உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் 2,095 கோடி ரூபாய் மதிப்பிலான 27 திட்டங்களுக்கு பிரதமர் மோதி நேற்று (டிசம்பர் 23, வியாழக்கிழமை) அடிக்கல் நாட்டினார். அந்நிகழ்ச்சியில் பசு தாய் போன்றது என பேசியதாக தினத்தந்தியில் செய்தி பிரசுரமாகியுள்ளது.
இந்த விழாவில் "பசு மாடு நமக்கு தாய் போன்றது மற்றும் புனிதமானது. பசு மாடுகள், எருமை மாடுகளை கேலி செய்பவர்கள் அந்த கால்நடைகளை நம்பி கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் உள்ளது என்பதை மறந்துவிட்டனர். அனைவருக்குமான வளர்ச்சி மற்றும் அனைவரின் ஆதரவே எங்களுக்கு முக்கியம்" என நரேந்திர மோதி பேசினார்.
403 தொகுதிகளை கொண்ட உத்தர பிரதேச சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரபிரதேசத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் பல்வேறு தரப்பினர் இடையே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சட்டசபை தேர்தலில் ஆளும் பாஜக, சமாஜ்வாதி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் களமிறங்க உள்ளன. ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள பாஜக பல்வேறு நலத்திட்டபணிகளை அறிவித்து வருவதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குண்டா் சட்ட உத்தரவு ரத்து - சென்னை உயர் நீதிமன்றம்
சர்ச்சைக்குரிய வலதுசாரி சமூக ஊடகப் பதிவர் கிஷோா் கே.சுவாமி மீதான குண்டா் தடுப்புச் சட்ட உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தினமணியில் செய்தி வெளியாகியுள்ளது.
முன்னாள் முதல்வா்கள் அண்ணாதுரை, மு.கருணாநிதி உள்ளிட்டோா் குறித்து சமூக வலைதளங்களில் விமா்சித்த கிஷோா் கே.சுவாமியை, கடந்த ஜூன் மாதம் போலீஸாா் கைது செய்தனா். பின்னா், அவா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, ஓராண்டு சிறையில் அடைக்க காவல் ஆணையா் உத்தரவு பிறப்பித்தாா்.
இதை எதிா்த்து அவரது தந்தை கிருஷ்ணசுவாமி சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆட்கொணா்வு வழக்கைத் தொடா்ந்தாா். இந்த வழக்கை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆா்.ஹேமலதா ஆகியோா் விசாரித்தனா். பின்னா், கிஷோா் கே சுவாமியை குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க காவல் ஆணையா் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒமிக்ரான் பரவல் அச்சத்தால் உத்தரப்பிரதேச தேர்தலை தாமதமாக நடத்துங்கள். தேர்தல் நடக்கும் மாநிலங்களில் அரசியல் கூட்டங்கள், தேர்தல் பிரசாரங்கள், பேரணிகளுக்கு தடை விதியுங்கள் என பிரதமர் மோதிக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் அலகாபாத் உயர் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளதாக இந்து தமிழ்த்திசையில் செய்தி வெளியாகியுள்ளது.
ஒரு வழக்கில் பிணை வழங்கக்கோரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி சேகர் குமார் யாதவ் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி "ஒமிக்ரான் பரவலால் இந்தியாவில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனால் மூன்றாவது அலையை எதிர்கொள்வோமோ என்கிற அச்சம் இருக்கிறது.
இரண்டாவது அலையில் லட்சக்கணக்கான மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு பலர் உயிரிழந்தனர். உத்தர பிரதேசத்தில் நடந்த கிராமபஞ்சாயத்து தேர்தல், மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலுக்குப்பின் கொரோனா தொற்று அதிகரித்தது. தொற்று அதிகரிக்க இந்த இரு தேர்தல்களும் காரணாக இருந்தன.
உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ளது. அப்போது தேர்தல் பிரசாரங்கள், அரசியல்கட்சிக் கூட்டங்கள், பேரணிகள் நடக்கும். இதனால், மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. தேர்தல் நேரத்தில் யாரும் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றமாட்டார்கள், சமூக விலகலையும் பின்பற்றமாட்டார்கள்.
ஆதலால், தேர்தல் நடக்கும் மாநிலங்களில் தேர்தலை ஒத்திவைக்கலாம், தேர்தல் காலங்களில் அரசியல் பேரணிகள், கூட்டங்கள் நடத்த தடை விதிக்கலாம். சரியான நேரத்தில் இவற்றைதடுத்து நிறுத்தாவிட்டால், இரண்டாவது அலையைவிட மோசமான விளைவுகளைச் சந்திக்கலாம்.
எனவே, தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரங்கள், பேரணிகள் நடத்த தேர்தல் ஆணையம் தடைவிதித்து, வானொலி, தொலைக்காட்சி மூலம் தேர்தல் பிரசாரம் செய்ய உத்தரவிட வேண்டும்.
தேர்தல் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடத்துவதாக இருந்தால், அதை இரு மாதங்கள் ஒத்திவைக்கலாம். உயிர் இருந்தால் மட்டுமே தேர்தல் பேரணிகள் மற்றும் கூட்டங்கள் நடத்த முடியும் மற்றும் இந்திய அரசியலமைப்பின் 21 ஆவது பிரிவின் கீழ் வாழும் உரிமையும் வழங்கப்பட்டுள்ளது. தடுப்பூசி குறித்து பிரதமர் மோதி செய்து வரும் பிரசாரங்கள் மற்றும் முயற்சிகளுக்கு பாராட்டுகள். கொரோனா தொற்றைக் கருத்தில் கொண்டு தேர்தல் பிரசாரங்கள், பேரணிகள், கூட்டங்கள் நடத்துவதை நிறுத்த பிரதமர் மோதியை நீதிமன்றம் கேட்டுக்கொள்கிறது" என நீதிபதி தெரிவித்ததாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.