விமானங்கள் பறக்க தடை;மாமல்லபுரத்தில் புத்தர் சிலை - சீன அதிபர் வருகையையொட்டி அதிரடி ஏற்பாடுகள்!

Webdunia
திங்கள், 7 அக்டோபர் 2019 (10:47 IST)
சீன அதிபரும் பிரதமர் மோடியும் 11ம் தேதி மாமல்லபுரத்தில் சந்திக்க இருப்பதால் அதற்கான ஏற்பாடுகள் வேகமாக நடந்து வருகின்றன.

இந்தியா – சீனா உறவுநிலைகள் குறித்து பேச சீன அதிபர் ஜின்பிங்கும். இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்துக்கு வருகை புரிகிறார்கள். இதனையொட்டி அந்த பகுதியில் பலவிதமான நிகழ்ச்சி ஏற்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

சீன அதிபரின் வருகையை முன்னிட்டு ஏற்கனவே சீன பாதுகாப்பு அதிகாரிகள் சென்னைக்கு வந்துவிட்டனர். அவர்கள் சீன அதிபர் தரையிறங்கும் மீனம்பாக்கம் விமான நிலையம், பயணம் செய்யும் சாலை, சுற்றி பார்க்க போகும் இடங்கள் ஆகியவற்றின் பாதுகாப்பு அம்சங்களை சோதனை செய்து வருகிறார்கள். அவர்களோடு சென்னை போலீஸும், மத்திய பாதுகாப்புத்துறை அதிகாரிகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சீன அதிபர் தங்கபோகும் ஹோட்டல் மற்றும் சுற்றுப்பகுதிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. சீன அதிபர் பயணம் செய்வதற்கான கார் மற்றும் மற்ற உபகரணங்கள் விமானம் மூலம் வந்துக்கொண்டிருக்கின்றன. சீன அதிபர் விமான நிலையம் வரும் சமயம் அந்த பகுதிகளில் அனைத்து விமானங்களும் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளன. சென்னை – மாமல்லபுரம் சாலையிலும் அதிபர் பயணிக்கும் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

இதுமட்டுமல்லாமல் சீன அதிபர் மாமல்லபுரம் சிற்பங்கள் முதலியவற்றை சுற்றிபார்க்க இருப்பதால் அவை புணரமைக்கப்பட்டு வருகின்றன. அதனால் சீன அதிபட்ர் பயணம் முடியும் வரை மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் மகாபலிபுரம் சுற்றுலா பகுதிகளில் சில இடங்களில் புத்தர் சிலையும் அமைக்கப்பட்டு வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்