ஒரு எலி கூட விடாமல் அடியோடு ஒழித்துக் கட்ட தீவிரம் காட்டும் நாடு - ஏன் தெரியுமா?

Webdunia
புதன், 28 ஜூன் 2023 (10:57 IST)
நியூசிலாந்தில் அழகான மிராமர் தீபகற்பத்தில் வன உயிரின ஆர்வலர்கள் கூடியுள்ளனர். அவர்கள் எலிகளை அடியோடு அழித்தொழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 
மிராமர் என்ற இந்த திட்டம், நியூசிலாந்து தலைநகர் வெலிங்டனில் இந்த பகுதியில் உள்ள பறவைகளைக் காக்கும் பொருட்டு, ஒரு எலியைக் கூட உயிருடன் விடாமல் அழித்தொழிக்கும் திட்டமாகும்.
 
எலி வேட்டைக்கென பிரத்யேக ஜாக்கெட் அணிந்து கொண்டுள்ள தன்னார்வலர்களிடம் எலியை கவர்ந்திழுக்க நிலக்கடலை, வெண்ணெய் ஆகியவற்றுடன் அவற்றைக் கொல்ல விஷமும் கொடுக்கப்படுகிறது.
 
தனித்தனிக் குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ள தன்னார்வலர்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள பொறிகள், விஷம் தடவப்பட்ட இரை வைக்கப்பட்ட பெட்டிகளில் எலி சிக்கியுள்ளதா என்று சோதிப்பார்கள். அந்த குழுக்களை தலைமையேற்று வழிநடத்தும் டான் கூப், "அதிர்ஷ்டம் உடனிருக்கட்டும்" என்று குழுவினரை வழியனுப்புகிறார்.
 
புதர்களில் எங்கெல்லாம் பொறிகள், பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன என்பதை ஜி.பி.எஸ். அடிப்படையில் செயல்படும் மொபைல் அப்ளிகேஷன் அவருக்கு காட்டுகிறது. ஒவ்வொரு பொறியையும் பரிசோதித்து மீண்டும் வைத்த பிறகு, அந்த தகவலை அப்ளிகேஷனில் அவர் அப்டேட் செய்துவிடுகிறார். அவற்றில் ஒன்று கூட எலி வந்து சென்றதற்கான அறிகுறிகளைக் காட்டவில்லை.
அப்போது, அவரது குழு உறுப்பினர் ஒருவர் வாட்ஸ்அப் குழுவில், பொறியில் சிக்கி எலி இறந்ததை படத்துடன் பதிவிடுகிறார்.
 
"எலி கொல்லப்பட்ட படத்தை பதிவிட்ட டேவிற்கு வேண்டுமானால் அது நல்லதாக தெரியலாம். ஆனால், ஒட்டுமொத்த குழுவுக்கு அது கெட்ட செய்தி. ஏனென்றால், இங்கே இன்னும் எலிகள் இருப்பதை அது காட்டுகிறது" என்கிறார் கூப்.
 
எலியையும், மற்ற வேட்டை விலங்குகளையும் அழித்தொழிக்கும் இந்த திட்டம் மிராமர் பகுதியுடன் நின்றுவிடப் போவதில்லை. நியூசிலாந்து முழுவதுமே இது செயல்படுத்தப்பட போகிறது. 2050-ம் ஆண்டுக்குள் இந்தப் பணி நிறைவடையும் என்று நியூசிலாந்து அரசு எதிர்பார்க்கிறது.
 
இது மிகப்பெரிய பணி. ஏனெனில், தெற்கு அட்லாண்டிக்கில் 170 கி.மீ. நீளமே உள்ள தெற்கு ஜார்ஜியாதான் எலிகளை அறவே ஒழித்த மிகப்பெரிய நிலப்பரப்பு ஆகும். நியூசிலாந்தைச் சேர்ந்த வன உயிரின பாதுகாவலர்கள், பிரிட்டனைக் காட்டிலும் அதிக நிலப்பரப்பு கொண்ட நியூசிலாந்தில் அதனை சாதிக்க முடியும் என்று நினைக்கிறார்கள்.
 
