தலைநகரில் தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்..! மத்திய அரசு இன்று 4ம் கட்ட பேச்சுவார்த்தை..!!

Senthil Velan
ஞாயிறு, 18 பிப்ரவரி 2024 (10:39 IST)
டெல்லி எல்லையில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் ஆறாவது நாளாக நீட்டித்து வரும் நிலையில், விவசாய சங்கங்களுடன் நான்காம் கட்ட பேச்சு வார்த்தையில் மத்திய அரசு இன்று ஈடுபடுகிறது.
 
வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலையை உறுதி செய்வது தொடர்பாக அவசர சட்டம் கொண்டு வரப்பட வேண்டும், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி சலோ என்ற பெயரில் தலைநகரை நோக்கி, கடந்த 13ம் தேதி விவசாயிகள் பேரணியாக சென்றனர்*
 
தொடர்ந்து முள்வேலிகள், கண்ணீர் புகைக்குண்டுகள், ஆணிகள், சாலைத்தடுப்புகள் உள்ளிட்டவைகளை பயன்படுத்தி போலீசார் தடுத்ததில், விவசாயிகள் எல்லைகளிலேயே தடுத்து வைக்கப்பட்டனர். 
 
தொடர்ந்து கண்ணீர் புகைக்குண்டுகளை பயன்படுத்தியதால் 3 விவசாயிகள் பார்வை இழந்ததோடு, ஒருவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
 
முன்னதாக மத்திய அமைச்சர்களுடன் விவசாயிகள் நடத்திய 3 கட்டப் பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டப்படவில்லை எனக்கூறி விவசாயிகள் தீவிரப் போராட்டத்தை முன்னெடுப்பதாக அறிவித்தனர். 
 
இந்நிலையில் விவசாயிகளுடன், மத்திய அமைச்சர்கள் அர்ஜூன் முண்டா, பியூஷ் கோயல், நித்யானந்த் ராய் ஆகியோர் இன்று 4ம் கட்டப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றனர். தொடர்ந்து டெல்லி எல்லைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதோடு, ஹரியானாவில் இணைய சேவை தடை 19ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்