பிரதமர் மோடியை 29 பைசா பிரதமர் என்று அழைத்தால், உதயநிதி ஸ்டாலினை கஞ்சா உதயநிதி என்று அழைப்போம் என்று அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.
திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வரும் உதயநிதி ஸ்டாலின், பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து வருகிறார். தமிழ்நாடு அரசு ஒரு ரூபாய் வரி செலுத்தினால் அதற்கு பதிலாக மத்திய அரசு 29 பைசா மட்டுமே திரும்ப தருவதாக தொடர்ந்து அவர் குற்றம்சாட்டி வருகிறார். இதனால் பிரதமரை 29 பைசா பிரதமர் எனவும் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்து வருகிறார்.
இந்நிலையில் உதயநிதி இந்த பேச்சுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். திருப்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தத்தை ஆதரித்து, ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில் அண்ணாமலை பரப்புரையில் ஈடுபட்டார்.
அபபோது பேசிய அண்ணாமலை, பிரதமர் நரேந்திர மோடியை அமைச்சர் உதயநிதி 29 பைசா பிரதமர் என தொடர்ந்து விமர்சித்து வருகிறார். அப்படி அவர் இனியும் விமர்சித்தால் அவரை கஞ்சா உதயநிதி என நாங்கள் அழைப்போம் என்று தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் போதை பொருள் புழக்கம் அதிகரித்து விட்டது என்றும் இதைத் தடுக்க மாநில அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அண்ணாமலை குற்றம் சாட்டினார்.