செளதி அரேபியா: விலகும் பாகிஸ்தான், நெருங்கும் இந்தியா - என்ன நடக்கிறது?

Webdunia
சனி, 15 ஆகஸ்ட் 2020 (23:35 IST)
இஸ்ரேலுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையே வியாழக்கிழமை ஒரு முக்கிய ஒப்பந்தம் எட்டப்பட்டது, அதன்படி மேற்குகரையின் பெரும் பகுதிகளை இணைத்துக்கொள்ளும் தனது திட்டங்களை இஸ்ரேல் நிறுத்திவைப்பதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளையும் தொடங்கவுள்ளது.

 
வளைகுடாவின் அரபு நாடுகளுடன் இஸ்ரேலுக்கு இதுவரை இராஜதந்திர உறவுகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.
இந்த ஒப்பந்தத்தால் பாலத்தீன தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அரப் நியூஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு ஒன்று, இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு, பாலத்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ், அரபு லீக் கூட்டமொன்றிற்கு அழைப்பு விடுத்துள்ளதாகத் தெரிவிக்கிறது.

 
இந்த ஒப்பந்தத்தின் விளைவாக, மற்ற வளைகுடா நாடுகளும் இஸ்ரேலுடனான உறவை வலுப்படுத்தும் என்றும் இது 'அரபு அமைதி ஒப்பந்தத்தில்' தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் அஞ்சுகிறார்.

அணி சேரும் இஸ்லாமிய நாடுகள்

 
ஒரு வகையில், அவரது கவலையும் நியாயமானது தான். ஐக்கிய அரபு அமீரகத்தின் இந்த முடிவுக்கு மற்ற இஸ்லாமிய நாடுகளின் முதல் எதிர்வினை இப்போது வெளி வந்துள்ளது. இந்த முடிவை எகிப்தும் ஜோர்டானும் வரவேற்றுள்ளன.

 
வளைகுடா நாடுகளுக்கிடையிலான உறவுகள், மத்திய கிழக்கின் அரசியல் மற்றும் அவற்றின் நட்பு நாடுகளிலும் இந்த முடிவு தாக்கத்தை ஏற்படுத்தும். இந்தியாவும் அதற்கு விதிவிலக்கன்று.
இந்தப் புதிய ஒப்பந்தம், இஸ்லாமிய நாடுகளை ஓரணியில் சேர்ப்பது போல் தோன்றுகிறது.
தற்போது, ​​உலகில் உள்ள இஸ்லாமிய நாடுகள் மூன்று அணிகளாகப்பிரிவது தெளிவாகத் தெரிவதாக இஸ்ரேலைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் ஹரேந்திர மிஸ்ரா கூறுகிறார்.

 
இரான் தனித்து நிற்கிறது, செளதி அரேபியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் இரண்டாவது அணியை ஒன்றாக வழிநடத்துகின்றன, மூன்றாவது அணி துருக்கி, மலேசியா மற்றும் பாகிஸ்தானை உள்ளடக்கியதாகக் காணப்படுகிறது. இந்த ஒப்பந்தத்திற்குப் பின்னர் இஸ்லாமிய உலகின் அணிகளின் இந்தப் பிரிவினை மேலும் அதிகரிக்கும்.

 

இந்தியாவின் மீதான தாக்கம்

 
இத்தகைய சூழ்நிலையில், இந்த முடிவு இந்தியாவுக்கு என்ன பாதிப்பை ஏற்படுத்தும் என்ற கேள்வி எழுகிறது. இந்தியா இஸ்ரேலுடனும் ஐக்கிய அரபு அமீரகத்துடனும் நல்ல உறவைக் கொண்டுள்ளது என்று டைம்ஸ் ஆப் இந்தியா ராஜரீக ஆசிரியர் இந்திராணி பாக்சி கருதுகிறார்.

 

மத்திய கிழக்கின் பிராந்திய பாதுகாப்பு குறித்த இஸ்ரேல் மற்றும் இந்தியாவின் சிந்தனையும் ஒத்ததாகவே உள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் அங்கு வளர்ந்து வரும் சக்தியாகும். எனவே, இரு நாடுகளும் ஒன்றிணைந்தால், இந்தியாவும் அதை வரவேற்கும்.