இந்த திட்டத்தின் மிக முக்கியமான பகுதி அங்குள்ள தனித்தன்மை வாய்ந்த சூழலியலை பாதுகாப்பதே. 8.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பிருந்த மிகப்பெரிய கண்டத்தில் இருந்து நியூசிலாந்து நிலப்பகுதி தனியே பிரிந்தது. அந்தக் கால கட்டத்தில் பாலூட்டி விலங்குகள் தோன்றியிருக்கவில்லை. நிலப்பகுதியில் வேட்டை விலங்கு இல்லை என்பதால் பறவைகள் நிலத்திலேயே கூடுகட்டி வாழ்ந்தன.
 
அதுமட்டுமல்லாமல், நியூசிலாந்துதான் மனிதர்கள் குடியேறிய கடைசி பெரிய நிலப்பரப்பு ஆகும். 13-ம் நூற்றாண்டில் பாலிநேசியர்கள் சிறிய எலிகளையும், பசிபிக் எலிகளையும் அங்கே கொண்டு சென்றார்கள். 6 நூற்றாண்டுகளுக்குப் பிறகு அங்கே குடியேறிய ஐரோப்பியர்கள் பாலூட்டி விலங்குகளை கொண்டு சென்றார்கள். அவை பறவைகளை உணவாகக் கொள்ள ஆரம்பித்தன. நியூசிலாந்தில் மனிதர்கள் குடியேறிய பிறகு அங்கிருந்த உயிரினங்களில் மூன்றில் ஒரு பங்கு அழிந்துவிட்டது.
 
அங்கே எஞ்சியுள்ள மற்ற உயிரினங்களைக் காப்பதற்கான நடவடிக்கை ஒன்றும் புதிதல்ல. 1960களில் அங்கிருந்த சிறிய தீவுகளில் எலிகளை அழித்தொழிப்பதில் இயற்கை ஆர்வலர்களுக்கு வெற்றி கண்டார்கள். வேட்டை விலங்குகளை அழிப்பது என்பது 2010-ம் ஆண்டு வரையிலும் ஒரு சமூக வழக்கமாக மாறவில்லை.
"அதுவே பெரிதாகி இன்று தேசத்தின் உயிர் மூச்சான அடையாளமாகிவிட்டது" என்கிறார் ஆக்லாந்து பல்கலைக் கழகத்தில் உயிரியல் பேராசிரியரும், 2050 திட்டத்தில் முதன்மையாக இருப்பவருமான ஜேம்ஸ் ரஸ்ஸல்.
 
எலிகளை ஒழிக்கும் நியூசிலாந்தின் திட்டம்
அகச்சிவப்பு கேமராக்களின் வருகையே எல்லாவற்றையும் மாற்றியது என்கிறார் ரஸ்ஸல். 20-ம் நூற்றாண்டில் கண்ணுக்குத் தெரிந்த பூச்சிகள் மற்றும் மான்கள், ஆடுகள் போன்ற பெரிய தாவர உண்ணிகளே அழிக்க வேண்டிய இலக்குகளாக இருந்தன. ஆனால், 21-ம் நூற்றாண்டில் அகச்சிவப்பு கேமராக்கள் வந்த பிறகே, இந்த சிறிய பாலூட்டிகள் இரவில் என்ன செய்கின்றன என்பதை வன உயிரின ஆர்வலர்கள் தெரிந்து கொள்ள முடிந்தது.
 
பறவை முட்டைகள் மற்றும் குஞ்சுகள் மீது எலிகள் பாய்ந்து செல்லும் புகைப்படங்கள் பரவலாக பகிரப்பட்டன. "அந்த காட்சி மிகவும் அதிர்ச்சிதரக் கூடியதாக இருந்தது" என்கிறார் ரஸ்ஸல். நியூசிலாந்து ஆண்டோன்றுக்கு 2.6 கோடி பறவைகள் இழந்து கொண்டிருப்பதாக அப்போது ஒரு உயிரிலாளர் கணக்கீடு செய்தார்.
 
