 7ம் தேதி திறக்கப்பட்ட மதுக்கடைகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றவில்லை என மூட உத்தரவிடப்பட்டன. தமிழக அரசின் மேல் முறையீட்டின் காரணமாக மதுக்கடைகளை திறப்பதன் மீதான தடையை நீக்கியது உச்ச நீதிமன்றம். அதனால் இன்று முதல் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட சில பகுதிகளை தவிர்த்து பல இடங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

மதுக்கடைகளில் மது வாங்க டோக்கன் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது தமிழக அரசு. அதன்படி காலையிலேயே மதுக்கடைகளில் வந்து குவிந்த மதுப்பிரியர்களுக்கு கிழமை வாரியாக பல வண்ணங்களில் டோக்கன் வழங்கப்பட்டுள்ளது, அதில் குறிப்பிட்டுள்ள கிழமைகளில் மதுவை வாங்கி செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. டோக்கனுக்காக மதுப்பிரியர்கள் பலர் காத்து கிடக்கும் நிலையில், கடலூரில் டோக்கன் வாங்கிய சிலர் அதை கலர் ஜெராக்ஸ் எடுத்து, டோக்கன் இல்லாதவர்களிடம் விற்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதையறிந்த போலீஸார் உடனடியாக செயல்பட்டு மோசடியில் ஈடுபட்ட மதுப்பிரியர்கள் 16 பேரை கையும், டோக்கனுமாக கைது செய்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்