650 ரூபாய் கட்டணம்.. ஆனால் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை.. கலைஞர் பூங்கா குறித்து ஈபிஎஸ்..!

Siva
ஞாயிறு, 13 அக்டோபர் 2024 (07:15 IST)
சமீபத்தில் திறக்கப்பட்ட கலைஞர் பூங்காவில்  உள்ள ஜிப்லைன் பழுதடைந்து,  இரு பெண்கள் சிக்கிய, அந்தரத்தில் இருந்து, பின் கயிறு மூலம் கீழிறக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில் இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

முதல்வர், தனது தந்தை கருணாநிதி பெயரில் சென்னையில் பூங்கா திறந்த வெறும் ஐந்தே நாட்களில், பூங்காவில் உள்ள ஜிப்லைன் (Zipline) பழுதடைந்து, அதில் பயணித்த இரு பெண்கள் 20 நிமிடங்கள் சிக்கி, அந்தரத்திலேயே இருந்து, பின் கயிறு மூலமாக கீழிறக்கப்பட்டதாக செய்திகள் வருகின்றன.

அரசு பூங்கா; புதிதாக திறக்கப்பட்டுள்ளது என்பதை நம்பி வரும் மக்களின் உயிரோடு, கலெக்ஷன், கரப்ஷன், கமிஷன் மட்டுமே கொள்கையாகக் கொண்ட தி.மு.க., அரசு, பாதுகாப்பற்ற உபகரணங்கள் கொண்டு விளையாடுவது கடும் கண்டனத்திற்குரியது.

கருணாநிதி பெயரிலான இந்த பூங்காவிற்குள் நுழையவே நூறு ரூபாய் கட்ட வேண்டுமாம். அது போக, ஜிப்லைனுக்கு 250 ரூபாய் என அதில் உள்ள வசதி ஒவ்வொன்றிற்கும் தனி கட்டணம் வசூல் செய்கிறது தி.மு.க., அரசு. இந்த பூங்காவை முழுவதும் சுற்றிப்பார்க்க 650 ரூபாய் ஆகிறது. தனியார் பொழுதுபோக்கு பூங்காக்கள் வசூலிக்கும் கட்டணத்திற்கு இணையாக இந்த கருணாநிதி பூங்காவிற்கு வசூலிக்கிறது தி.மு.க., அரசு. பூங்காவிற்கு வருகை புரியும் மக்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என தி.மு.க., முதல்வரை வலியுறுத்துகிறேன்,

இவ்வாறு அதிமுக பொதுச்செயலாளர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்