சிரியாவில் மீண்டும் தொடங்குகிறதா போர்? - ரஷ்ய வான் தாக்குதலில் 78 பேர் பலி
செவ்வாய், 27 அக்டோபர் 2020 (09:51 IST)
சிரியாவின் வடக்கு பகுதியில் ரஷ்யா நடத்திய வான் தாக்குதலில் துருக்கி அரசின் ஆதரவு பெற்ற தீவிரவாத குழுவின் உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அவர்களில் பெரும்பாலானவர்கள் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் இட்லிப் மாகாணத்தில் இறந்துள்ளனர்.
ஃபயத் அல்-ஷாம் எனும் இஸ்லாமியவாத குழுவின் பயிற்சி மையம் ஒன்றும் தாக்கப்பட்டுள்ளது.
மீண்டும் சிரியா பிராந்தியத்தில் உள்நாட்டு வன்முறை தீவிரமாவதன் அறிகுறியாகப் பார்க்கப்படும் இந்தத் தாக்குதலில் ஏராளமானவர்கள் காயமடைந்துள்ளனர்.
சிரியன் அப்சர்வேட்டரி ஃபார் ஹியூமன் ரைட்ஸ் எனும் மனித உரிமைகள் அமைப்பு 78 பேர் இந்தத் தாக்குதலில் இறந்துள்ளனர் என்று தெரிவிக்கிறது.
ரஷ்யா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் மேற்பார்வையில் இட்லிப் மாகாணத்தில் சண்டை நிறுத்தம் அமலில் உள்ளது. அது இப்போது சீர்குலையும் ஆபத்தில் உள்ளது.
கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் கடைசி பிராந்தியம் இட்லிப் மாகாணமாகும். ஒன்பது ஆண்டு கால உள்நாட்டுப் போரில் இஸ்லாமியவாத ஜிகாதி குழுக்களை சிரியா அரசு படைகள் தோற்கடித்தன.
மார்ச் மாதம் சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டபோது, சிரிய ஆதரவு படைகள் தாக்குதல் நடத்தினால், தங்களுக்கு பதில் தாக்குதல் நடத்தும் உரிமை உண்டு என்று துருக்கி அரசு கூறியது.
ரஷ்யா சிரியா அரசையும், துருக்கி கிளர்ச்சியாளர்களையும் ஆதரிக்கின்றன.
சிரியாவில் போர் எவ்வாறு தொடங்கியது?
'அரபு வசந்தம்' என்று அழைக்கப்பட்ட போராட்டங்கள் 2011இல் நடந்தபோது, சிரியாவின் அதிபர் பஷார் அல் அசாத் பதவி விலக வேண்டும் என்று போராட்டங்கள் நடந்தன.
சிரியாவில் போர் தொடங்குவதற்கு முன்னரே, அதிபர் பஷார் அல் அசாத் ஆட்சியில் அங்கு வேலையில்லா நிலையும், ஊழல் மற்றும் எந்தவித அரசியல் சுதந்திரமும் இல்லை என சிரிய மக்கள் தெரிவித்திருந்தனர்.
அண்டை நாடுகளில் எழுந்த அரபு வசந்தத்தால் தெற்கு நகரான டெராவில் ஜனநாயகத்துக்கு ஆதரவான போராட்டங்கள் வெடித்தன.
எதிர்ப்பாளர்களையும், போராட்டக்காரர்களையும் ஒடுக்க அரசு முயன்றபோது, நாடு முழுவதும் அதிபர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து, பதற்றநிலை அதிகரித்தது.
அரசுக்கு எதிரானவர்கள் தங்கள் கைகளில் ஆயுதங்களை எடுத்தனர். முதலில் அவர்களை காத்துக் கொள்ள அவர்கள் ஆயுதங்களை ஏந்தினர். அதன்பின் தங்கள் பகுதிகளில் உள்ள அரசுப் பாதுகாப்பு படைகளை அழிக்க ஆயுதங்களை ஏந்தினர்.
வெளிநாடுகளின் ஆதரவு பெற்ற பயங்கரவாதம் என்றும் கருதிய அதிபர் அசாத் இதை ஒடுக்கத் தொடங்கினார்.
அந்த வன்முறை நாளடைவில் அதிகரித்து உள்நாட்டு போராக மாறியது. இதில் அரசுக்கு எதிராகவும், ஆதரவாகவும் வெளிநாடுகளின் தலையீடு ஏற்பட்டது.
அந்த நாடுகளும் சிரியாவின் எல்லைக்குள் நுழைந்து கிளர்ச்சியாளர்கள் மற்றும் சிரியா ஆதரவு படையினர் மீது தாக்குதல் நடத்தின.