மாயமான விமானத்தில் பயணித்த எவரும் உயிருடன் இல்லை:இந்திய விமானப்படை அறிவிப்பு

வியாழன், 13 ஜூன் 2019 (13:44 IST)
இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏ.என்.32 ரக சரக்கு விமானம், கடந்த ஜூன் 3 ஆம் தேதி காணாமல் போன நிலையில், தற்போது அதில் பயணித்த எவரும் உயிருடன் இல்லை என இந்திய விமானப்படை அறிவித்துள்ளது.


கடந்த ஜூன் 3 ஆம் தேதியன்று, ஏ.என்.32 ரக சரக்கு விமானம் 13 பேருடன் அஸ்ஸாமின் ஜோர்ஹட் தளத்திலிருந்து அருணாச்சலப் பிரதேசத்திற்கு புறப்பட்டது.

ஆனால் விமானம், புறப்பட்ட 30 நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. இதனையடுத்து விமானத்தை தேடும் பணிகள் தொடங்கப்பட்டன.

விமானப் படை வீரர்கள், மலையேற்ற வீரர்களைக் கொண்டு தேடுதல் பணிகளை மேற்கொண்டனர்.

இந்த தேடுதல் வேட்டையை தொடர்ந்து அருணாச்சலப் பிரதேசத்தின் மலைப் பகுதிகளில் ஏ.என்.32 விமானத்தின் சிதைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

விமானத்தின் பாகங்கள் இருந்ததே தவிர அதில் பயணித்த 13 பேரை குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் இன்று காலையிலும் மலைப்பகுதிகளில் 13 பேரில் எவரேனும் உள்ளனரா என்று தேடப்பட்டதாகத் தெரிகிறது.

இதனையடுத்து தற்போது அந்த 13 பேரில் எவரும் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை என இந்திய விமானப் படை அறிவித்துள்ளது.

இச்செய்தி விமானப்படை அதிகாரிகளுக்கும் வீரர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்