 
ஆனால் இந்த நாடுகள் இணை சேர்வதால் பாகிஸ்தானை தனிமைப்படுத்துவதில் ஏதேனும் விளைவு ஏற்படுமா? என்ற கேள்வியும் எழுகிறது.

 
இது குறித்து இந்திராணி அவர்கள் கூறுகையில், "சீனாவுக்கான தனது ஆதரவால் பாகிஸ்தான் தனிமைப்பட்டுள்ளது. ஆனால் பாகிஸ்தான் எப்போதும் இஸ்லாமிய நாடுகளில் ஆதிக்கம் செலுத்தும், இந்த உண்மையை நாம் எளிதில் மறுக்க முடியாது. இஸ்லாமிய நாடுகளில் ஆணு ஆயுதங்களைக் கொண்ட ஒரே நாடாகப் பாகிஸ்தான் விளங்குகிறது. இதன் காரணமாக, இஸ்லாமிய நாடுகளில் இது சிறப்பு அந்தஸ்தைப் பெற்றுள்ளது." என்று தெரிவிக்கிறார்.

 
பாகிஸ்தான் இன்று சற்றே தனிமைப்படுத்தப்பட்டிருந்தால், அதற்கான காரணம் அதன் கொள்கைகளேயாகும் என்று அவர் கூறுகிறார்.

 முன்பு, சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை பாகிஸ்தானுடன் இணக்கமாக இருக்கும் நாடுகளாகக் கருதப்பட்டன, ஆனால் சில காலமாக, பாகிஸ்தானுடன் ஒப்பிடும்போது இந்தியாவுடனான அவர்களின் உறவு அதிக முன்னேற்றம் அடைந்துள்ளது என்று ஹரேந்திர மிஸ்ரா கூறுகிறார்.

 
இதற்கு ஒரு எடுத்துக்காட்டாக, கடந்த ஆண்டு நடந்த இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC) கூட்டத்தை அவர் குறிப்பிடுகிறார், இதில் பாகிஸ்தான் விரும்பாத நிலையிலும் இந்தியா சிறப்புப் பார்வையாளராக அழைக்கப்பட்டது. இந்த அழைப்பிற்குப் பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் ஐக்கிய அரபு அமீரகம் அதைப் பொருட்படுத்தவில்லை.

 
பாகிஸ்தான் விவகாரம்

கடந்த ஐம்பதாண்டுகளில், இந்தக் கூட்டத்துக்கு இந்தியா அழைக்கப்பட்டது, இதுவே முதல் முறை. இது மட்டுமல்லாமல், இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஓ.ஐ.சியின் வருடாந்தரக் கூட்டத்தில், இஸ்லாத்துக்கு எதிராக இந்தியா கடுமையாகப் பிரச்சாரம் செய்து வருவதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியது. ஆனால், அது நிராகரிக்கப்பட்டது. இந்த முறை மாலத்தீவு இந்தியாவுக்கு ஆதரவாகக் களமிறங்கியது.

 

ஹரேந்திர மிஸ்ரா, "பாலகோட் தாக்குதலுக்குப் பிறகும் யுஏஇ மற்றும் சவுதி அரேபியாவுடன் நெருங்கியதொடர்பு காணப்பட்டது. இந்தியாவின் விமானப்படை விமானி அபிநந்தனை மீட்பதில் சவுதி அரேபியா முக்கிய பங்கு வகித்ததாகப் பல செய்திகள் வந்தன. அமெரிக்கா மட்டுமல்லாமல், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவுதி அரேபியாவிடமிருந்தும் நிறைய அழுத்தம் பாகிஸ்தானுக்குக் கொடுக்கப்பட்டது" என்று கூறுகிறார்.

 
சமீபத்தில், ஜம்மு-காஷ்மீரில் 370 ஆவது சட்டப்பிரிவை அகற்றியது குறித்து பாகிஸ்தான் OIC இல் கேள்விகளை எழுப்பியபோது, ​​இது இந்தியாவின் உள் விவகாரம் என்று சவுதி அரேபியா தெளிவாகக் கூறியது.
இதனைத் தொடர்ந்து, 2018-ல் பாகிஸ்தான் தன்னிடம் வாங்கிய ஒரு கோடி டாலர் கடனைத் திரும்பச் செலுத்துமாறும் சவுதி அரேபியா அழுத்தம் கொடுத்தது.

