சிறார்களைப் பயன்படுத்தும் குற்றக் குழுக்கள்: - `மாஸ்டர்' படம் சொல்வது உண்மையில் நடக்கிறதா?

Webdunia
செவ்வாய், 23 நவம்பர் 2021 (08:50 IST)
திருச்சியில் ஆடு திருடிய கும்பலால் காவல்துறை சிறப்பு ஆய்வாளர் கொல்லப்பட்ட வழக்கில் இரண்டு சிறார்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். `குற்றச் செயல்களுக்கான கருவியாக குழந்தைகளைப் பயன்படுத்திக் கொள்கிறவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். ஆனால், அதுகுறித்து சட்டத்தில் எதுவும் சொல்லப்படவில்லை' என்கின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள்.
 
திருச்சி மாவட்டம், நவல்பட்டு காவல்நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்த பூமிநாதன் என்பவர், கடந்த 20 ஆம் தேதி பூலாங்குடி காலனி என்ற இடத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது சிலர் ஆடுகளோடு சுற்றித் திரிந்ததை கவனித்துள்ளார். அவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால் அவர்களைத் தடுத்து நிறுத்த முயற்சித்துள்ளார்.
 
ஆனால், அவர்கள் வாகனத்தில் விரைந்து சென்றதால் பூமிநாதனும் பின்தொடர்ந்து விரட்டிச் சென்றுள்ளார். ஒருகட்டத்தில் அவர்களைத் தடுத்து நிறுத்தியுள்ளார். அப்போது பூமிநாதனிடம் இருந்து தப்பிப்பதற்காக அவரை கொன்றுவிட்டு அந்தக் கும்பல் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
 
சிறப்பு எஸ்.ஐ மரணம் தொடர்பாக கீரனூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டதில் இரண்டு சிறார்கள் உள்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் ஐந்தாம் வகுப்பும் மற்றொருவர் ஒன்பதாம் வகுப்பும் படித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவர்களிடம் இருந்து ஆயுதமும் இரு சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
 
சிறப்பு எஸ்.ஐ கொல்லப்பட்ட விவகாரத்தில் சிறார்கள் கைது செய்யப்பட்ட விவகாரம், பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறார்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டாலும் அவர்களுக்கான தண்டனை குறைவு என்பதால் `மாஸ்டர்' பட பாணியில் குற்றக் குழுக்கள் அவர்களைப் பயன்படுத்திக் கொள்வதாகவும் சமூக வலைதளங்களில் விவாதமானது.
 
அதிர்ச்சி கொடுக்கும் புள்ளிவிவரங்கள்
`` தமிழ்நாட்டில் 2018 ஆம் ஆண்டு 2,304 குழந்தைகள் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக வழக்குகள் பதிவாகியுள்ளன. 2019 ஆம் ஆண்டு 2,686 பேரும் 2020 ஆம் ஆண்டு 3,394 பேரும் சம்பந்தப்பட்டுள்ளதாக வழக்குகள் பதிவாகியுள்ளன. இவர்களில் கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் என்று பார்த்தால், 2020 ஆம் ஆண்டு 104 சிறார்கள் சம்பந்தப்பட்டுள்ளனர். இதே ஆண்டில் கொலை முயற்சிகளில் 61 சம்பவங்களில் சிறார்கள் ஈடுபட்டுள்ளனர்" எனப் புள்ளிவிவரங்களை அடுக்கினார், எவிடென்ஸ் அமைப்பைச் சேர்ந்த கதிர்,
 
தொடர்ந்து, பிபிசி தமிழிடம் பேசியவர், `` தமிழ்நாட்டில் மதுரை, சேலம் உள்பட 8 இடங்களில் அரசு கூர்நோக்கு இல்லங்கள் செயல்படுகின்றன. குற்றச் செயல்களில் ஈடுபடக் கூடிய குழந்தைகள் பெரும்பாலும் ஏழ்மை நிலையில் இருந்துதான் வருகிறார்கள். அவர்களுக்கு பெற்றோரின் அரவணைப்பு இருப்பதில்லை. நாங்கள் செய்த கள ஆய்வில், குற்றச் செயல்களில் ஈடுபடும் குழந்தைகளில் 38 சதவீதம் பேர் தலித் சமூகத்தை சேர்ந்தவர்களாகவும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 19 சதவீதமாகவும் உள்ளனர். இதில் பழங்குடிகளின் எண்ணிக்கை பெரிதாக இல்லை. பெரும்பாலும் கிராமத்தைச் சேர்ந்த சிறார்கள் அதிகளவில் உள்ளனர்.
 
