என் கட்சியில் வந்து சேர்ந்து கொள்ளுங்கள்- தெலுங்கு தேச எம்.எல்.ஏக்களுக்கு ஜெகன் மோகன் நேரடி அழைப்பு

Webdunia
வெள்ளி, 14 ஜூன் 2019 (16:24 IST)
”தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏக்கள் உங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு என்னோடு வந்து சேர்ந்து கொள்ளுங்கள்” என சட்டபேரவையில் ஜெகன் மோகன் ரெட்டி நேரடியாக அழைப்பு விடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அமோக வெற்றிபெற்றது. இதையடுத்து அக்கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராக பதவியேற்று கொண்டார். இன்று கூட்டப்பட்ட சட்டமன்ற கூட்ட தொடரில் சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸை சேர்ந்த தம்மிநேனி சீதாராம் அனைவராலும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதற்கு பிறகு பேசிய ஜெகன் மோகன் ரெட்டி “தம்மிநேனி சீதாராம் 6 முறை எம்.எல்.ஏவாக பணியாற்றியவர். பல துறைகளில் அமைச்சராக சிறப்பாக பணியாற்றியிருக்கிறார். அவர் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது.

கடந்த 2014 தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் வெற்றிபெற்று 67 எம்.எல்.ஏக்களோடு சட்டசபை வந்தது. அதில் 23 பேரை விலைகொடுத்து வாங்கி ஆளுங்கட்சி இருக்கையில் அமர வைத்து அமைச்சர் பதவிகளையும் வழங்கியது. இந்த சட்டத்திற்கு புறம்பாக கட்சி மாறியவர்களை தகுதி நீக்கம் செய்ய சொல்லி விடுத்த கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. ஆனால் இப்போது தேர்தலில் அதே 23 எம்.எல்.ஏக்களை மட்டுமே கடவுள் அந்த கட்சிக்கு வழங்கியுள்ளார்.

எங்கள் கட்சியினர் என்னிடம் சொன்னார்கள் எதிர்கட்சியிலிருந்து 5 பேர் நமது கட்சியில் இணைந்துவிட்டால் தெலுங்கு தேசம் கட்சிக்கு எதிர்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காது என்று. ஆனால் அவர்களை போல நானும் அந்த தவறை செய்ய மாட்டேன். யாராவது எங்கள் கட்சியில் இணைவதாய் இருந்தால் உங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு வரலாம். அதையும் மீறி வந்தால் சபாநாயகர் அவர்களை தகுதி நீக்கம் செய்வார்” என பேசியுள்ளார்.

ஜெகன் மோகன் இவ்வளவு பேசியதையும் சந்திரபாபு நாயுடு அமைதியாக கேட்டுக்கொண்டு அமர்ந்திருந்தார். பிறகு பேசிய அவர் “நான் ஏற்கனவே மூன்று முறை எதிர்கட்சி தலைவராக இருந்துள்ளேன். எனவே, எதையும் சந்திக்க தயாராகவே இருக்கிறேன்.” என்று கூறியுள்ளார்.

சட்டசபையில் அனைவரின் மத்தியிலும் சந்திரபாபு நாயுடுவை நேரடியாக ஜெகன் மோகன் ரெட்டி தாக்கி பேசியது ஆந்திர சட்டசபையையே அதிர வைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்