2011-ம் ஆண்டு புகழ் பெற்ற இயற்பியலாளர் சர் பால் கல்லஹன் என்பவரே 'வேட்டை விலங்கு இல்லாத நாடு' என்கிற கனவை பிரபலப்படுத்தினார். போதுமான முதலீடும், ஆள் பலமும் இருந்தால் அதனை சாதிக்க முடியும் என்று ரஸ்ஸலும், இளம் இயற்கை ஆர்வலர்களும் வாதிட்டனர்.
 
பின்னர், அரசியல்வாதிகளும் இணைந்து கொண்டனர். 2016-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட ஒரு சட்டம், அழித்தொழிக்கப்பட வேண்டிய மோசமான வேட்டை விலங்குகளாக சிலவற்றை கோடிட்டுக் காட்டியது. பசிபிக் எலி, கப்பல் எலி, நார்வே எலி ஆகிய 3 வகை எலிகளும், ஸ்டோட்ஸ், வீஸல்ஸ், ஃபெர்ரட்ஸ் போன்ற சிறு பாலூட்டிகளும் அந்த பட்டியலில் இடம் பெற்றிருந்தன. அவற்றை இந்த நூற்றாண்டின் மத்தியில் முற்றிலுமாக அழித்தொழிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
 
வேட்டை விலங்கு இல்லா 2050 நிறுவனம் என்ற பொது அமைப்பு உருவாக்கப்பட்டு, அரசு மற்றும் தனியார் நிதியை ஒருமுகப்படுத்தப்பட்டு, உள்ளூர் அளவில் வேட்டைக்கான உத்திகள் சோதனைக்கு பயன்படுத்தப்பட்டது.
வேட்டை விலங்கு இல்லாத வெலிங்டன் என்பதே அவற்றில் மிகவும் வெற்றிகரமான குழுவாகும். 2 லட்சம் பேர் வாழும் பெரிய நகரத்தில், எலிகள் பல்கிப் பெருகும் வாய்ப்புள்ள நகர்ப்புற சூழலில் இந்த சவாலை அவர்கள் ஏற்றுள்ளனர்.
 
இந்த திட்டத்தின் கீழ், எலி பிடிப்பதில் கத்துக்குட்டிகளாக இருந்தவர்களை அதில் நிபுணத்துவம் பெறச் செய்து 36 வலுவான குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. எலிகளைக் கொல்வதில் பொறிகளைக் காட்டிலும் அதிக பலன் தரும் விஷத்தையும், எலி வேட்டையின் அப்போதைய நிலவரம் குறித்த அப்டேட்டையும் தரும் ஜி.பி.எஸ். அப்ளிகேஷனையும் அது வழங்குகிறது.
 
எலிகள் அதிகம் வரக்கூடிய இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. "எலி நடமாட்டம் தென்பட்டால் எங்களது குழுவுக்கு அவர்களது சாதனங்களை எங்கே வைக்க வேண்டும் என்று தெரியும்" என்கிறார் வேட்டை விலங்கு இல்லா வெலிங்டன் திட்ட இயக்குநர் ஜேம்ஸ் வில்காக்ஸ்.
 
கொல்லப்பட்ட ஒவ்வொரு எலியும் உடற்கூராய்வுக்காக ஆய்வகத்திற்கு அனுப்பப்படுகிறது. இது மிகவும் முக்கியமானது. ஏனெனில், எலிகளைக் கொல்ல பயன்படுத்தப்படும் anticoagulants விஷம் மெதுவாக செயல்படக் கூடியது. எலிகள் புத்திசாலித்தனமான சமூக விலங்குகள், அவற்றிக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய விஷயங்களில் இருந்து விலகி இருக்க கற்றுக் கொள்ளும்.
 
விஷம் கலந்த நிலக்கடலை, வெண்ணெய் வைக்கப்பட்ட பெட்டிக்கு வெளியே செத்துக் கிடக்கும் எலிகளை பரிசோதிப்பதன் மூலம் விஷத்தின் வீரியம் அறிந்து கொள்ள இந்தக் குழு முற்படுகிறது.
 