தவிர, இவற்றில் பெரும்பாலானவை அதிதீவிர குற்றங்களாக இல்லை. சாதாரண வழக்குகளில்தான் அதிக பேர் கூர்நோக்கு இல்லங்களில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களைக் கைது செய்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. கவுன்சிலிங் கொடுத்தாலே போதும். மாநிலத்தில் உள்ள சிறார்களின் எண்ணிக்கையை வைத்துப் பார்த்தால் 3,394 பேர் என்பது பெரிய எண்ணிக்கை கிடையாது. இந்தக் குழந்தைகளிடம் எளிதில் மாற்றத்தைக் கொண்டு வர முடியும்" என்கிறார்.
 
`மாஸ்டர்' பட பாணியில் நடக்கிறதா?
`` எஸ்.ஐ பூமிநாதன் கொலை வழக்கில் சிறுவர்கள் சம்பந்தப்பட்டார்களா என்பதைப் பார்க்க வேண்டும். அதேநேரம், குற்றங்களில் குழந்தைகளைக் கருவியாகப் பயன்படுத்திக் கொள்கிறவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். அதுகுறித்து சட்டத்தில் எதுவும் சொல்லப்படவில்லை. ஒரு குழந்தை தானாக ஒரு குற்றத்தைச் செய்வது என்பது வேறு விஷயம். ஒரு குழுவோடு இணைந்து செயல்படுவது என்பதை மிக முக்கியமானதாகப் பார்க்க வேண்டும். 2000 ஆம் ஆண்டில் இளம் சிறார் நீதிச் சட்டத்தை (Juvenile Justice Act) அரசு கொண்டு வந்தது.
அதில், 2006 ஆம் ஆண்டில் சில திருத்தங்களைக் கொண்டு வந்தனர். குற்றச் செயல்களில் ஈடுபடும் சிறுவர்களை சட்டத்துக்கு முரண்பட்டவர்களாகத்தான் பார்க்க வேண்டும். அதனால்தான் குழந்தைகளின் நலனில் முழுமையான அக்கறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் திருத்தங்களைக் கொண்டு வந்தனர். ஆனால், அவர்களின் மனநலம், உடல்நலம், கல்வி, விளையாட்டு ஆகியவற்றில் கவனம் செலுத்தி அவர்களை மாற்றுவதற்கான பணிகள் எதுவும் செய்யப்படவில்லை. ஒருமுறை குற்றச் செயலில் ஈடுபட்டால் அவர்களைத் தொடர்ந்து குற்றவாளிகளாகப் பார்க்கும் மனநிலை உள்ளது. `மாஸ்டர்' படத்தில் காட்டப்படுவதுபோன்ற நிலை இருப்பதாகத் தெரியவில்லை. நிர்பயா வழக்கின் குற்றவாளிக்கு உரிய வயது வந்த பிறகு தூக்கில் போட்டனர். எனவே, குற்ற வழக்குகளில் அவ்வளவு எளிதில் தப்பிக்க முடியாது" என்கிறார் எவிடென்ஸ் கதிர்.
 
கூர்நோக்கு இல்லங்களின் பணிகள் சிறப்பாக உள்ளதா?என்றோம். `` அவர்கள் தங்கள் பங்குக்கு ஏதோ செய்கிறார்கள். அவ்வளவுதான். அனைத்து காவல் நிலையங்களிலும் சிறார்களைக் கையாள்வதற்கென்று ஓர் அதிகாரி இருக்க வேண்டும் என்ற விதி உள்ளது. காவல்துறையின் வாசமே இல்லாத அறையாகவும் அது இருக்க வேண்டும். அப்படி எந்தக் காவல்நிலையங்களிலும் இல்லை. இங்கு பெயரளவுக்கு கண்காணிக்கின்றனர். யாராவது கைது செய்யப்பட்டாலும் வேறு எதாவது வழக்குகள் உள்ளதா என்றுதான் பார்க்கிறார்கள். இது மாற்றத்தை ஏற்படுத்தாது.
 
