ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவு – சேவை வரியை குறைத்தது ஐஆர்சிடிசி

Webdunia
புதன், 4 செப்டம்பர் 2019 (20:26 IST)
ஆன்லைன் டிக்கெட் முன்பதிவிற்கு சேவை வரி வசூலிப்பதாக அறிவித்திருந்த ஐஆர்சிடிசி தற்போது சேவை வரி கட்டணத்தை குறைத்து கொண்டுள்ளது.

ரயிலில் பயணம் செய்பவர்கள் முதலில் ரயில் நிலையங்களுக்கு சென்று முன்பதிவு செய்து கொண்டிருந்த நிலை டிஜிட்டல் யுகத்தில் மாறியது. ஐஆர்சிடிசி யின் மொபைல் செயலியிலோ அல்லது இணைய தளத்திலோ சென்றால் எளிய முறையில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். 2015 – 16 ஆண்டில் டிக்கெட் முன்பதிவுக்கு ஏசி இல்லாத வகுப்புகளுக்கு நபர் ஒன்றிற்கு 20 ரூபாயும், ஏசி வகுப்புகளுக்கு நபர் ஒன்றுக்கு 40 ரூபாயும் வசூலிக்கப்பட்டு வந்தது.

மத்திய அரசின் டிஜிட்டல் பணபரிவர்த்தனை நடைமுறைப்படுத்தப்பட்டபோது மக்களை டிஜிட்டல் பணபரிவர்த்தனைக்கு ஊக்கப்படுத்துவதற்காக சேவை கட்டணத்தை ரத்து செய்தது ஐஆர்சிடிசி. கடந்த மூன்று ஆண்டுகளாக சேவை கட்டணமின்றி தனது டிக்கெட் முன்பதிவு சேவையை வழங்கி வருகிறது ஐஆர்சிடிசி. இந்நிலையில் மீண்டும் சேவை கட்டணத்தை தொடங்குவதாக அறிவித்தனர்.

செப்டம்பர் 1 தொடங்கி நான்கு நாட்களாக ஏசி இல்லாத வகுப்புகளுக்கான டிக்கெட் முன்பதிவிற்கு நபர் ஒன்றிற்கு 15 ரூபாயும், ஏசி வகுப்புகளுக்கு நபர் ஒன்றிற்கு 30 ரூபாயும் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த சேவைக்கட்டணம் அதிகமாக இருப்பதாக பயணிகள் புகார் அளித்தனர். இதை கருத்தில் கொண்டு தற்போது ஏசி இல்லாத வகுப்புகளுக்கு நபர் ஒன்றிற்கு 10 ரூபாயும், ஏசி வகுப்புகளுக்கு நபர் ஒன்றிற்கு 20 ரூபாயும் சேவைக் கட்டணமாக வசூலிக்கப்படும் என ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது.

மேலும் முதியவர்கள் மற்றும் ஊனமுற்றவர்களுக்கு ரயில்வே துறையால் வழங்கப்படும் டிக்கெட் விலை தளர்வுகள் வழக்கம்போல தொடரும் என்றும் அறிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்