கொரோனா திரிபுகள்: ஆல்ஃபா, பீட்டா, காமா, டெல்டா, ஒமிக்ரான் குறித்த முக்கிய தகவல்கள்!

Webdunia
புதன், 19 ஜனவரி 2022 (13:35 IST)
தற்போது உலகில் பரவி வரும் கொரோனா வைரஸ் திரிபுகள், 2019ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவின் வூஹான் மாகாணத்தில் காணப்பட்ட அதே மரபியல் கூறுகளைக் கொண்ட கொரோனா வைரஸ் கிடையாது.
 
பிறருக்கு பரவும்போது, கொரோனா வைரஸ் எண்ணிக்கையில் அதிகரித்து புதிய கொரோனா வைரஸ் பரம்பரை (lineage) உண்டாகும். ஒவ்வொரு கொரோனா வைரஸ் பரம்பரையும் உண்டாகும்போது காலப்போக்கில் மரபணு மாற்றம் நிகழும்.
 
இந்த மரபணு பிறழ்வுகளால் (mutation) கொரோனா வைரசின் தன்மை பெரும்பாலும் மாறாது. ஆனால், சில மரபணு பிறழ்வுகள் தன்மை, நோய் பாதிப்பின் தீவிரம், கொரோனா தடுப்பூசியின் வீரியத்தைக் குறைத்தல், கொரோனா பரிசோதனையின்போது புலப்படாமல் தப்புதல், மருந்துகளுக்கு கட்டுப்படாமல் போதல் போன்ற மாற்றங்கள் உண்டாகும் என்றும் உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.
 
இப்படி முந்தைய வகை கொரோனா வைரசில் இருந்து ஒன்றுக்கும் மேற்பட்ட மரபணு பிறழ்வுகளால் உண்டாகும்போது புதிய வகை கொரோனா வைரஸ் ஒரு 'திரிபு' (variant) என்று அழைக்கப்படும். கொரோனா அறிகுறிகள் பெரும்பாலும் இவற்றுக்கு ஒன்று போலவே இருந்தாலும் இவற்றால் உண்டாகும் பாதிப்பின் அளவு மாறுபடும்.
 
ஒவ்வொரு திரிபுக்கும் பரவும் தன்மை, நோய் பாதிப்பின் தீவிரம் உள்ளிட்ட தன்மைகள் மாறுபடும். உலக சுகாதார அமைப்பு, இவ்வாறு மாறிய தன்மையை உடையவை என்று புதிதாகக் கண்டறியப்படும் கொரோனா திரிபுகளுக்கு கிரேக்க மொழியின் அகராதிப்படி ஒரு பெயரை வைக்கும்.
 
ஆல்ஃபா, பீட்டா, காமா, டெல்டா, லேம்டா, மு, ஒமிக்ரான் என்று இத்தகைய திரிபுகளுக்கு உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது. ஆல்ஃபா, பீட்டா, காமா, டெல்டா, ஒமிக்ரான் ஆகியவை 'கவலைக்குரிய திரிபு' (variant of concern) என்றும், லேம்டா, மு ஆகியவை 'கவனத்துக்குரிய திரிபு' (variant of interest) என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
ஆல்ஃபா திரிபு
 
கொரோனா வைரஸின் ஆல்ஃபா திரிபு 2020 செப்டம்பரில் முதல்முறையாக பிரிட்டனில் கண்டறியப்பட்டது. ஆல்ஃபா திரிபில் உண்டான மரபணு பிறழ்வால் மனிதர்களின் உடலில் நுழைய கொரோனா வைரஸ் பயன்படுத்தும் முக்கிய பகுதியான புரத ஸ்பைக்குகள் (Protein Spike) பல மாற்றங்களைக் கண்டிருக்கின்றன.
 
"Receptor-Binding Domain" என்றழைக்கப்படும் ஒரு முக்கிய பகுதியில், N501Y என்கிற மரபணு மாற்றம், ஆல்ஃபா திரிபில் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. வைரஸின் இந்தப் பகுதிதான், மனித செல்களுடன் முதலில் தொடர்பு கொள்ளும். கொரோனா வைரஸின் இந்தப் பகுதியில் ஏற்பட்டிருக்கும் மாற்றம், மனித உடலில் எளிதில் உட்புக முடியும் என்றால், அது வைரஸுக்கு மிகப் பெரிய சாதகமான அம்சமாகிவிடும்.
 
ஆல்ஃபா திரிபில் H69/V70 deletion என்கிற மரபணு மாற்றத்தில், ஸ்பைக்கின் ஒரு சிறிய பகுதி நீக்கப்பட்டிருக்கிறது. மிங்க் என்னும் விலங்கில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸில் இது காணப்பட்டது.
 
இந்த மரபணு மாற்றம் வைரஸின் பரவும் தன்மையை இரண்டு மடங்கு அதிகரிப்பதாக, பரிசோதனைகளில் வெளிப்பட்டதாகக் கூறுகிறார் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ரவி குப்தா.
 
கொரோனாவில் இருந்து மீண்டு வந்தவர்களின் ரத்தத்தில் இருக்கும் ஆன்டிபாடிகள் எனப்படும் நோய் எதிர்பான்களின் செயல் திறனை, இந்த H69/V70 deletion என்கிற மரபணு மாற்றம் குறைப்பதாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
டெல்டா திரிபு
 
அக்டோபர் 2020இல் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸின் திரிபு இது. 2021 ஏப்ரல் - மே மாதங்களில் இந்தியாவையே உலுக்கிய கொரோனா இரண்டாம் அலைக்கு இந்தத் திரிபின் பரவல் ஒரு முக்கியக் காரணியாக இருந்தது.
 