சிறார்களுக்குள் மனமாற்றம் வருகிறதா என்பதை ஆராய்வதற்கு முழுமையான கண்காணிப்பு அவசியம். பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட சிறுவனிடம், `எதற்காக இப்படிச் செய்தாய்?' என நான் கேட்டபோது, குடும்பத்தில் பெற்றோரின் அன்றாட செயல்பாடுகள் அப்படி இருப்பதாகக் கூறினார். அவர் வசித்த வீட்டில் ஒரே ஒரு அறைதான் உள்ளது. இதுபோன்ற பின்னணிகளும் ஒரு காரணமாக உள்ளன. இவர்களைக் காவல்துறை அணுகும்போக்கிலும் சிக்கல் உள்ளது" என்கிறார்.
 
இரண்டு காரணங்கள் என்ன?
``சிறார்களைக் குற்றக் குழுக்கள் பயன்படுத்திக் கொள்வது அதிகரித்துள்ளதா?" என ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி கண்ணப்பனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` பூமிநாதன் வழக்கில் என்ன நடந்தது என்கிற களநிலவரம் எனக்குத் தெரியாது. அந்த ஒரு வழக்கை வைத்து இளம் குற்றவாளிகள் அதிகரித்து வருகிறார்களா என்றால், மக்கள் தொகையை வைத்தும் விழிப்புணர்வை வைத்தும் பார்த்தால் அவ்வாறு கூற முடியாது. அது சரியானதாகவும் இருக்காது. சில நேரங்களில் சிறார் மீதான புகார்களில் வழக்கு பதிவு செய்வார்கள். சில நேரங்களில் தவிர்த்துவிடுவார்கள். எனவே, வழக்கு எண்ணிக்கையை வைத்து முடிவெடுத்தாலும் புள்ளிவிவரங்கள் உண்மையை பிரதிபலிக்காது" என்கிறார்.
 
தென்னிந்தியாவில் குழந்தைகளின் மீதான பெற்றோரின் கண்காணிப்பும் ஆசிரியர்களின் கண்காணிப்பும் குறைந்து வருவதாக வேதனைப்பட்டவர், `` ஒரு குழந்தை சிறுவனாக மாறி, வாலிபனாக மாறி நல்ல குடிமகனாக வருவதற்கு இவை இரண்டும் மிக அவசியம். இந்த இரண்டில் ஒன்று குறைந்தாலும் சிக்கல்கள் வரும். எனக்கு அண்மையில் வாட்ஸ்ஆப்பில் வந்த வீடியோவில், பள்ளி மாணவிகள் மது அருந்துவது போன்ற காட்சிகள் வந்தன. வளரக் கூடிய இளம் சிறார்களுக்கு கடந்த காலங்களைப் போல கண்காணிப்பு குறைந்து வருகிறது. இதனால் திசைமாறிப் போகக் கூடிய வாய்ப்புகள் பெருகிவிட்டன.
 
கடந்த காலங்களில் சினிமா எல்லோரையும் கெடுப்பதாகச் சொன்னார்கள். இன்றைக்கு சமூக ஊடகங்கள் பெருகிவிட்டன. மதுபானம் மிக எளிமையாகக் கிடைக்கிறது. மது குடிப்பதற்கு பணம் தேவைப்படுகிறது. இதில், ஒரு குற்றம் இன்னொரு குற்றத்தை துணைக்குக் கூட்டி வருகிறது. வளர் இளம் பருவத்தினர்தான் நாட்டின் சொத்து. அதனை நாம் சரியாகப் பராமரிப்பதில்லை" என்கிறார்.
 
களநிலவரம் என்ன சொல்கிறது?
`` தங்களின் மகனோ, மகளோ பெரிய படிப்பு படிக்க வேண்டும் எனப் பெற்றோர் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், அவர்கள் நல்ல குடிமகனாகவும் நல்லவர்களாகவும் இருக்க வேண்டும் என்பதைப் பலரும் பார்ப்பதில்லை. பள்ளிக் கூடங்களும் நீட் தேர்வையும் மதிப்பெண்ணையும்தான் பார்க்கிறார்கள். போட்டிகள் அதிகமாகிவிட்டன. இதற்கிடையில் மது முதலான போதைப் பழக்கங்கள் அதிகமாகி வருகிறது. அதேநேரம், மது குடிப்பவர்கள் எல்லாம் குற்றம் செய்வதில்லை. பல்வேறு தவறான வழிகளுக்கு இந்தப் பழக்கங்கள் உதவி செய்கின்றன.
 
