அதிமுக அமைப்பு செயலாளர் மீது சொத்து குவிப்பு வழக்கு!

J.Durai

வெள்ளி, 11 அக்டோபர் 2024 (08:31 IST)
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகாவிற்குட்பட்ட மதுக்கூர் ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்தவர் துரை செந்தில். 1999 ஆம் ஆண்டு வரை மதிமுக உறுப்பினராக இருந்தவர் பின்னர் மகாதேவனின் ஆசியால் அதிமுகவில் இணைந்தார். 2001 ஆம் ஆண்டு வைத்தியலிங்கம் அமைச்சரானவுடன்,  ஜாதி ரீதியாக அவருடன் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு, 2004 ஆம் ஆண்டு மதுக்கூர் ஒன்றிய செயலாளர் ஆனார். பின்னர் 2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி அமைந்த பிறகு நடந்த உள்ளாட்சி தேர்தலின் மூலம் தனது மனைவி அமுதாவை மதுக்கூர் ஒன்றிய பெருந்தலைவர் ஆக்கினார்.
 
தமிழ்நாடு அரசு விதிகளின்படி ஒன்றிய பெருந்தலைவர் அரசு ஊழியராக கருதப்படுவார். அரசு ஊழியர்களுக்கான நன்னடத்தை விதிகள் உள்ளாட்சி பதவிகளில்    இருப்பவர்களுக்கும் பொருந்தும் என்பதால் ஒன்றிய பெருந்தலைவரோ அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களோ அவர்களின் பெயரில் சொத்துக்கள் வாங்குவதற்கு முன்பு தமிழக அரசிடம் உரிய அனுமதி வாங்குவதோடு, குறிப்பிட்ட சொத்தை வாங்குவதற்குண்டான வருமானம் எப்படி வந்தது என்பதையும் ஆதாரத்துடன் சமர்ப்பித்து அனுமதி பெற வேண்டும். ஆனால் தமிழக அரசிடம் அனுமதி பெறாமல் துரை.செந்தில் பல நூறு கோடிகளுக்கு சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார். அவரது பெயரிலும், குடும்பத்தினர் பெயரிலும் உள்ள சொத்துக்கள் அனைத்தும் 2012 ஆம் ஆண்டுக்கு பிறகு வாங்கப்பட்டுள்ளன.
 
இவருடைய சொத்து பட்டியலை சேகரித்துள்ள ஊழலுக்கு எதிரான மக்கள் இயக்கம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் அனைத்து ஆவணங்களையும் திரட்டியுள்ளது. உள்ளாட்சி தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்யும்போது, சொத்து விபரங்களை குறிப்பிட வேண்டும்.  துரை.செந்தில் 2006 ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டபோது குறிப்பிட்டுள்ள சொத்து விவரங்களுக்கும் 2019 ஆம் ஆண்டு அமுதா துரை.செந்தில் போட்டியிட்டபோது                         வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ள சொத்து விபரங்களுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன
 
தனக்கு பரம்பரை சொத்துக்கள் ஏதுமில்லை என்று வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ள துரை.செந்தில் பலநூறு கோடிகளுக்கான சொத்து வாங்குவதற்கான வருமானம் எங்கிருந்து வந்தது என்பதை தமிழக அரசிடம் தெரிவிக்காமலேயே சொத்துக்களை வாங்கியுள்ளார்                             தற்போது அனைத்து விபரங்களையும் சேகரித்து வைத்துள்ள ஊழலுக்கு எதிரான மக்கள் இயக்கம் சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்பு துறையின் தலைமை அலுவலகத்தில் புகார் கொடுத்து, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கை பதிவதற்கான வேலைகளில் இறங்கி உள்ளது.
 
இதன் மூலம் துரை.செந்திலின் சொத்துக்கள் தமிழக அரசால் பறிமுதல் செய்யப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. துரை.செந்திலால் வாங்கப்பட்டு பின்னர் வேறொருவருக்கு  அந்த சொத்து விற்கப்பட்டிருந்தால், அந்த சொத்துகளும் தமிழக அரசால் முடக்கப்படும் என்பதால் துரை.செந்திலிடம் சொத்துக்கள் வாங்கியவர்களும் கலக்கத்தில் உள்ளனர்.                    வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் ஜெவின் தோழியான சசிகலா நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார். அவருடைய சொத்துகளும் அரசால் முடக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 


வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்