 
2019-ல் ஐக்கிய அரபு அமீரகம், பாரதப் பிரதமர் மோதி அவர்களுக்குத் தங்கள் நாட்டின் மிக உயர்ந்த விருதான மிகச் சிறந்த குடிமகன் என்ற விருதையும் வழங்கிக் கௌரவித்தது.

 
இந்த நிகழ்வுகள் அனைத்தும் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவுதி அரேபியாவுடனான இந்தியாவின் உறவுகள் மிகச் சிறப்பாக இருந்தன என்பதையும், இஸ்ரேலுடன் எந்தவிதமான உடன்பாடும் எட்டப்பட்டால், இஸ்லாமிய நாடுகளின் இந்த அணிக்கு இந்தியா நிச்சயம் ஆதரவளிக்கும் என்பதையும் காட்டுகின்றன.

 
இந்த ஒப்பந்தத்திற்கு ஆதரவளிக்கும் மற்ற வளைகுடா நாடுகளும் இந்தியாவுடன் நல்ல உறவைக் கொண்டிருக்கும். இது பாகிஸ்தானைத் தனிமைப்படுத்தவும் இந்தியாவுக்கு உதவும். இது மட்டுமல்ல, இன்று உலக நாடுகள் குழுக்களாகச் சேர்ந்து வரும் புவிசார் அரசியலின் பின்னணியில், இந்தியா, அமெரிக்கா, யுஏஇ மற்றும் சவுதி அரேபியா ஆகியவை ஓரணியில் இருப்பது போன்ற தோற்றம் உருவாகியுள்ளது.

 
இந்த முடிவு, இந்தியாவின் மீதான மற்றொரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் ஹரேந்திர மிஸ்ரா கணிக்கிறார். சமீப காலங்களில் பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிக்க இந்தியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையே பல ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. வளைகுடா நாடுகள் பாதுகாப்பு

உபகரணங்களுக்கான முக்கிய சந்தையாகக் கருதப்படுகின்றன. இத்தகைய சூழ்நிலையில், இஸ்ரேலின் உதவியுடன் இந்தியா எந்த இராணுவ உபகரணங்களை தயாரித்தாலும், அதை விற்பதில் வரும் நாட்களில் எந்த பிரச்சனையும் இருக்காது என்று அவர் கருதுகிறார்.

 
பாரதத்தின் பாதுகாப்புத் துறையிலும் தற்சார்பு என்ற கோஷத்தை அண்மைக்காலங்களில் அதன் பாதுகாப்பு அமைச்சகமும் முன்னெடுப்பதும் கருத்தில் கொள்ளத்தக்கது.

 
யூ -க்குப் பிறகு இப்போது செளதி அரேபியாவின் முறை

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் செளதி அரேபியா இடையேயான நட்பும் அனைவரும் அறிந்ததே. இத்தகைய சூழ்நிலையில், செளதி அரேபியாவும் ஐக்கிய அரபு அமீரகத்தின் பாதையைப் பின்பற்றும் என்று பெரும்பாலானோர் நம்புகிறார்கள். ஆனால் இந்திராணிக்கு இது குறித்து சற்று வேறுபட்ட கருத்து உள்ளது. செளதி அரேபியா முழுமையாக வெளிப்படையான நிலையை எடுக்காமலிருக்க வாய்ப்புள்ளதாக அவர் கருதுகிறார். இதன் பின்னணியில் உள்ள காரணத்தையும் அவர் விளக்குகிறார்.

அவரைப் பொறுத்தவரை, மத்திய கிழக்கில் மத விவகாரங்களில் செளதி அரேபியா பாரம்பரிய சித்தாந்தம் கொண்டதாகக் கருதப்படுகிறது. இதன் காரணமாக, இஸ்ரேலுடனான கடந்த கால வரலாற்றைப் பார்த்தால், செளதி அரேபியா யூதர்களுடன் பகிரங்கமாகக் கை கோர்ப்பது கடினமாக இருக்கலாம். எனினும், அரசியல் ரீதியாக செளதி அரேபியா பல ஆண்டுகளாக இஸ்ரேலுக்கு ஆதரவான நிலையையே பின்பற்றி வருகிறார்கள் என்றும் அவர் கருதுகிறார்.

