குஜராத்: பாலம் இடிந்து விழுந்ததால் இடிபாடுகளில் சிக்கிய கார்கள்: வைரலாகும் வீடியோ

Webdunia
திங்கள், 7 அக்டோபர் 2019 (10:58 IST)
குஜராத் மாநிலத்தில் அதிக வாகனங்கள் செல்லும் ஒரு முக்கிய பாலம் இடிந்து விழுந்ததில் அதில் சென்று கொண்டிருந்த ஏராளமான கார்கள் இடிபாடுகளில் சிக்கின. மேலும் இந்த விபத்தால் ஒருசிலர் படுகாயமடைந்தனர்.

குஜராத் மாநிலம் ஜுனாகத் என்ற பகுதியில் உள்ள மலனாகா கிராமம் அருகே முக்கிய பாலம் ஒன்று உள்ளது. ஆற்றை கடந்து செல்லும் அளவில் கட்டப்பட்டுள்ள இந்த பாலத்தில் எப்போதும் வாகனங்கள் பிசியாக சென்று கொண்டிருக்கும். இந்த நிலையில் நேற்று காலை பிசியான இந்த பாலத்தில் கார் உள்பட ஒருசில வாகனங்கள் சென்று கொண்டிருந்தபோது திடீரென பாலம் இடிந்து விழுந்தது.

இதனையடுத்து பாலத்தில் சென்றுகொண்டிருந்த கார்கள் நிலைதடுமாறி விழுந்து அதில் சென்று கொண்டிருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். இதனால் கார்களில் இருந்தவர்கள் படுகாயமடைந்ததாகவும், அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மலனாகா கிராமத்தினர் உடனடியாக மீட்புப்படையினர்களுக்கு தகவல் அளித்து அவர்கள் வரும் வரை காத்திருக்காமல் உடனடியாக செயல்பட்டு, காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

குஜராத் மாநிலத்தில் சமீபத்தில் கனமழை காரணமாக இந்த பாலம் சேதமடைந்து இடிந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது. இந்த பாலம் இடிந்து விழுந்ததன் காரணமாக ஜுனாகத்தில் இருந்து முண்ட்ரா செல்லும் சாலையில் போக்குவரத்து தடைபட்டுள்ளது. பாலத்தை சரிசெய்து போக்குவரத்தை சீர்செய்ய பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை தீவிரமுயற்சி எடுத்து வருகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்