இப்படி சொதப்பினா எப்படி டெஸ்ட் சாம்பியன்ஷிப்..? – என்னதான் ஆச்சு ஹிட் மேனுக்கு?

Webdunia
புதன், 10 மே 2023 (08:44 IST)
இந்திய கிரிக்கெட் வீரரும், அணி கேப்டனுமான ரோஹித் சர்மாவின் ஐபிஎல் ஆட்டங்கள் ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகின்றன.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருப்பவர் ரோஹித் ஷர்மா. அதிரடி ஆட்டங்களை வெளிப்படுத்தாவிட்டாலும், தேவையான இடத்தில் தடாலடி செய்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்பவர். ரசிகர்கள் இவரை செல்லமாக “ஹிட் மேன்” என்றே அழைக்கின்றனர். இந்த ஆண்டில் நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணி கேப்டனாக ரோஹித் சர்மா அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஆனால் தற்போது நடந்து வரும் ஐபிஎல் போட்டிகளில் ரோகித் சர்மாவின் ஆட்டம் அதிர்ச்சியை அளிக்கும் வகையில் உள்ளது. ஒவ்வொரு லீக் போட்டியிலும் ஓப்பனிங் இறங்கும் ரோகித் சர்மா டக் அவுட்டாகி வெளியேறுகிறார் அல்லது 10 ரன்களை கூட தாண்டாமல் அவுட்டாகி விடுகிறார். இதன்மூலம் ஐபிஎல்லில் அதிகமுறை (16 தடவை) டக் அவுட்டான வீரர் என்ற பெயரையும் பெற்றுவிட்டார்.

இதற்கு முன் தொடர்ச்சியாக டக் அவுட் ஆன ரோகித் நேற்றைய ஆர்சிபிக்கு எதிரான போட்டியிலாவது இறங்கி அடித்து தன்னை நிரூபிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிலும் 10 ரன் கூட தொடாமல் அவுட் ஆகிவிட்டார்.

இதனால் ரோகித் ஷர்மா ஃபார்ம் அவுட்டாகிவிட்டாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. ஆனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை மனதில் கொண்டே ரோஹித் ஐபிஎல் ஆட்டங்களில் ஈடுபாடு காட்டுவதில்லை என்றும் அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். மும்பை இந்தியன்ஸ் அணியில் நட்சத்திர பேட்ஸ்மேன்கள் பலர் இருந்தாலும் கேப்டனாக ரோகித் செயல்பாடும் மிகவும் அவசியமானது. இந்நிலையில் அவர் தொடர்ந்து சொதப்பி வருவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் எந்த விதத்தில் பிரதிபலிக்குமோ என்ற கவலை கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி அடுத்த ஜூன் மாதம் 7 முதல் 11ம் தேதி வரை இங்கிலாந்து ஓவல் ஸ்டெடியத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்