"மெடலோடுதான் வருவேன்" என்றார், ஆனால்? இளம் டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வாவின் அதிர்ச்சி மரணம்!

Webdunia
திங்கள், 18 ஏப்ரல் 2022 (13:36 IST)
தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் டேபிள் டென்னிஸ் வீரரான விஸ்வா தீனதயாளன், மேகாலயாவில் நடந்த சாலைவிபத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
மெடலோடு வருவதாகக் கூறிவிட்டுப் போனார். உலகளவில் 100 இடங்களுக்குள் வருவதே அவரது கனவாக இருந்தது. இப்படி நடக்கும் என நாங்கள் நினைக்கவில்லை' எனக் கலங்குகின்றனர், அவரது பயிற்சியாளர்கள்.
 
சென்னை அண்ணாநகரைச் சேர்ந்தவர் விஸ்வா தீனதயாளன். இவரது தந்தை தீனதயாளன் வர்த்தகம் செய்து வருகிறார். நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்த விஸ்வாவுக்கு சிறு வயதில் இருந்தே டேபிள் டென்னிஸ் விளையாட்டில் மிகுந்த ஆர்வம். இதையடுத்து, தமிழக டேபிள் டென்னிஸ் அசோசியேஷனில் சேர்ந்து பயிற்சி பெற்று வந்தார்.
 
இந்நிலையில், ஷில்லாங்கில் 83 ஆவது சீனியர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி இன்று (18-4-2022) தொடங்க உள்ளது. இதில் பங்கேற்பதற்காக நேற்று காலை 9 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து குழுவினருடன் விஸ்வா கிளம்பியுள்ளார். அசாமில் 12 மணிக்கு விமானம் தரையிறங்கியுள்ளது. பின்னர், கௌகாத்தியில் இருந்து காரில் சென்றபோது ஷாங்பங்க்ளா என்ற இடத்தில் மதியம் 1.50 மணியளவில் எதிரே வந்த 12 சக்கரங்களைக் கொண்ட ட்ரக் ஒன்று விஸ்வா பயணித்த கார் மீது மோதியது. இந்த விபத்தில் கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விஸ்வாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அவர் உயிரிழந்துவிட்டதாக அங்கிருந்த மருத்துவர்கள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இந்த விபத்தின்போது விஸ்வாவுடன் பயணித்த கிஷோர்குமார், அபினாஷ் பிரசன்னாஜி, ரமேஷ் ஆகியோருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விஸ்வாவின் உடலைப் பெறுவதற்காக அவரது தந்தை மேகாலயா சென்றுள்ளார். கடந்த 17 ஆம் தேதி சென்னை விமான நிலையத்தில் இருந்து விஸ்வா கிளம்பிய அடுத்த சில மணிநேரங்களில் உயிரிழந்ததாக வெளியான தகவலை அவரது குடும்பத்தினாராலும் பயிற்சியாளர்களாலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
 
விஸ்வாவின் மரணத்துக்கு இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு இரங்கல் தெரிவித்துள்ளது. மேகாலயா முதல்வர் கான்ராட் சர்மா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ` கனவுகளை சுமந்து கொண்டிருந்த விஸ்வா தீனதயாளன் சாலை விபத்தில் உயிரிழந்தது வேதனையளிக்கிறது. விஸ்வாவின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதுதொடர்பான நடைமுறைகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்' எனப் பதிவிட்டுள்ளார். தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் விஸ்வாவின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து அவரது குடும்பத்துக்கு பத்து லட்ச ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார் ஸ்டாலின்.
 
`` விஸ்வா மரணத்தை இன்னமும் எங்களால் ஏற்க முடியவில்லை. அவரைப் போல திறமையான டேபிள் டென்னிஸ் வீரரைப் பார்க்க முடியாது. சிறு வயதில் இருந்தே தொடர்ச்சியாக தேசிய அளவில் சாம்பியனாக இருந்தார். சப்-ஜுனியர், ஜுனியர் ஆகிய பிரிவுகளிலும் அவர் சாம்பியனாக இருந்தார். தமிழ்நாட்டுக்காக பத்து ஆண்டுகளாக தொடர்ந்து விளையாடி வந்தார்.
 
இந்தியாவில்19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் அவர் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். பயிற்சிகளை நிறைவு செய்துவிட்டு 17 ஆம் தேதி காலை விமான நிலையம் சென்று அவரை வழியனுப்பிவிட்டு வந்தோம். ஆனால், அடுத்த சில மணிநேரங்களில் அவர் இறந்துவிட்டதாகத் தகவல் வந்தது. இன்னமும் இந்தத் துயரத்தை எங்களால் ஏற்க முடியவில்லை'' என்கிறார், தமிழக டேபிள் டென்னிஸ் அசோசியேசன் செயலாளர் செல்வக்குமார். இவரது பயிற்சி மையத்தில்தான் சிறு வயதில் இருந்தே விஸ்வா பயிற்சி பெற்று வந்துள்ளார்.
``விபத்து எப்படி நடந்தது?'' என்றோம். `` தமிழ்நாடு ஆடவர் மற்றும் பெண்கள் குழுவினர் கௌகாத்தி சென்றுள்ளனர். அங்கிருந்து சாலை வழியாக ஷில்லாங் செல்ல வேண்டும். இதற்காக மூன்று கார்களில் பயணித்துள்ளனர். `யாரும் தனியாகப் போகக் கூடாது' எனக் கூறித்தான் அனுப்பினோம். மூன்று கார்களும் வரிசையாக சென்றன. முதல் காரில் ஓட்டுநர் இருக்கைக்குப் பின்புறம் விஸ்வா அமர்ந்துள்ளார். எதிரில் வந்த 12 சக்கரங்கள் கொண்ட ட்ரக், கார் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் கார் ஓட்டுநர் இறந்துவிட்டார். விஸ்வாவுக்கு எங்கேயும் காயங்கள் இல்லை. முதுகெலும்பு, கழுத்து ஆகிய பகுதிகளில் பலத்த அடிபட்டுள்ளது. லாரி டிரைவரும் கார் மீது மோதிவிட்டு புதைகுழியில் விழுந்துள்ளார்'' என்கிறார்.
 
தொடர்ந்து பேசுகையில், `` 83 ஆவது தேசிய அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டியில் மிக்சட் டபுள்ஸ் பார்ட்னர்ஷிப் பிரிவில் செலினா என்பவரோடு விஸ்வா விளையாடுவதாக இருந்தது. `இந்தமுறை மெடலோடுதான் வருவோம். 25 ஆம் தேதி டிக்கெட் புக் பண்ணிருங்க'ன்னு சொல்லிட்டுப் போனார். வாழ்க்கையே டெபிள் டென்னிஸ்தான் என்று வாழ்ந்து வந்தார். அவரது அம்மாவும், `இப்படி ஆயிருச்சே' என கதறி அழுது கொண்டிருக்கிறார். அவரை சமாதானப்படுத்த முடியவில்லை'' என்கிறார்.
 
மேலும், `` 19 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்று தேசிய அளவில் சாம்பியன் ஆக வேண்டும் என நினைத்தார். இதை முடித்துவிட்டு 27 ஆம் தேதி அவர் ஆஸ்திரேலியா செல்வதாக இருந்தது. உலக அளவிலான டேபிள் டென்னிஸ் வீரர்கள் பட்டியலில் 100 இடங்களுக்குள் வரவேண்டும் எனவும் கனவு கண்டார். அதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது'' எனக் கூறி வேதனைப்பட்டார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்