'ஆபாசப் படங்கள் பெண்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து எடுக்கப்பட வேண்டும்' - பெண் ஆபாசப்பட இயக்குநர்

Webdunia
வியாழன், 14 டிசம்பர் 2023 (21:15 IST)
"நெறிமுறைகள் என்று எதைச் சொல்கிறீர்கள்? நம்மைச் சுற்றியுள்ள அனைத்தும் நெறிமுறைகளுடன் தான் இயங்குகின்றனவா? ஒரு தேவாலய அமைப்பு நெறிமுறையுடன் இயங்குகிறதா? ஃபேஷன் துறை, உணவுத் துறை நெறிமுறைகளுடன் தான் இயங்குகிறதா?
 
ஆபாசப் படங்களையும் நெறிமுறை சார்ந்து உருவாக்க முடியும், ஆனால் அதை யார், எப்படி உருவாக்குகிறார்கள் என்பது முக்கியம்" என்கிறார் ஆபாசப் பட இயக்குநர் எரிகா லஸ்ட்.
 
போர்னோகிராஃபி என்பதை உண்மையில் நெறிமுறைகளுடன் அணுக முடியுமா என்ற பிபிசி செய்தியாளர் எம்மா பாயிண்டனின் கேள்விக்கு எரிகா அளித்த பதில்தான் இது.
 
போர்னோகிராஃபி என்றால் புத்தகங்கள், படங்கள், சிலைகள், திரைப்படங்கள் மற்றும் பிற ஊடகங்களில் பாலியல் நடத்தையை பிரதிநிதித்துவப்படுத்துவது என்று அர்த்தம்.
 
இதில் முக்கியமாக ஆபாசப் படங்கள் என்பது ஒழுக்க நெறிகளுக்கு எதிரானதாகவும், சட்ட விரோதமாகவும் பார்க்கப்படுகிறது. பல நாடுகளில் ஆபாசப் படங்களை பார்ப்பது தண்டனைக்குரிய குற்றம்.
 
போர்னோகிராஃபி தொழில்துறையில் ஆபாசப் படங்களின் பங்கு அதிகமாக உள்ளது. இந்தத் துறையில் உள்ள சிக்கல்கள், அதில் பெண்கள் மற்றும் மாற்றுப் பாலினத்தவர்களின் பங்கு, ஆபாசப் படங்களை எப்படி படமாக்க வேண்டும், அதைப் பார்ப்பதற்கான வயது வரம்பை நிர்ணயித்தல் போன்றவை குறித்து பிபிசி செய்தியாளர் எம்மா பாயிண்டனுடன் பகிர்ந்து கொண்டார் இயக்குநர் எரிகா லஸ்ட்.
 
கிட்டத்தட்ட 88 சதவீத ஆபாசப் படங்களில் உடல்ரீதியிலான துன்புறுத்தல்கள் இருப்பதாகவும், 49 சதவீத ஆபாசப் படங்களில் மோசமான வார்த்தைகள் பிரயோகிக்கப்படுவதாகவும் போர்ன் ஹப் என்னும் இணையதளம் சார்பாக எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பு கூறுகிறது.
 
மேலும் இதைப் பார்ப்பவர்கள் 70 சதவீதம் ஆண்கள் என்றும், 34 வயதுக்குக் கீழே உள்ள இளைஞர்கள் என்றும் அந்தக் கருத்துக் கணிப்பு கூறுகிறது.
 
இந்த மாதிரியான உடல்ரீதியிலான துன்புறுத்தல்கள் நிறைந்த ஆபாசப் படங்களைப் பார்ப்பதால் மோசமான விளைவுகள் உண்டாகலாம். எனவே ஆபாசப் படங்களை நெறிமுறைகள் சார்ந்து உருவாக்க முடியும் என்றும் அது மிகவும் அவசியமானதும்கூட என்றும் கூறுகிறார் இயக்குநர் எரிகா லஸ்ட்.
 
நெஞ்சுவலி மருந்து தேடலில் 'வயாகரா' கிடைத்தது எப்படி?சோதனையில் பங்கேற்ற இளைஞர்கள் கூறியது என்ன?
 
செய்தியாளர் எம்மா பாயிண்டனுடன் இயக்குநர் எரிகா லஸ்ட் (இடதுபுறம் இருப்பவர்)
 
"ஒரு பாலியல் உணர்வைத் தூண்டும் படத்தை எடுக்கும்போது, அதில் என்ன காட்டுகிறோம் என்பதைச் சார்ந்துதான் இந்த நெறிமுறைகளை வகைப்படுத்த முடியும். அதாவது படப்பிடிப்பு நடக்கும் இடத்தின் சூழல், அதன் தரம், நடிகர்கள் நடத்தப்படும் விதம், அவர்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பில்லாமல் எடுக்கப்பட வேண்டும் என்ற நோக்கம், இதைப் பொறுத்துதான் அமையும்," என்கிறார் எரிகா லஸ்ட்.
 