சிறார் நீதிச் சட்டம், அவர்களைக் குற்றவாளியாக மாற்றாமல் திருத்த வேண்டும் என்கிறது. பல நேரங்களில் இது சரியாக நடப்பதில்லை. இதனால் சிலர் திருந்தாமல் தண்டனையில் இருந்து தப்பிச் செல்கின்றனர். நல்ல நோக்கத்தோடு சட்டம் கொண்டு வரப்பட்டாலும் களநிலவரம் அப்படியில்லை. குழந்தைகளைக் கருவியாகப் பயன்படுத்திக் கொண்டு திட்டமிட்டுக் குற்றச் செயலில் ஈடுபடுத்துவது என்பது நூற்றில் ஒரு வழக்கில் நடந்திருக்கலாம். சிறார்களை பிச்சையெடுக்க வைப்பது, பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவது போன்ற செயல்கள் நடக்கின்றன. ஆனால், ஒருங்கிணைக்கப்பட்ட குற்றத்தைச் (Organised crime) செய்கிறார்களா என்பது சினிமாவில் வேண்டுமானால் சொல்லப்படலாம். இங்கு விதிவிலக்காக நடப்பதையெல்லாம் விதியாக எடுத்துக் கொள்ள முடியாது" என்றார் ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி கண்ணப்பன்.
 
அதிர்ச்சி கொடுக்கும் சேலம் நிலவரம்
 
``கூர்நோக்கு இல்லங்களின் செயல்பாடுகளும் விமர்சிக்கப்படுகிறதே?" என தமிழ்நாடு அரசின் வழக்குரைஞரும் சிறார் தொடர்பான வழக்குகளைக் கையாண்டு வரும் வீ.கண்ணதாசனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` உண்மைதான். உதாரணமாக மாநில மனித உரிமைகள் ஆணையத் தலைவர் பாஸ்கரனோடு சேலத்தில் உள்ள கூர்நோக்கு இல்லத்தை நேற்று (22 ஆம் தேதி) பார்வையிட்டேன். அங்கு 13 சிறார்கள் உள்ளனர். அனைத்துமே திருட்டு உள்பட சிறிய வழக்குகள்தான். அதில் பலரும் பெற்றோர் இல்லாதவர்களாகவும் குடும்பத்தால் கைவிடப்பட்டவர்களாகவும் உள்ளனர்.
 
இவர்களுக்கு நடத்தை அலுவலர் உள்பட அனைத்து வசதிகளும் உள்ளன. ஆனால், அந்த சிறார்கள் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து நல்வழிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் இல்லை. சேலத்தில் அந்த சிறார்களிடம் நீதியரசர் பேசும்போது, தங்களுக்கான குறைகளையும் அவர்கள் தெரிவித்தனர். அங்கு பணியில் உள்ளவர்களும் இதனை ஒரு வேலையாகப் பார்க்கின்றனர். அவர்களை நல்வழிப்படுத்தும் பணியாகப் பார்ப்பதில்லை. சேலத்தில் சிறார்களின் குறைகள் குறித்து அங்குள்ள அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, `நான் வந்து பத்து நாள்தான் ஆகிறது' என்றார். பத்து நாள்களாக அங்குள்ள சிறார்களைப் பற்றிக்கூட அவர் அறியாமல் இருப்பது வேதனையைத் தருகிறது" என்கிறார்.
 
மேலும், `` பெற்றோர் புறக்கணிப்பதால்தான் சிறார் தொடர்புடைய குற்றங்கள் அதிகமாகின்றன. கொரோனா காலத்தில் பள்ளிகளில் இருந்து இடைநின்ற பல மாணவர்கள் திருட்டு வழக்குகளில் பிடிபட்டுள்ளனர். கூர்நோக்கு இல்லங்களும் அவர்களை நல்வழிப்படுத்தும் மையங்களாக மாற வேண்டும்" என்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்