ரஸ்ஸல அடிச்சா பயந்துடுவேனா.. திருப்பி அடித்த ரின்கு சிங்! – கதிகலங்கிய பஞ்சாப்!
செவ்வாய், 9 மே 2023 (08:33 IST)
நேற்று பஞ்சாப் – கொல்கத்தா அணிகள் இடையே நடந்த போட்டியில் கடைசி ஓவர்களில் ஆண்ட்ரே ரஸ்ஸல், ரின்கு சிங் காட்டிய அதிரடி பஞ்சாபை கதிகலங்க செய்தது.
ஐபிஎல் சீசனின் லீக் போட்டிகள் கிட்டத்தட்ட முடிவடைய உள்ள நிலையில் கடும் மோதல் நிலவி வருகிறது. நேற்று பஞ்சாப் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையே நடந்த மோதலும் பரபரப்புக்கு பஞ்சமின்றி போனது.
லீக் போட்டிகளில் முதல் மோதலில் பஞ்சாப் அணி கொல்கத்தாவை எளிதில் வீழ்த்தியிருந்ததால் இந்த தடவையும் தட்டி விட்டு விடுவார்கள் என்றே எதிர்பார்க்கப்பட்டது. டாஸ் வென்று பேட்டிங் எடுத்த பஞ்சாப் அணி 179 ரன்களை குவித்தது.
அடுத்து களமிறங்கிய கொல்கத்தாவின் ரன்களை பஞ்சாப் கட்டுப்படுத்த தொடங்கியது. ஜேசன் ராய் (38), நிதிஷ் ரானா (51) பெரிய ரன்களை ஈட்டி கொடுத்திருந்தாலும் 4 விக்கெட்டுகளை தாண்டி ஆட்டம் மிடில் ஆர்டரில் போய்க் கொண்டிருந்தது. அப்போதுதான் களமிறங்கினார் ஆண்ட்ரே ரஸ்ஸல்.
23 பந்துகளில் 3 சிக்ஸ் 3 பவுண்டரிகள் என ஆண்ட்ரே ரஸ்ஸல் வீழ்த்தவும் பஞ்சாபுக்கு டென்சன் எகிறயது. ஆண்ட்ரே ரஸ்ஸலை வீழ்த்துவதற்காக பஞ்சாப் சாம் கர்ரனை இறக்கியது. ஆனால் சாம் கரணின் பந்துகளை கபளீகரம் செய்த ரஸ்ஸல் அடித்து துவம்சம் செய்ய தொடங்கி விட்டார்.
“எப்பா அன்னைக்கு மும்பைக்கு ஸ்டம்ப்பை உடைச்சு விட்ட மாதிரி எதாவது பண்ணுப்பா” என அர்ஷ்தீப் சிங்கை கடைசி ஓவரில் இறக்கி விட்டனர். ஆனால் அவரது பந்திலும் பவுண்டரிதான். எப்படியோ 19.5வது பந்தில் ரன் எடுக்க ஓடியபோது ஜிதேஷ் சர்மா ஸ்டம்ப் அவுட் செய்து ரஸ்ஸலை வெளியேற்றினார்.
அப்பாடா.. ரஸ்ஸலை அனுப்பியாச்சு.. இன்னும் ஒரு பந்துதான்” என ஆறுதலடைந்த பஞ்சாப் அணி பேட்டிங்கில் நின்ற ரின்கு சிங்கை மறந்துவிட்டார்கள். கடைசி நேர அற்புதங்கள் செய்வதில் நாயகனான ரின்கு சிங் 1 பந்துக்கு 1 ரன் அடிக்க வேண்டிய நிலையில் ஒரு பவுண்டரியை தாக்கி பஞ்சாபை நிலைக்குலைய செய்தார்.
கடந்த சில ஐபிஎல் போட்டிகள் இறுதி கட்டங்கள் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் போய்க் கொண்டிருக்கின்றன. கடைசி ஒரு நோ பாலில் ராஜஸ்தான் ராயல்ஸை சன்ரைஸர்ஸ் துவம்சம் செய்தது போல, நேற்று கடைசி ஒரு பவுண்டரியில் பஞ்சாபை வீழ்த்தியுள்ளது கொல்கத்தா. இதுவரை சூப்பர் ஓவர் வராமல் இருப்பதால் இனி வரும் ஆட்டங்களில் அதுவும் வந்துவிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.