கொரோனா வைரஸின் டெல்டா வகை திரிபு, அதுவரை இருந்த கொரோனா திரிபுகளை (ஆல்ஃபா, பீட்டா, காமா) விடவும் அதிக பரவல் தன்மை கொண்டது என்றும், நோய் தொற்றை உண்டாக்குவதில் அதிக தீவிரத்தன்மை கொண்டது என்றும் அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் அறிக்கை கூறியது.
 
சார்ஸ், இபோலா, சீசன் ஃபுளு, ஆகியவற்றுக்கும் காரணமான வைரஸை காட்டிலும் இது அதிகம் பரவக் கூடியது என்றும் அந்த அறிக்கை கூறியது மனித உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஆன்டிபாடிகளை எதிர்கொள்ள இதில் உள்ள மரபணு பிறழ்வு உதவுகிறது.
 
டெல்டாவைத் தொடர்ந்து டெல்டா பிளஸ் அல்லது AY.4.2 என்றழைக்கப்படும் இந்த திரிபால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. டெல்டா வகை திரிபு, நோய் தொற்றை அதிகரிப்பதுடன், மருத்துவமனைக்கு செல்லும் அளவிற்கு தீவிரமாக்கும் தன்மை கொண்டது. 
 
தற்போது பயன்பாட்டில் இருக்கும் கொரோனா தடுப்பூசிகளே, டெல்டா பிளஸ் திரிபுக்கு எதிராகவும் சிறப்பாக வேலை செய்யும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
ஒமிக்ரான் திரிபு
 
கொரோனா வைரஸின் இந்த புதிய திரிபு இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட திரிபுகளிலேயே மிக அதிக எண்ணிக்கையிலான மரபணு பிறழ்வுகளைக் கொண்டது. இந்த புதிய கொரோனா வைரஸ் திரிபில் 50 மரபணு பிறழ்வுகள் உள்ளன என்றும், ஸ்பைக் புரோட்டின் இடையில் 30க்கும் மேற்பட்ட பிறழ்வுகள் உள்ளன.
 
கொரோனா தடுப்பூசிகள் இந்த ஸ்பைக் புரத இழையைத்தான் இலக்கு வைக்கின்றன. அதேபோல மனிதர்களின் உடலுக்குள் ஊடுறுவ கொரோனா வைரஸ் இந்த ஸ்பைக் புரத இழையைத்தான் பயன்படுத்துகின்றது.
 
மனிதர்களின் உடலோடு முதலில் தொடர்பு கொள்ளும் ரெசப்டாரில் 10 பிறழ்வுகள் உள்ளன. உலகை உலுக்கிய கொரோனா வைரஸின் டெல்டா திரிபிலேயே ரெசப்டார்களில் இரண்டு பிறழ்வுகள் மட்டுமே இருந்தன.
 
கொரோனாவின் முந்தைய திரிபுகளை காட்டிலும் ஒமிக்ரான் திரிபு மிதமான அறிகுறிகளை கொண்டதாகவே உள்ளது. டெல்டா திரிபை காட்டிலும் ஒமிக்ரான் மிதமாகத்தான் உள்ளது என உலகளவிலான பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் 30% முதல் 70 % வரை குறைவான அளவிலேயே மருத்துவமனையில் சேர்க்கப்படும் ஆபத்து உள்ளது.
பீட்டா திரிபு
 
பீட்டா திரிபு முதன் முதலில் மே 2020இல் தென்னாப்பிரிக்காவில் கண்டறியபட்டது. இந்தத் திரிபில் இருக்கும் N501Y எனும் மரபணு பிறழ்வு இதை வேகமாகப் பரவும் தன்மை உடையதாக ஆகிறது.
 
E484K எனும் இன்னொரு மரபணு பிறழ்வு மனித உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்திடம் இருந்து தப்ப உதவுகிறது. இதனால் கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தி இருந்தாலும், அதன் மூலம் உடலில் உற்பத்தியான நோய் எதிர்ப்பான்கள் (antibodies) இந்த வகை கொரோனா வைரசை அழிப்பதில் பின்தங்கலாம்.
 
ஒரு நல்ல செய்தி என்னவென்றால் தென்னாப்பிரிக்காவில் கண்டறியபட்ட பீட்டா வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிரமான நோய் பாதிப்புகள் அதிக அளவில் ஏற்படாவில்லை.
 
காமா திரிபு
காமா கொரோனா திரிபு நவம்பர் 2020இல் பிரேசிலில் முதல் முறையாகக் கண்டறியப்பட்டது. காமா கொரோனா திரிபு பீட்டா திரிபை விடவும் அதிகம் பரவும் தன்மையைப் பெரும் வகையிலான மரபணுப் பிறழ்வுகளைப் பெற்றிருந்தது.
 
பீட்டா திரிபில் இருந்த N501Y (வேகமாகப் பரவும் தன்மை), E484K (நோய் எதிர்ப்பு மண்டலத்திடம் இருந்து தப்பித்தல்) ஆகிய மரபணுப் பிறழ்வுகள் காமா திரிப்பிலும் காணப்பட்டன.
 
கவலைக்குரிய திரிபுகள், கவனத்துக்குரிய திரிபுகள் தவிர எப்சிலான், தீட்டா, கப்பா, ஐயோட்டா போன்ற போன்ற பல திரிபுகளையும் உலக சுகாதார நிறுவனம் அவ்வவ்போது ஆய்வுக்கு உள்படுத்தி வருகிறது.
 
இவற்றின் பரவல் இல்லாமல் போனாலோ, தீவிரத் தன்மை சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை என்றாலோ இத்தகைய திரிபுகளை ஆய்வு செய்வதையும், கண்காணிப்பதையும் உலக சுகாதார நிறுவனம் நிறுத்திவிடும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்