வேளான் சட்டங்கள் வாபஸ்: தலைவர்கள் வரவேற்பு!!

Webdunia
வெள்ளி, 19 நவம்பர் 2021 (11:13 IST)
வேளாண் சட்டங்களை திரும்பப்பெறுவதாக மோடி அறிவித்ததை தொடர்ந்து அரசியல் தலைவர்கள் பலர் இதனை வரவேற்று வருகின்றனர். 

 
மத்திய அரசு கடந்த ஆண்டு வேளாண் சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய நிலையில் விவசாயிகள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கொரோனா காலகட்டத்திலும் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து டெல்லியில் போராட்டம் நடத்தி வந்தனர். கிட்டத்தட்ட ஒரு ஆண்டு காலமாக இந்த போராட்டங்கள் நடந்து வருகின்றன. 
 
இந்நிலையில் இன்று நாட்டு மக்களிடையே உரையாடிய பிரதமர் மோடி, விவசாயிகளின் முன்னேற்றத்தை மனதில் கொண்டே வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டது. பின்னர் வேளாண் சட்டங்களை விவசாயிகள் எதிர்த்து வருகின்றனர். எனவே எதிர்வரும் குளிர்கால கூட்டத்தொடரில் வேளாண் சட்டங்களை முறைப்படி திரும்ப பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார். 
 
இதனை அரசியல் தலைவர்கள் பலர் வரவேற்று வருகின்றனர். பலதரப்பட்ட அரசியல் தலைவர்களின் இது குறித்த கருத்து பின்வருமாறு... 
 
வைகோ: 
மக்கள் சக்தியே மகேசன் சக்தி என்பதை உணர்ந்து மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. போராட்டத்தில் இறந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு மத்திய அரசு இழப்பீடு வழங்க வேண்டும். 
 
தொல்.திருமாவளவன்: 
மத்திய அரசு காலம் கடந்து முடிவு எடுத்திருந்தாலும் ஏற்றுக்கொள்ளக்கூடியது. தாமதமான முடிவு என்றாலும் ஓராண்டாக போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றியாக இதனி கருதுகிறேன். 
 
அரவிந்த் கெஜ்ரிவால்: 
விவசாயிகளின் தியாகம் அழியாது. விவசாயத்தையும், விவசாயிகளையும் காப்பாற்ற இந்த நாட்டின் விவசாயிகள் தங்கள் உயிரை எப்படிப் பணயம் வைத்திருக்கிறார்கள் என்பதை வரும் தலைமுறைகள் நினைவில் வைத்திருக்கும். 
 
பொன் ராதாகிருஷ்ணன்: 
விவசாயிகளின் நீண்டகால பிரச்சனையை தீர்க்கவே பிரதமர் மோடி வேளாண் சட்டங்கள கொண்டுவந்தார். ஆனால் இப்போது அவர்களின் முடிவிலா போராட்டத்தால் அதனை திரும்ப பெற்றுள்ளார். 
 
கே.பாலகிருஷ்ணன்: 
வேளான் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி. இது தாமதமான முடிவு என்றாலும் வரவேற்கதக்கது. 
 
அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை:
மூன்று வேளாண் சட்டங்களிலும் தேவையெனில் திருத்தங்களை கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தினோம் . ஆனால் விவசாயிகளின் கோரிக்கைக்கு மதிப்பளித்து பிரதமர் மோடி தற்போது இந்த முடிவை எடுத்துள்ளார். இது வரவேற்கதக்கது. 
 
தயாநிதி மாறன்: 
வென்றது - ஓராண்டாக டெல்லியில் விவசாயிகள் நடத்திய வீரப் போராட்டம். வீழ்ந்தது - மோடி அரசின் விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்கள். தெரிவது - வரப்போகும் தேர்தல்கள் குறித்த பிரதமர் மோடியின் அச்சம். அடுத்தது? இதேபோல் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டமும் திரும்பப் பெறப்படுமா?
 
முதல்வர் மம்தா பானர்ஜி:
பாஜக உங்களுக்கு அளித்த இன்னல்களிலும் துவண்டுவிடாமல் அயராது போராடிய ஒவ்வொரு விவசாயிக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். இது உங்கள் வெற்றி. இத்த போராட்டத்தில் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்