டிரம்பின் அடுத்த திட்டம்: அச்சத்தில் அமெரிக்கவாழ் தமிழர்கள்

Webdunia
வியாழன், 7 ஜனவரி 2021 (23:47 IST)
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளிவந்து புதிய அதிபராகவிருக்கும் ஜோ பைடனின் வெற்றியை அந்நாட்டு நாடாளுமன்றம் அங்கீகரித்துள்ள வேளையில், நாடாளுமன்ற கலவர சம்பவம் குறித்து அங்கு வாழும் இந்தியர்கள் தங்களின் உணர்வுகளை பிபிசியிடம் பகிர்ந்து கொண்டார்கள்.
 
வாஷிங்டன் பல்கலைக்கழக முன்னாள் டீன் ஆர்.சி.சரவணபவன், ”மக்கள் மாக்களாக வெகுநேரம் ஆகாது என்பதற்கு அமெரிக்க கேப்பிட்டலில் புதன்கிழமை நிகழ்ந்த காட்சிகளே சாட்சி. டிரம்ப் தனது அரசியல் ஆதாயத்திற்காக மக்களை உணர்ச்சிவயப்படுத்தி, பொய்களைப் புகுத்தி, மக்களாட்சியின் அடிப்படை நாகரிகத்தைப் படுகொலை செய்து விட்டார். குடியரசு கட்சியின் பெயரை முழுமையாக குலைத்துவிட்டார்,” என்கிறார்.
 
மக்களாட்சிக்கு எதிராகவும், பதவியேற்கவுள்ள புதிய அதிபர் மற்றும் அமைச்சரவைக்கு எதிராகவும் மக்களை டிரம்ப் தூண்டி விட்டதாகக் கூறுகிறார் சொர்ணம் சங்கரபாண்டி.
 
பட மூலாதாரம்,GETTY IMAGES
”அமெரிக்க வரலாற்றில் இதுபோல் மோசமான நிகழ்வுகள் நடந்ததில்லை. ஜனவரி மாதம் 20 ஆம் நாள் பதவி ஏற்கும் முன்பாக மீண்டும் பல்வேறு அசம்பாவிதமும், வன்முறையும் நடக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. குறிப்பாக சிறுபான்மை மக்களும், குடியேறிய மக்களும் அச்சத்துடன் நடக்கும் நிகழ்வுகளைக் கவனித்து வருகின்றனர். மேலும் இரண்டு வாரங்கள் காத்திராமல் டிரம்பை உடனடியாக வெளியேற்ற வேண்டுமென்றும் குரல்கள் வலுக்கின்றன," என்று அவர் கூறினார்.
 
"இந்த பிரச்னைகள் ஜனவரி 20 ஆம் தேதியோடு ஓய்ந்தாலும் அமெரிக்காவை இனவெறிப் பிளவு கொண்ட நாடாக அவர் மாற்றியுள்ளதால் தொடர்ந்து பல்வேறு குற்றங்கள் நடக்கலாம், அவர் அதைத் தூண்டிவிடுவார் என்று தமிழர்களாகிய நாங்கள் அஞ்சுகிறோம்,” என்று சொர்ணம் சங்கரபாண்டி கூறுகிறார்.
 
இவரது கருத்தையே அங்கு வாழும் மேலும் சில அமெரிக்கவாழ் இந்தியர்களும் பிரதிபலிக்கிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்