அரசியல், புலனாய்வு பத்திரிகையான டெஹல்கா நிறுவனர் தருண் தேஜ்பால் பாலியல் வல்லுறவு வழக்கில் இருந்து விடுதலை.
அரசியல், புலனாய்வு பத்திரிகையான டெஹல்கா நிறுவனர் தருண் தேஜ்பால், 2013ம் ஆண்டு தனது பெண் ஊழியர் ஒருவரை வல்லுறவு செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டார் என்கிறது ஏ.என்.ஐ. செய்தி முகமை. கோவா மாநில விசாரணை நீதிமன்றம் இந்த தீர்ப்பை அளித்துள்ளது.
கோவாவில் 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற டெஹல்கா நிகழ்ச்சி ஒன்றில் சக பெண் ஊழியர் ஒருவரை வல்லுறவு செய்ததாக தேஜ்பால் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இந்த வழக்கில் தருண் தேஜ்பால் கைது செய்யப்பட்டு பின் ஏழு மாதங்கள் சிறையில் இருந்தார். இந்தியாவின் முக்கிய பத்திரிகையாளராக இருந்த தேஜ்பால் பல்வேறு செய்தித்தாள் மற்றும் பத்திரிகைகளில் பணிபுரிந்தபின் 2000ஆம் ஆண்டு டெஹல்கா பத்திரிகையை தொடங்கினார்.
அதன்பிறகு டெல்ஹகா பல புலனாய்வு செய்திகளை வெளியிட்டுள்ளது. குறிப்பாக `ஸ்டிங் ஆப்ரேஷன்` என்று சொல்லக்கூடிய ரகசியமாக செய்தி சேகரிப்பதில் நிபுணத்துவம் பெற்றது. டெஹல்காவின் பத்திரிகையாளர்கள் வேறு ஒருவரை போல சென்று ரகசியமாக படம் எடுத்து ஊழல்களை அம்பலமாக்குவர்.