எம்.ஜி.ஆர். மகன்: சினிமா விமர்சனம்

சனி, 6 நவம்பர் 2021 (15:32 IST)
நடிகர்கள்: சசிகுமார், சமுத்திரக்கனி, சத்யராஜ், சரண்யா, மிருணாளினி ரவி, சிங்கம் புலி, பழ. கருப்பைய்யா, மொட்டை ராஜேந்திரன், நமோ நாராயணா, ஜுனியர் ராமச்சந்திரன்; ஒளிப்பதிவு: வினோத் ரத்தினசாமி; இசை: ஆண்டனிதாசன்; இயக்கம்: பொன். ராம்.
 
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா படங்களை எடுத்த பொன். ராமின் அடுத்த படம் இது. தொடர்ந்து சிவ கார்த்திகேயனை வைத்து படங்களை உருவாக்கிய பொன். ராம் இந்த முறை சசிகுமாரை இயக்கியிருக்கிறார்.
 
இந்தப் படத்தின் கதை என குத்துமதிப்பாக நாம் புரிந்துகொள்வது இதுதான்: சத்யராஜ் ஒரு நாட்டு மருத்துவர். அவருடைய மகன் சசிகுமார். அவருடைய மாமா சமுத்திரக்கனி. அவருடைய அக்கா சரண்யா. சசிகுமார் சரியாகப் படிக்காததால், வீட்டிற்குள் நுழையக்கூடாது என்று சொல்லிவிடுகிறார் சத்யராஜ். இதனால் ஜன்னல் வழியாக சாப்பாடு வாங்கி சாப்பிட்டுவிட்டு, சமுத்திரக்கனியும் அவரும் ஜாலியாக இருக்கிறார்கள். தினத்தந்தியில் தலைப்புச் செய்தியில் பெயர் வர வேண்டுமென்பது சசிகுமாரின் ஆசை.
 
சத்யராஜ் வைத்தியத்திற்காக மூலிகை பறிக்கும் சிறு குன்றை, குவாரியாக்கி சம்பாதிக்க நினைக்கிறார் உள்ளூர் பெரிய மனிதரான பழ.கருப்பையா. அது தொடர்பாக வழக்கு நடக்கிறது.
 
பொன்ராம் எடுத்த படங்களிலேயே சற்று சுமாரான படம் 'சீமராஜா'தான். இந்தப் படத்தில் அவருடைய சுமார் படத்தை அவரே முறியடித்திருக்கிறார். படம் ஆரம்பித்ததிலிருந்து முடியும்வரை, சசிகுமாரும் சமுத்திரக்கனியும் பேசிக்கொண்டேயிருக்கிறார்கள். பொன்.ராமின் முந்தைய திரைப்படங்கள் நகைச்சுவையை மையமாகக் கொண்டவை என்பதால், இந்தப் படத்திலும் அதற்குத்தான் அவர் முயற்சித்திருக்க வேண்டும். ஆனால், அப்படியேதும் நிகழவில்லை.
 
தந்தை - மகன் மோதலில் ஆரம்பித்து, சமுத்திரக்கனிக்கு கல்யாணம் ஆகாத பிரச்சனை, கதாநாயகியின் தந்தைக்கு பக்கவாத பிரச்சனை, சத்யராஜின் வழக்கு பிரச்சனை என ஏதேதோ திசைகளில் செல்கிறது படம். குறிப்பாக சமுத்திரக்கனிக்கு பெண் பார்த்து, திருமணம் செய்துவைக்கும் படலம் இருக்கிறதே, படத்தின் உச்சகட்ட சித்ரவதை அதுதான்.
 
உருவ கேலி, நிறத்தை வைத்து கேலி செய்வதெல்லாம் தமிழ் சினிமாவில் முடிந்துவிட்டது என நினைத்துக்கொண்டிருந்தால், அதனை நகைச்சுவை என மீண்டும் அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்.
 
இந்தப் படத்தில் பழ. கருப்பைய்யாவின் பாத்திரம்தான் வில்லன் போலிருக்கிறது. அதனால், சற்று கடுமையான முகத்துடன் அவர் சில வசனங்களைப் பேசுகிறார். அவ்வளவுதான்.
 
இந்தப் படத்தில் கதாநாயகியாக மிருணாளினி ரவி வந்துபோகிறார். சிங்கம் புலி, சரண்யா என ஏகப்பட்ட பாத்திரங்கள் இருந்தாலும் யாரும் மனதில் பதியவில்லை.
 
இந்தப் படம் நெடுக சசிகுமாரும் சமுத்திரக்கனியும் இலக்கே இல்லாமல் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். இயக்குனர் பொன். ராமும் அவர்களோடு சேர்ந்து சுற்றியிருக்கிறார். அவ்வளவுதான்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்