அன்னை தெரசா தொடங்கிய 'தி மிஷனரீஸ் ஆஃப் சேரிட்டி' அமைப்பு வெளிநாட்டு நிதி பெற அனுமதி மறுத்த இந்திய அரசு

Webdunia
செவ்வாய், 28 டிசம்பர் 2021 (13:32 IST)
அன்னை தெரசா தொடங்கிய சேவை அமைப்புக்கு, வெளிநாட்டிலிருந்து நிதி பெறுவதற்கான உரிமத்தை நீட்டிக்க மறுத்துள்ளது இந்திய அரசு.

ஆயிரக்கணக்கான கன்னியாஸ்திரிககளைக் கொண்டுள்ள 'தி மிஷனரீஸ் ஆஃப் சேரிட்டி' என்கிற அமைப்பு, கைவிடப்பட்ட குழந்தைகளுக்கு பராமரிப்பு இல்லங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், மிக மோசமான உடல் நலம் கொண்டோரைப் பராமரிக்கும் இல்லம் போன்றவைகளை நிர்வகித்து வருகிறது.

"எதிர்மறையான தகவல்கள்" வருவதால் அவ்வமைப்பின் பதிவைப் புதுப்பிக்கவில்லை என இந்தியாவின் உள்துறை அமைச்சகம் கிறிஸ்துமஸ் அன்று அறிவித்தது.

நீண்ட காலமாகவே இந்து கடும்போக்குவாதிகள், இது போன்ற அமைப்புகளுக்கு கிடைக்கும் நன்கொடைகளை, மக்களை கிறிஸ்துவ மதத்துக்கு மாற்றும் திட்டங்களில் பயன்படுத்துவதாக குற்றம்சாட்டி வருகின்றனர். அவ்வமைப்போ இக்குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.

வெளிநாட்டு நிதிகளைப் பெறும் உரிமத்தை நீட்டிப்பதற்கான விண்ணப்பம் மறுக்கப்பட்டுள்ளதாகவும், இப்பிரச்னை தீரும் வரை எந்தவித வெளிநாட்டு கணக்குகளையும் தங்கள் அமைப்பு கையாளாது எனவும் திங்கட்கிழமை வெளியான அவ்வமைப்பின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அமைப்பின் வங்கிக் கணக்குகளை அரசு முடக்கி இருப்பதாக, சமீபத்தில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தன் டுவிட்டர் கணக்கில் பதிவிட்டிருந்தார். அப்போது அது கடுமையாக விமர்சிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.

கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் 'தி மிஷனரீஸ் ஆஃப் சேரிட்டி' அமைப்பு, 1950-ல் அன்னை தெரசாவால் தொடங்கப்பட்டது. ரோமன் கத்தோலிக்க கன்னியாஸ்திரியான அவர், மசிடோனியாவை விட்டு, இந்தியாவில் குடியேறினார்.

உலகின் ஆகச் சிறந்த கத்தோலிக்க சேவை அமைப்புகளில் அன்னை தெரசா நிறுவிய 'தி மிஷனரீஸ் ஆஃப் சேரிட்டி' அமைப்பும் ஒன்று. 1979ஆம் ஆண்டு அவரது மனிதாபிமான பணிகளுக்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது.

1997ஆம் ஆண்டு அன்னை தெரசா இந்தியாவில் காலமான, 19 ஆண்டுகள் கழித்து 2016ஆம் ஆண்டில் கிறிஸ்துவ மதத் தலைவராகக் கருதப்படும் போப் பிரான்சிஸால் புனிதர் பட்டம் வழங்கப்பட்டது.

நரேந்திர மோதி தலைமையிலான அரசு, இந்தியாவில் செயல்பட்டு வரும் சேவை அமைப்புகள் மற்றும் அரசு சாரா அமைப்புகளின் வெளிநாட்டு நிதி மற்றும் நன்கொடைகள் தொடர்பாக நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு கொண்டு வரப்பட்ட விதிமுறைகளால் கிரீன்பீஸ் மற்றும் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்புகளின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன.

இந்தியா முழுவதும் பரவலாக மத சிறுபான்மையினர் மீது பல தாக்குதல்கள் நடந்து வருகின்றன.

தென்னிந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் தொடர்ந்து நடந்து வருவதாக 'இவான்ஜலிகல் ஃபெல்லோஷிப் ஆஃப் இந்தியா' கூறுகிறது. கிட்டத்தட்ட சிறுபான்மையினர் மீது 40 அச்சுறுத்தல்கள் அல்லது வன்முறை நிகழ்வுகள் பதிவாகியுள்ளன.

இந்த ஆண்டு, சில இந்து அமைப்பினர் நாட்டின் சில பகுதிகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் மத்தியில் பிரச்சனை செய்தனர். மத ரீதியிலான கூட்டங்களுக்கு வெளியே போராட்டங்களை நடத்தினர், வட இந்தியாவில் ஒரு கிறிஸ்துவ தேவாலயத்தை சேதப்படுத்தினர்.

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் இந்துக்கள் என்றாலும், 2.4 கோடி கிறிஸ்துவர்கள் (மொத்த மக்கள் தொகையில் சுமார் இரண்டு சதவீதத்தினர்) வாழ்ந்து வருகின்றனர். மேலும் உலகிலேயே மிகப் பெரிய எண்ணிக்கையில் கத்தோலிக்க சமூகத்தினர் வாழும் இரண்டாவது பெரிய ஆசிய நாடு இந்தியாதான் (முதலிடம் பிலிப்பைன்ஸ்) என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்துக்களை கிறிஸ்துவத்துக்கும் இஸ்லாத்துக்கும் மாற்ற பிரசாரம் நடப்பதாக குற்றம்சாட்டப்பட்ட சில முயற்சிகளைக் கண்டுபிடிக்க அதிகாரிகள் முயன்றனர். பாரதிய ஜனதா கட்சி ஆளும் பல மாநிலங்களில் திருமணத்துக்காக மதமாற்றத்தை தடை செய்யும் சட்டத்தை நிறைவெற்றியுள்ளன அல்லது நிறைவேற்றுவது குறித்து ஆலோசித்து வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்