"அந்த எலிகள் நாங்கள் வைத்த விஷத்தால் உயிரிழந்ததா என்பதை தெரிந்து கொள்ள முடியும். அத்துடன், இறந்தது ஆணா, பெண்ணா, அண்மையில் குட்டிகளை ஈன்றுள்ளதா? ஒரு எலியைத் துரத்துகிறோமா அல்லது ஒரு எலி குடும்பத்தையே தேடுகிறோமோ? என்பதும் தெரியவரும்." என்று உடற்கூராய்வு செய்வதன் அவசியம் பற்றி விவரிக்கிறார் வில்காக்ஸ்.
 
உலகின் முதல் நகர்ப்புற சுற்றுச்சூழல் சரணாலயம் 1999-ம் ஆண்டு வெலிங்டனில் நகர மையத்தில் இருந்து சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் தொடங்கப்பட்டது. ஸிலாந்தியா என்று அழைக்கப்படும் அந்த சரணாலயம் 8 கி.மீ. நீள சுற்றுச்சுவரால் பாதுகாக்கப்படுகிறது. உடைமைகளை முழுமையாக பரிசோரித்த பிறகே 2 கதவுகள் கொண்ட தடுப்பு வழியே பார்வையாளர்கள் உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள்.
இதுபோன்ற கடுமையான பாதுகாப்புக் கெடுபிடிகளால், அங்கே அரிதாக இருந்த பறவைகள் தப்பிப் பிழைத்தன என்பதுடன், பல்கிப் பெருகி அண்டை பகுதிகளிலும் பரவின.
 
தற்போது நியூசிலாந்தில் இதுபோன்ற பாதுகாப்புச் சுவருடன் கூடிய சரணாலயங்கள் டஜன் கணக்கில் இருக்கின்றன. அவற்றில் மிகப்பெரியதான ப்ரூக் என்ற சரணாலயம் சுமார் 700 ஹெக்டேர் பரப்பளவு கொண்டது. ஸிலாந்தியாவைப் போல 3 மடங்கு பெரியதான இது தெற்கு தீவுகளில் நெல்சன் என்ற இடத்தில் இருக்கிறது.
 
2016-ம் ஆண்டு வேட்டை விலங்குகளைத் தடுக்கும் பாதுகாப்புச் சுவர் எழுப்பப்பட்ட அடுத்த ஓராண்டுக்குள் அங்கிருந்த பூச்சிகள் அழிக்கப்பட்டன. அவற்றில் ஏதும் மீண்டும் உள்ளே நுழைந்துவிடக் கூடாது என்பதே இப்போதுள்ள சவால்.
 
பாதுகாப்புச் சுவருக்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டால் அங்குள்ள எச்சரிக்கை அமைப்பு வேலை செய்கிறது. "நள்ளிரவில் அலாரம் ஒலித்தாலும் நாங்கள் உடனே அங்கே சென்று பார்வையிடுவோம்" என்கிறகார் ப்ரூக் சரணாலயத்தின் மேலாளர் நிக் ராப்சன்.
 
பறவைகளுக்கு ஆபத்தான வேட்டை விலங்குகளும், பூச்சிகளும் உள்ளே நுழைவதைக் கண்டுபிடிக்கும் மிக முக்கிய சாதனம் ஒன்றும் இருக்கிறது. அது மனிதர்களின் நெருங்கிய நண்பனான நாய்கள் தான். இந்த பணிக்கென்றே அவை பிரத்யேகமாக பயிற்சி அளிக்கப்பட்டுள்ள தயார் செய்யப்பட்டுள்ளன. "எலிகள் உள்ளே நுழைவதை எங்களது கருவிகள் கோட்டை விட்டாலும் கூட நாய்கள் அவற்றை கண்டுபிடித்துவிடும்" என்கிறார் ராப்சன்.
வேட்டை விலங்குகளே இல்லாத இடங்களாகிவிட்ட அருகில் உள்ள தீவுகளில் கூட பாதுகாப்புச் சுவர்கள் அவசியமாகின்றன. ஏனெனில், எலிகள் 800 மீட்டர் வரையிலும் நீந்தக் கூடியவை. ஆகவே, அந்த சரணாலயங்களில் எலிகளை அண்ட விடாமல் செய்து, பறவைகள் காப்பது என்பது இடைவிடாத போராட்டமாக இருக்கிறது.
 
