கடந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கே கே ஆர் அணி. ஆனாலும் அவர் அணிக்குப் பெரிதாக பங்களிக்கவில்லை என்பது பலரும் அறிந்தது. அதனால்தான் அதன் பின்னர் கடந்த ஆண்டு நடந்த மெஹா ஏலத்தில் அவரை அணி நிர்வாகம் தக்கவைக்கவில்லை. இதனால் இந்த ஆண்டு அந்த அணியின் கேப்டன் பொறுப்பை யார் ஏற்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ள அந்த அணியின் வெங்கடேஷ் ஐயர் கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டால் அதை ஏற்கத் தயார் எனக் கூறியுள்ளார். மேலும் “கேப்டன் என்பது வெறும் பட்டம் மட்டுமே. அதைவிடத் தலைமைப் பண்பில்தான் எனக்கு நம்பிக்கை உள்ளது. கேப்டனாக இருப்பதை விட அணியில் தலைவனாக இருப்பதே பெரிய விஷயம். தலைவனாக இருப்பதற்குக் கேப்டன் பட்டம் தேவையில்லை” எனக் கூறியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் மூலம் கவனம் பெற்ற வெங்கடேஷ் ஐயர் இந்திய அணியில் இடம்பிடித்தார். ஆனால் இந்திய அணியில் அவரால் சிறப்பாக செயல்பட முடியவில்லை. அதனால் இப்போது ஐபிஎல் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்ந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும் சமீபத்தில் நடந்த ஏலத்தில் 23.75 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.