சிரியா பேருந்து மீது திடீர் தாக்குதல்: 28 பேர் பலி - இறந்தவர்கள் சிப்பாய்கள் என தகவல்

Webdunia
வியாழன், 31 டிசம்பர் 2020 (14:00 IST)
கிழக்கு சிரியாவில் பேருந்து ஒன்று தாக்கப்பட்டதில் குறைந்தது 28 பேர் கொல்லப்பட்டனர். அவர்கள் அனைவரும் சிப்பாய்கள் என்று கூறப்படுகிறது.

அதே நேரம், சிரியாவின் அரசு ஊடகம் இறந்தவர்கல் அனைவரும் குடிமக்கள் என்று கூறுகிறது.
 
பதற்றம் மிகுந்த டெய்ர் அல்-ஜோர் மாகாணத்தில் புதன்கிழமை நடந்த இந்த தாக்குதல் நடந்துள்ளது.
 
ஆனால், ஒரு கண்காணிப்பு அமைப்பு உள்ளிட்ட பிற வட்டாரங்கள் பேருந்தில் சிப்பாய்கள் இருந்ததாகத் தெரிவிக்கின்றன. இறந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகம் என்று அவை தெரிவிக்கின்றன.
 
தாக்குதலுக்கு உடனடியாக எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
 
பிரிட்டனில் இருந்து இயங்கும் 'சிரியன் அப்சர்வேட்டரி ஃபார் ஹ்யூமன் ரைட்ஸ்' என்ற மனித உரிமை அமைப்பு ஐ.எஸ். அமைப்புடன் இந்த தாக்குதலை தொடர்பு  படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் இறந்தவர்கள் எண்ணிக்கை 37 என்றும் அது கூறுகிறது.
 
இது இஸ்லாமிக் ஸ்டேட் (ஐ.எஸ்.) அமைப்பு நன்கு திட்டமிட்டு நடத்திய திடீர் தாக்குதல் என்றும், அரசுக்கு ஆதரவான ஆயுதப் படையினர், சிப்பாய்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகளை இலக்கு வைத்து நடத்தப்பட்டது என்றும், தகவல் மூலாதாரங்களை மேற்கோள் காட்டி இந்த அமைப்பு வாதிடுகிறது.
 
ராய்டர்ஸ் செய்தி முகமை மேற்கோள் காட்டும் பிற வட்டாரங்களும் அந்தப் பேருந்துகளில் சிரியாவின் அரசுத் துருப்புகள் இருந்தன என்றே கூறுகின்றன.
 
இந்தப் பேருந்துகளில் சிரியாவிந் சிப்பாய்கள் இருந்ததாக கூறுகின்றன உறுதிப்படுத்தப்படாத தகவல்கள்.
 
புராதன பல்மைரா நகருக்கு அருகில் உள்ள இந்தப் பகுதியில் ஐ.எஸ். அமைப்பினரும் அதிபர் பஷார் அல் அசாத்துக்கு ஆதரவான சிரியாவின் துருப்புகளும் அடிக்கடி  மோதுவார்கள்.
 
2014ம் ஆண்டு ஒரு கட்டத்தில் மேற்கு சிரியாவில் இருந்து கிழக்கு இராக் வரை பரவியிருந்த 88 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கட்டுப்படுத்தி பல லட்சக்  கணக்கான மக்கள் மீது கொடூரமான ஆட்சியை நடத்தியது ஐ.எஸ்.
 
அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளின் ஒத்துழைப்பைப் பெற்ற உள்ளூர் படையினர் 5 ஆண்டுகள் போரிட்டு ஐ.எஸ். வசமிருந்த எல்லா பகுதிகளையும்  மீட்டன. சிரியா, இராக் நாடுகளில் ஐ.எஸ். வசமிருந்த எல்லா பிராந்தியங்களும் கைப்பற்றப்பட்டதாக 2019 மார்ச்சில் அறிவிக்கப்பட்டது.
 
ஆனால், 2011 முதல் உள்நாட்டுப் போரினால் அலைகழிக்கப்படும் சிரியாவின் சில பகுதிகளில் ஐ.எஸ். அமைப்பு தன்னை தக்கவைத்துக்கொண்டது. தொடர்ந்து அது  தாக்குதல்களையும் நடத்திவருகிறது.
 
புதன்கிழமை நடந்த தாக்குதலை மேற்கொண்டது ஐ.எஸ்.தான் என்பது உறுதி செய்யப்பட்டால், 2020ம் ஆண்டில் அந்த அமைப்பு நடத்திய மோசமான தாக்குதல்  இதுதான் என்கிறது சிரியன் அப்சர்வேட்டரி அமைப்பு.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்