பொன் மாணிக்கவேல் - சினிமா விமர்சனம்

Webdunia
சனி, 20 நவம்பர் 2021 (15:07 IST)
நடிகர்கள்: பிரபுதேவா, நிவாதிதா பெத்துராஜ், சுரேஷ் மேனன், மகேந்திரன்; இசை: டி இமான்; இயக்குனர்: ஏ.சி. முகில். வெளியீடு: டிஸ்னி ஹாட்ஸ்டார்.
 
ஒரு காவல்துறை அதிகாரியின் சாகசத்தை வித்தியாசமாகச் சொல்ல விரும்பி உருவாகியிருக்கும் படம்தான் பொன். மாணிக்கவேல். நீதிபதி ஒருவர் தலை துண்டித்துக் கொல்லப்படுகிறார். அந்தக் கொலை எப்படி நடந்தது என்று விசாரிக்க நினைக்கும் காவல்துறைக்கு அதிர்ச்சி.

ஏனென்றால், அந்த வழக்கை விசாரிக்கும் அளவுக்கு திறமையான ஆளே தங்களிடம் இல்லை என்பது அப்போதுதான் காவல்துறைக்குப் புரிகிறது. இதனால், ஏற்கனவே காவல்துறையில் வேலை பார்த்து, பிறகு ஜெயிலுக்குப் போய், இப்போது ஆடம்பர பங்களாவில் இருந்தபடி மாடு மேய்க்கும் வேலை பார்த்துவரும் பொன் மாணிக்கவேல்தான் (பிரபுதேவா) இதற்கு சரியான நபர் என்று அறிந்து, அவரை மறுபடியும் துணை ஆணையராக்கி இந்த வழக்கை விசாரிக்க சொல்கிறார்கள்.
 
ஆனால், அவர் இந்த விவகாரத்தை அலட்சியமாக கையாள்கிறார். உடன் இருக்கும் காவலர்கள் எரிச்சலும் ஆத்திரமும் அடைகிறார்கள். தொடர்ந்து கொலைகள் நடக்கின்றன. பிறகு என்ன நடக்கிறது என்பது மீதிக் கதை. படத்தின் முதல் காட்சியில் ஒரு மூத்த நீதிபதி தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார். "அட பயங்கரமாக இருக்கிறதே" என்று நிமிர்ந்து உட்கார்ந்தால், படம் தரும் அனுபவம் அதைவிட பயங்கரமாக இருக்கிறது.
 
ஏற்கனவே சிறைக்குச் சென்று, வேலையை விட்டுவிட்டவரை எப்படியோ மறுபடியும் துணை ஆணையராக்கி, வழக்கை ஒப்படைத்திருக்கிறார்களே அவர் எப்படியெல்லாம் புலனாய்வு செய்து கண்டுபிடிக்கப்போகிறாரோ என்று எதிர்பார்ப்புடன் அமர்ந்தால், தேநீர் குடித்துவிட்டு அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் நடக்கிறாரே தவிர, சுவாரஸ்யமாக எதுவும் செய்வதில்லை.
 
இடையிடையே சின்னச் சின்ன ட்விஸ்ட்களை வைத்து படத்தின் விறுவிறுப்பைக் கூட்டலாம் என நினைத்திருக்கிறார்கள். ஆனால், அதற்குள் படம் 'இனிமே என்னத்த செஞ்சா என்ன' என்ற கவலைக்கிடமான நிலைக்குப் போய்விடுகிறது.
 
படத்தில் வரும் பிரேதக் கிடங்கில் சடலங்கள் குறைந்த விலைக்குக் கிடைக்கின்றன. ஒரு காட்சியில், "ஏ பாசிடிவ் ரத்தத்தோடு வயசான ஒரு சடலம் வேணும்" என கேட்கிறார் நாயகன். 'வாங்க சார், உங்களுக்கில்லாத டெட் பாடியா' என்று கேட்டு ஒரு உடலைக் கொடுத்து அனுப்புகிறார்கள். அந்த உடலை வாங்கி வந்து, அப்போதுதான் கொல்லப்பட்ட உடல் என்று சொல்கிறார் ஹீரோ. "வெல்டன் மாணிக்கவேல். இவ்வளவு நாளா எங்கைய்யா இருந்த?" என்று பாராட்டப்படுகிறார்.
 
இந்தப் படத்தில் கதாநாயகி எதற்கென்றே தெரியவில்லை. ஏற்கனவே படம் விறுவிறுப்பில்லாமல்தானே நகர்ந்துகொண்டிருக்கிறது? இதற்கு நடுவில் கதாநாயகியுடன் ரொமான்ஸ், பாட்டு என எக்ஸ்ட்ரா ஸ்பீட் பிரேக்கர் எதற்காக?
 
படத்தில் பிரபுதேவாவைத் தவிர, மற்ற பாத்திரங்கள் பேசும் வசனமும் உதட்டசைவும் பல இடங்களில் பொருந்தவில்லை. இந்தப் படத்தில் பாராட்டத்தக்க ஒரு விஷயம் ஒளிப்பதிவு. சிறப்பாக அமைந்திருக்கிறது. இமானின் இசையில் 'உதிரா உதிரா' பாடல் மட்டும் நன்றாக இருக்கிறது.
 
இந்தப் படத்தில் மொட்டையடித்து, சாமிக்கு மாலை போட்ட காவலர் பாத்திரம் ஒன்று வருகிறது. படம் நெடுக கதாநாயகனுடன் சுற்றியபடி, அவர் சொல்லும் எடுபிடி வேலைகளைச் செய்வதுதான் அந்தப் பாத்திரத்தின் பணி. அதைப் பார்க்கும்போது, நமக்கு மிகப் பாவமாக இருக்கிறது. ஆனால், படம் பார்க்கும் நம் நிலையும் அப்படித்தானே இருக்கிறது?

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்