ஹைதராபாத் கிரிக்கெட் வீரர் விரேந்திர நாயக் விளையாடிக் கொண்டிருந்த மைதானத்திலேயே இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்தில் உள்ள மெஹதிபட்டினம் பகுதியில் வசித்து வருபவர் விரேந்திர நாயக். தனியார் வங்கியில் பணிபுரியும் இவருக்கு மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். ஆரம்பம் முதலே கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்ட விரேந்திர நாயக் மரேட்பள்ளி கிரிக்கெட் சங்கத்தில் இணைந்து பல ஆண்டுகளாக விளையாடி வருகிறார்.
நேற்று மரேட்பள்ளி ப்ளூஸ் என்ற அணிக்கு எதிராக விரேந்திர நாயக் விளையாடினார். மிகவும் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய விரேந்திர நாயக் அரை சதம் வீழ்த்தி சாதனை புரிந்ததுடன் 66 ரன்களை சேர்த்து சதம் நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தார்.
நல்லபடியாக விளையாடிக் கொண்டிருந்தவர் திடீரென மைதானத்திலேயே மயங்கி விழுந்தார். உடனடியாக மைதானத்தில் இருந்த மருத்துவர் அவரை பரிசோதித்து, நாடித்துடிப்பு குறைந்து வருவதாகவும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் எனவும் கூறியிருக்கிறார்.
உடனடியாக அருகில் உள்ள யசோதா மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் அவரது நண்பர்களையும், உறவினர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இதுகுறித்து பேசிய அவரது நண்பரும், அணி கேப்டனுமான திருபித் சிங் ”இன்றைய ஆட்டம் கொஞ்சம் கடினமானதாக இருக்கலாம். நாம் இன்று இரு சதம் கண்டிப்பாக அடிப்பேன் என்று விரேந்திர நாயக் சொன்னார். எப்போதும் முதலாவதாக களம் இறங்குபவர் இன்று மூன்றாவதாகதான் இறங்கினார். அவர் இப்படி திடீரென இறந்து விட்டதை எங்களால் நம்பவே முடியவில்லை” என்று கூறியுள்ளார்.
திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் விரேந்திர நாயக் இறந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.