மேலும் "தன்னுடைய படங்களை சிலர் ஆபாசப் படங்கள் என்று அழைப்பதை எரிகா ஏற்றுக்கொள்கிறார்.
 
"அதில் ஆபாசம் இருக்கிறதுதான், ஆனால் இணைய தளங்களில் கொட்டிக் கிடக்கும் வன்முறை நிறைந்த ஆபாசம் அல்ல. நான் எனது திரைப்படங்களை பாலியல் உணர்வைத் தூண்டும் திரைப்படங்கள் என்று சொல்வேன். காரணம் அதை நான் கலையம்சத்துடன்தான் உருவாக்குகிறேன்," என்கிறார் அவர்.
 
உங்கள் படத்தில் நடிக்கும் நடிகர்கள் பாதுகாப்பாக உணர்வார்கள் என்பதை எப்படி உறுதிப்படுத்துகிறீர்கள் என்ற கேள்விக்கு, "முதலில் நான் அவர்களைப் பற்றி முழுவதுமாக அறிந்து கொள்வேன். அவர்கள் எதற்காக என் படப்பிடிப்பு தளத்திற்கு வந்துள்ளார்கள் என்பதில் தெளிவாக உள்ளார்களா என்பதை உறுதி செய்வேன்," என்கிறார் எரிகா.
 
நடிப்பவர்களுக்கு எது பிடிக்கும், எது பிடிக்காது, அவர்கள் யாருடன் நடிக்க விரும்புகிறார்கள் என்பது முக்கியம். மேலும் இயக்குநர், தயாரிப்பாளர் மட்டுமில்லாமல் நெருக்கமான காட்சிகளைப் படம்பிடிக்க ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளனர், மேலாளர்கள் உள்ளனர். நடிப்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் இவர்களது பங்கும் முக்கியமானது என்கிறார் எரிகா.
 
அமெரிக்காவில் ஆசிரமம் தொடங்கிய ஓஷோ சிறையில் அடைக்கப்பட்டது ஏன்?
 
பெண்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் ஆபாசப் படங்கள்
போர்னோகிராஃபி, ஆபாசப் படங்கள், பாலியல் கல்வி, இளைஞர்கள், பெண்கள்
"ஒவ்வொரு காட்சியையும் எடுப்பதற்கு முன்பாக அதை எவ்வாறு எடுக்கப் போகிறேன் என்பதையும் என் நடிகர்களுக்கு நான் விளக்கி விடுவேன். என்னுடைய படங்களை ஆண்களின் பார்வையில் இருந்து எடுப்பதைவிட பெண்களின் உணர்வுகளை காட்சிப்படுத்துவதையே நான் விரும்புகிறேன்.
 
பல ஆண்டுகளாக இந்த போர்ன் தொழில்துறை முழுவதுமே ஆண்களின் பாலியல் விருப்பங்களை முன்னிலைப்படுத்தியே செயல்படுகிறது," என்கிறார் எரிகா லஸ்ட்.
 
நீங்கள் எடுக்கும் பெண்கள் உணர்வுகளைப் பேசும் ஆபாசப் படங்களில் ஒரு பார்வையாளராக நான் என்ன எதிர்பார்க்கலாம் என்று செய்தியாளர் எம்மா பாயிண்ட கேள்வியெழுப்பியபோது, "இதில் பெண்கள் முதன்மை கதாபாத்திரங்களில் தோன்றுவார்கள். இவை வெறும் வழக்கமான ஆபாசப் படங்கள் அல்ல. அவர்களுக்கு என ஒரு இலக்கு இருக்கும், வாழ்க்கைத் தொழில் இருக்கும், பெண்கள்தான் இந்தக் கதைகளை நகர்த்திச் செல்வார்கள். தங்களது பாலியல் உணர்வுகளைப் பற்றி அவர்கள் மேலும் அறிந்துகொள்வார்கள்"
 
தொடர்ந்து பேசிய எரிகா, "வெறும் ஆண்களுக்கான பாலியல் பொம்மைகள் அல்லது பொருள்களைப் போல அல்லாமல் பெண்கள் உண்மையில் பாலியல் இன்பங்களை அனுபவிப்பார்கள். இதன் மூலம் ஆபாசப் படங்களை பாலியல் கல்வியின் ஓர் அங்கமாகவும், கலைநயம் மிக்கவையாகவும் பார்க்க முடியும்.
 
அது பெண்களுக்கான ஓர் உணர்வுபூர்வமான விடுதலையாகவும் அவர்களை மேலும் உறுதியானவர்களாக மாற்றும் வகையிலும் இருக்கும்," என்று கூறுகிறார்.
 
"நாம் செய்ய வேண்டியதெல்லாம் இணைய தளத்தில் உள்ள மோசமான படங்களைத் தவிர்த்து இத்தகைய கலைநயமிக்க பாலியல் சார் திரைப்படங்களை உருவாக்குவதே. அதற்கு எனக்கு பெண்கள் மட்டுமில்லாமல், திருநங்கைகள், மாற்றுப் பாலினத்தவர்கள், தன்பாலின ஈர்ப்பு பெண்கள், ஆண்கள், இருபாலின ஈர்ப்பாளர்கள் என எல்லோரும் தேவை," என்கிறார் எரிகா லஸ்ட்.
 
