திடீரென சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அஸ்வின் அளித்தது அவரைத் தவிர மற்ற எல்லோருக்கும் அதிர்ச்சிதான். ஆனாலும் அஸ்வின் தனக்கு அதில் வருத்தம் இல்லை என ஜாலியாகப் பேசி வருகிறார். சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டாலும் தொடர்ந்து உள்ளூர் போட்டிகள் மற்றும் ஐபிஎல் ஆகியவற்றில் விளையாடுவேன் என அவர் கூறியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் அவரின் தாய் அணியான சி எஸ் கேவுக்கு 10 ஆண்டுகள் கழித்து திரும்பியுள்ளார். இந்நிலையில் தான் சி எஸ் கே அணிக்குத் திரும்பியதும் தோனி அனுப்பிய மெஸேஜ் குறித்து அஸ்வின் சமீபத்தில் பகிர்ந்துள்ளார். அதில் “மீண்டும் நீங்கள் சி எஸ் கே அணிக்குத் திரும்பியதில் மகிழ்ச்சி. உங்களோடு இணைந்து நிறைய நினைவுகளை உருவாக்க காத்திருக்கிறோம்” என அனுப்பியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக சென்னை அணிக்குத் திரும்பியது குறித்து அஸ்வின் “வாழ்க்கை ஒரு வட்டம் என்று சொல்வார்கள். நான் சென்னை அணிக்காக 2008 முதல் 2015 வரை விளையாடியதுதான் எனது சர்வதேசக் கிரிக்கெட் வாழ்க்கைக்கு உதவியது. 2011 ஆம் ஆண்டு ஏலத்தில் என்னை எடுக்க சிஎஸ்கே நிர்வாகம் போட்டி போட்டது போல, இப்போதும் செயல்பட்டுள்ளது மகிழ்ச்சியை அளித்துள்ளது. 10 வருடங்களுக்குப் பிறகு சென்னை அணிக்காக விளையாடுவது மகிழ்ச்சியாக உள்ளது. தோனி மற்றும் ருத்துராஜ் ஆகியோருடன் விளையாடக் காத்திருக்கிறேன்” எனக மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார்.