இஸ்ரோவின் மூத்த விஞ்ஞானி மர்ம மரணம்: கொலையா? என விசாரணை

Webdunia
புதன், 2 அக்டோபர் 2019 (21:59 IST)
இஸ்ரோ நிறுவனத்தின் துணை அமைப்பான தேசிய தொலைநிலை மையம் ஐதராபாத்தில் இயங்கி வருகிறது. இதில் மூத்த விஞ்ஞானியாக பணிபுரிந்து வரும் 56 வயது சுரேஷ்குமார் இன்று மர்மமான முறையில் மரணம் அடைந்தார். அவரது உடலில் படுகாயம் இருப்பதால் அவர் பயங்கர ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

விஞ்ஞானி சுரேஷ்குமாரின் மனைவி சென்னையில் உள்ள வங்கியில் பணிபுரிவதால் சென்னையில் அவர் தங்கியிருந்து ஐதராபாத்துக்கு வாரம் ஒருமுறை வருவார். இந்த நிலையில் சுரேஷ் குமார் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தனியாக வசித்து வந்த நிலையில் நேற்று முதல் அவரது வீடு பூட்டியிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக போலீசுக்கும் அவரது மனைவிக்கும் தகவல் அளித்தனர்.

போலீசார் விரைந்து வந்து சுரேஷ்குமாரின் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றபோது அறையில் சுரேஷ் குமார் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரது தலையின் பின்பகுதியில் 3 இடங்களில் காயங்கள் இருந்தது. இதனால் அவரது சாவில் சந்தேகம் இருப்பதை உணர்ந்த போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சுரேஷ்குமார் தனியாக இருப்பதை அறிந்து கொள்ளை முயற்சியால் மர்ம நபர்கள் அவரை கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை சேகரித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்