பங்களாவை ஜூலை இறுதிக்குள் காலி செய்யணும்! – பிரியங்கா காந்திக்கு மத்திய அரசு நோட்டீஸ்!

Webdunia
வியாழன், 2 ஜூலை 2020 (08:45 IST)
காங்கிரஸ் பிரமுகர் பிரியங்கா காந்திக்கு வழங்கப்பட்டுள்ள அரசு பங்களாவை காலி செய்ய சொல்லி மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து அவரது குடும்பத்தினருக்கு எஸ்.பி.ஜி பாதுகாப்பு வழங்கப்பட்ட நிலையில், பாதுகாப்பிற்காக புதுடெல்லியில் உள்ள லோதி எஸ்டேட் பகுதியில் அவருக்கு அரசு பங்களாவும் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சமீபத்தில் பிரியங்கா காந்திக்கு வழங்கப்பட்டு வந்த எஸ்பிஜி பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டு இசட் ப்ளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

அவரது உயிருக்கு அச்சுறுத்தல் தற்போது இல்லை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிலையில் 1997 முதல் பிரியங்கா காந்தி வசித்து வரும் லோதி எஸ்டேட் பங்களாவையும் காலி செய்ய மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் முன்னர் வழங்கப்பட்ட எஸ்பிஜி பாதுகாப்பின் அடிப்படையிலேயே அரசு மாளிகை வழங்கப்பட்டதாகவும், தற்போது வழங்கப்பட்டுள்ள இசட் ப்ளஸ் பாதுகாப்பிற்கு தற்போது ஒதுக்கப்பட்டிருக்கும் மாளிகை பொருந்தாது என்பதால் ஆகஸ்டு 1ம் தேதிக்குள் பங்களாவை விட்டு வெளியேறும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த நோட்டீஸ் விவகாரத்திற்கு காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்