"இவர்கள் அனைவரும் முன்வந்து பொதுவாகக் காணக் கிடைக்கும் வன்முறை நிறைந்த ஆபாசப் படங்களின் பிரச்னை குறித்தும், அவை ஏன் தங்களுக்குப் பிடிக்கவில்லை என்பதைப் பற்றியும் பேச வேண்டும்."
 
இந்த மரம் ஒரு நகரத்தையே பீதியடையச் செய்திருக்கிறது - ஏன் தெரியுமா?
 
 
 
"பாலியல் பற்றி அவை உருவாக்கும் மோசமான கருத்துகள், நெறிமுறை சார்ந்த சிக்கல்கள், அவை எப்படி சமூகத்தின் எண்ணங்களைப் பிரதிபலிக்கின்றன என்பதையும் பேச வேண்டும். அந்த நிலையை மாற்ற விரும்பினால் சரியான பாலியல் உணர்வைத் தூண்டும் படங்களைத் தேர்வு செய்யும் பார்வையாளராக மாற வேண்டும்.
 
நாம் பாலியல் என்ற பெயரில் எதை எடுத்துக்கொள்கிறோம் என்பதில் தெளிவு ஏற்பட வேண்டும்," எனக் கூறும் எரிகா, ஆபாசப் படங்களை கலைநயத்தோடு எடுக்கும்போது அவை மக்களால் வெகுஜன திரைப்படங்களுக்கு நிகராக மதிக்கப்படும் என்று நம்புகிறார்.
 
"நெறிமுறை சார்ந்து ஆபாசப் படங்களை உருவாக்கினால், இதன் இயக்குநர், நடிகர்கள், தயாரிப்பு நிறுவனம் குறித்து தெரிந்துகொள்ள மக்கள் ஆர்வமாக இருப்பார்கள். அவர்களது நேர்காணல்களை பார்ப்பார்கள். இந்த ஆபாசப் படம் உள்ளுணர்வுகளுடன் பொருந்துகிறதா எனச் சிந்திப்பார்கள்.
 
ஒரு உணவுத் தொழில்துறையில் உணவு ஆரோக்கியமான முறையில் தயாரிக்கப்படுகிறதா என யோசிப்பது போல, இந்த ஆபாசப் படமும் நெறிமுறை சார்ந்து உருவாக்கப்படுகிறதா எனச் சிந்திப்பார்கள்," என்று கூறுகிறார் எரிகா.
 
"சிலருக்கு இப்படித்தான் இவ்வளவு காலமாக ஆபாசப் படங்களில் பெண்களை நடத்தினார்களா என்பது புரியும். அப்படிப்பட்ட படங்களை இனி பார்க்க மாட்டேன் என்று நினைப்பார்கள். இந்த மாற்றத்தைத்தான் நான் எதிர்பார்க்கிறேன்," என்கிறார் எரிகா லஸ்ட்.
 
தீரஜ் சாஹூ: 5 நாட்களாக எண்ணப்பட்ட பணம் - 285 கோடி ரூபாய் எங்கிருந்து வந்தது?
?
போர்னோகிராஃபி, ஆபாசப் படங்கள், பாலியல் கல்வி, இளைஞர்கள், பெண்கள்
ஆபாசப் படங்களைப் பார்ப்பதற்கு வயது வரம்பு மிகவும் முக்கியம் எனக் கருதும் எரிகா, அதற்கு ஒரு கட்டணம் செலுத்தும் முறையை உருவாக்கி, 18 வயதுக்கு மேற்பட்டோர் தங்களது சொந்த கடன் அட்டை மூலமாகப் பணம் செலுத்தி மட்டுமே அதைப் பார்க்க முடியும் என்ற கட்டமைப்பையும் உருவாக்க வேண்டும் என்ற யோசனையை முன்வைக்கிறார்.
 
போர்ன் தொழில்துறையின் எதிர்காலம் குறித்து மிகவும் உற்சாகத்தோடு பேசும் எரிகா, இப்போது அதிகமான படைப்பாளிகள் தைரியமாக இதில் நுழைவதை தாம் வரவேற்பதாகக் கூறுகிறார்.
 
"சமூகத்தில் போர்ன் தொழில்துறை குறித்து மோசமான ஒரு பெயர் இருந்தாலும், அது மெதுவாக மாறி வருகிறது. காரணம் எங்களின் இந்த முயற்சிதான்.
 
நாங்கள் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பது, இங்குள்ள பெண்களின் சக்தி, இங்குள்ள நல்ல மனிதர்கள் இவைதான் காரணம். இதன் மூலம் ஒரு சிறிய மாற்றம் நிகழத் தொடங்கியுள்ளது," எனக் கூறுகிறார் எரிகா லஸ்ட்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்