அங்குள்ள எல்லா பறவைகளுக்குமே வேட்டை விலங்குகள் இல்லாத சுற்றுச்சூழல் தேவையாக இல்லை என்கிறார் ஸிலாந்தியா நிறுவனர் ஜேம்ஸ் லின்ச். சில பறவைகள் கடலோரம் அல்லது நகர்ப்புற சரணாலயங்களை வசிப்பிடமாகக் கொள்ள முடியும். ஆகவே, ஒட்டுமொத்த தேசத்தையும் வேட்டை விலங்கில்லா இடமாக மாற்ற முயற்சிப்பதற்குப் பதிலாக, பாதுகாப்புச் சுற்றுச்சுவர்களை ஒட்டிய காடுகளில் கவனம் குவிக்கலாம். இதன் மூலம் அந்த பறவைகள் நீடித்து நிலைத்திருப்பதை உறுதி செய்யலாம் என்பது அவரது கருத்து.
 
ஆனால், வேட்டை விலங்கில்லா 2050 திட்டத்தை ஆதரிக்கும் உயிரியலாளர் ஜேம்ஸ் ரஸ்ஸல், அதுபோன்ற உள்ளூர் அளவிலான உத்தி வகுப்பு பலன் தராது என்கிறார்.
 
"சில இடங்களில் மட்டும் பறவைகளை பாதுகாப்பது என்ற யோசனை பொருளாதார ரீதியாக அனுகூலமாக இருக்காது. வேட்டை விலங்குகள் மீண்டும் திரும்புவதைத் தடுப்பதற்கு மிகப்பெரிய அளவில் நிதி தேவைப்படும். முற்றிலுமாக அழித்தொழிப்பது என்பது அதிக செலவு பிடிக்கக் கூடியதுதான், ஆனால், ஒருமுறை நீங்கள் செலவு செய்தால் போதும். அத்துடன் முடிந்துவிடும்." என்று அவர் கூறுகிறார்.
 
ஆனால், இந்த பணியை எப்படி முடிப்பது என்பது யாருக்கும் தெரியாது என்பதை அவர் ஒப்புக் கொள்கிறார். 1960கள் தொடங்கி இப்போது வரை பூச்சிக்கொல்லி தொழில்நுட்பம் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. அடுத்த 27 ஆண்டுகளில் தொடர்ச்சியான முதலீடுகள் என்ன சாதிக்கும் என்பதை யார் அறிவார்? என்று அவர் கூறுகிறார்.
 
தார்மீக அடிப்படையில் பார்த்தால், அங்கே கடுமையான மற்றும் வேகமான பதில் ஏதும் இல்லை. அது தனிநபர்கள், சமூகங்களைப் பொருத்து விவாதங்களில் ஈடுபட்டுள்ளன. ஆனால், ஒட்டுமொத்தமாக பார்த்தால் நியூசிலாந்து குடிமக்கள் சில விலங்குகளை தியாகம் செய்வதன் மூலம் மற்றவற்றை பாதுகாப்பாது என்பதை சரியான விஷயமாகவே பார்ப்பதாகவே ரஸ்ஸல் கூறுகிறார்.
 
அது உண்மைதான், சில வேட்டை விலங்குகளை அழித்தொழிக்கும் யோசனைக்கு எதிர்ப்பு என்பது மிகவும் குறைவுதான்.
 
மிராமர் தீபகற்பத்திற்குத் திரும்பினால் டான் கூப், தானும் எலி பிடிக்கும் தனது குழுவினரும் தேவைப்படாத அந்த நாளை எதிர்நோக்கி இருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்