இந்தியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான விமான சேவையைத் தொடங்க செளதி அரேபியா தனது வான்வெளியைப் பயன்படுத்த இந்தியாவிற்கு அனுமதியளித்துள்ளது, கடந்த காலங்களில் இஸ்ரேல் குறித்த செளதியின் அணுகுமுறை எவ்வாறு மாறியது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு என்று இந்திராணி கூறுகிறார்.

 
ஆனால் ஹரேந்திர மிஸ்ராவின் கருத்து வேறுபடுகிறது. "நண்பனின் நண்பன் நமக்கும் நண்பன், நண்பனின் எதிரி நமக்கும் எதிரி என்பது ஒரு சொலவடை. செளதி அரேபியா மற்றும் இஸ்ரேல் இரண்டுக்கும் பொதுவான ஒரு எதிரி என்றால் அது இரான். அந்த அடிப்படையில் இரு நாடுகளும் எதிர்காலத்தில் ஒன்றிணைய வாய்ப்புள்ளது" என்று அவர் கருதுகிறார்.

 
வியாழக்கிழமை நடந்த அமெரிக்க ஜனாதிபதியின் செய்தியாளர் சந்திப்பிலும் இது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது என்று அவர் கூறுகிறார்.

இந்த ஒப்பந்தத்தின் பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய அமெரிக்க ஜனாதிபதி, "இப்போது 'பனி' உருகிவிட்டதால், இன்னும் சில அரபு-முஸ்லீம் நாடுகள் ஐக்கிய அரபு அமீரகத்தைப் பின்பற்றும் என்று நம்புகிறேன்." என்று கூறியதும் கவனிக்கத்தக்கது.

இஸ்ரேல், செளதி அரேபியா இடையிலான நட்பு

 
உண்மையில், செளதி அரேபியா இஸ்ரேலுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் விரும்புகிறார். இஸ்ரேலில், அவரது ராஜினாமா தற்போது கோரப்படுகிறது. லஞ்சம், மோசடி மற்றும் நம்பிக்கையை மீறுதல் மற்றும் கொரோனா தொற்றுநோயை சரியாக கையாள முடியவில்லை என்பதெல்லாம் அவர் மீதான குற்றச் சாட்டுகளாக உள்ளன.

 
அத்தகைய சூழ்நிலையில், எவ்வளவு நாடுகளின் ஆதரவு கிடைக்கிறதோ அந்த அளவுக்கு பாலத்தீனத்தைத் தனிமைப்படுத்த முடியும் என்றும் தனக்குச் சாதகமான சூழலை உருவாக்குவது எளிதாக இருக்கும் என்றும் அவர் விரும்புகிறார்.

 
கூடுதலாக, இஸ்ரேல் மற்றும் செளதி அரேபியா இரண்டும் ஈரானை தங்கள் எதிரியாகக் கருதுகின்றன. இது சம்பந்தமாக, இருவருக்கும் இடையிலான உறவு கடந்த சில ஆண்டுகளில் சுமுகமாகவே உள்ளது.
இன்று, அரபு உலகில் மற்ற நாடுகளுடனான இரானின் மோதல் மத ரீதியானது. ஷியா பிரிவினரை இரான் வழிநடத்துகிறது, செளதி அரேபியா சுன்னி பெரும்பான்மையினருக்குத் தலைமை வகிக்கிறது.

அமெரிக்காவின் நட்பு நாடு என்ற ரீதியில், இஸ்ரேல் எப்போதும் இரானுக்கு எதிரான போக்கையே கொண்டுள்ளது. அமெரிக்கா காரணமாக இஸ்ரேல்-ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான ஒப்பந்தத்திற்குப் பிறகு, இப்போது இரான் மற்றும் இஸ்ரேல் இடையே பிளவு மேலும் அதிகரிக்கும்.

 
பல சந்தர்ப்பங்களில், இஸ்ரேலின் இராணுவத் தலைவரும் பிற தலைவர்களும் இரு நாடுகளுக்கும் பொதுவான விஷயம் இருப்பதாகவும் மத்திய கிழக்கில் இரான் தங்களுக்கு கவலைக்குரிய விஷயமாகவே இருக்கிறது என்றும் அதை எதிர்த்து ஒன்றாகப் போராடத் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

 
இரு நாடுகளும் சில காலமாக இரானுக்கு எதிரான உளவுத்துறை தகவல்களைப் பகிர்ந்து கொண்டிருக்கின்றன. இந்த விஷயத்தை இஸ்ரேல் ஒப்புக்கொண்டும் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்