உலக நாடுகள் தொடவே முடியாத இடத்தில் இந்தியா – சந்திராயன் 2

வியாழன், 13 ஜூன் 2019 (19:13 IST)
விண்வெளி ஆராய்ச்சியில் மிகப்பெரும் திருப்புமுனையாக கருதப்படும் சந்திராயன் 2 விண்கலம் ஜூலை 15 அன்று நிலவுக்கு தன் பயணத்தை தொடங்க உள்ளது. இதுவரை உலக நாடுகள் எவ்வளவோ நிலவை குறித்து ஆராய்ச்சி செய்திருக்கின்றன. ஆனால் சந்திராயன் 2 எப்படி அதிலிருந்து வித்தியாசப்படுகிறது. சந்திராயன் 2ல் என்னென்ன தொழில்நுட்ப வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

சந்திராயனில் மூன்று முக்கியமான கருவிகள் நிலவுக்கு பயணிக்கின்றன. முதலாவது ரோவர் என்னும் வாகனம். கேமரா பொருத்தப்பட்ட இந்த வாகனமானது சிறிய ரக பீரங்கி போல இருக்கும். இது நிலவின் பல பகுதிகளுக்கும் பயணிந்து அங்குள்ள காட்சிகளை படம் பிடிப்பதோடு, அங்குள்ள தனிமங்கள், கற்கள் ஆகியவற்றின் மாதிரிகளையும் சேகரிக்கும்.

இரண்டாவது லேண்டர் என்னும் தரையிறங்கும் கருவி. இது வெறுமனே தரையிறங்கும் கருவி மட்டுமல்ல ஒரு சிறிய ஆய்வகத்திற்கு நிகரானது. இதற்குள் அமர்ந்தபடிதான் ரோவர் பயணிக்கும். சூரிய சக்தியால் இயங்கும் லேண்டரானது ரோவர் அனுப்பும் புகைப்படங்களையும், தனிம மாதிரிகளையும் தானியங்கி கணினியில் சேமித்து வைத்துக்கொள்ளும். மேலும் நிலவின் எந்தெந்த பகுதிகளில் நில அதிர்வுகள் ஏற்படுகின்றன என்பதையும் குறித்து கொண்டு அந்த பக்கமாக ரோவர் பயணித்தால் அதற்கு எச்சரிக்கை அனுப்பும்.

மூன்றாவது ஆர்பிட்டர். சூரிய தகடுகளால் பயணிக்கும் இது ஒரு மினி செயற்கைக்கோளாக செயல்படும். லேண்டரில் உள்ள கம்ப்யூட்டரில் பதிவான பதிவுகளை இதன் மூலமாகதான் பூமியில் உள்ள விஞ்ஞானிகள் பெற முடியும்.

இப்படியாகதான் இந்திய விஞ்ஞானிகள் நிலவை ஆய்வு செய்யப்போகிறார்கள். ஆனால் அவர்கள் நிலவில் ஆய்வு செய்யப்போகும் பகுதி இதுவரை உலக நாடுகளில் யாருமே இறங்காத பகுதி. இந்த பகுதியில் தங்கள் எந்திரங்களை ஆய்வுக்காக நிலைநிறுத்த இஸ்ரேல் முயற்சித்த போது விண்கலம் விபத்துக்குள்ளானது. ஆம் தென் துருவத்தில் நிலவின் இருண்ட பக்கத்திற்கு அருகில்தான் சந்திராயன் 2ஐ ஆய்வுக்கு அனுப்புகிறார்கள். தென் பகுதியில் சூரிய ஒளி அபிரிமிதமாக கிடைப்பதால் எந்திரங்களால் அந்த சக்தியை மின்சாரமாக சேமித்து கொள்ள முடியும். மேலும் நிலவின் மனிதன் அறிந்திராத பகுதிகளில் ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டியது அவசியம் என இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.

ஜூலை 15 அன்று விண்ணில் பாயும் ஜிஎஸ்எல்வி 3 ரக ராக்கெட் சந்திராயன் 2 விண்கலனை தாங்கி செல்லும். புறப்பட்டு காற்று மண்டலத்தை தாண்டும் விண்கலம் எரிப்பொருள் கலனை விடுவித்து பூமியின் வட்டப்பாதயில் பயணித்தப்படியே நிலவை அடையும். இதற்கு 45 நாட்கள் ஆகும். தோராயமாக செப்டம்பர் மாதம் 6 அல்லது 7 ஆம் தேதி நிலவின் தென் பகுதியில் விண்கலம் தரையிறங்கி செயல்பட தொடங்கும்.

இந்த திட்டத்துக்காக ஒட்டுமொத்தமாக 600 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது. நிலவின் மனிதன் வாழ முடியுமா? என்ற கேள்விக்கு பல்வேறு விஞ்ஞானிகளும் விடை தேடிவரும் நிலையில், இந்தியாவின் இந்த முயற்சி அதற்கான சாத்தியங்களுக்கு மேலும் ஒரு முன் நகர்வாக இருக்கும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்