மனித மலத்திற்கு இருக்கும் அபார சக்தி குறித்து உங்களுக்கு தெரியுமா?

Webdunia
திங்கள், 7 பிப்ரவரி 2022 (11:59 IST)
நமது அன்றாட கடமைகளில் ஒன்று காலைக் கடன் கழிப்பது. உலகில் உள்ள அனைவரும் மலம் கழிக்கிறார்கள் ஆனால் சிறு குழந்தைகளை தவிர அல்லது அவர்களின் பெற்றோரை தவிர அதுகுறித்து வெளிப்படையாக யாரும் பேசுவதில்லை.
 
மனிதர்களின் மலம் உலகின் மிகப்பெரிய பிரச்னைகளுக்கு தீர்வாகவுள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா?
 
சராசரியாக ஒரு வருடத்திற்கு ஒரு மனிதர் 730 லிட்டர் சிறுநீர் கழிக்கிறார்; 91 கிலோ மலத்தை வெளியேற்றுகிறார். ஆனால் இதனால் கிடைக்கும் பயன்களை நாம் மறந்துவிட்டோமா?
 
மலம் கழிக்க உதவியவர் உயரிய பதவியில்
 
பழங்கால ரோமானிய காலத்தில் எந்த மனிதனின் கழிவும் வீணாக போனதில்லை.மலம் வீட்டுத்தோட்டங்களில் உரமாக பயன்படுத்தப்பட்டப்பட்டது. சிறுநீர், துணி தயாரிக்க பயன்பட்டது.
 
இங்கிலாந்தின், ஹென்ரி ஏழாம் மன்னர் காலத்தில், நாட்டின் உயரிய பதவி என்ன தெரியுமா?
 
மன்னருக்கு மலம் கழிப்பதில் உதவி செய்பவர்களின் பதவிதான் உயரிய பதவி. மன்னரின் கவனத்தை பெற மலம் கழித்த பின் அவரின் பின்புறத்தை சுத்தம் செய்வது ஒரு நல்ல யோசனையாகதான் அந்த சமயத்தில் இருந்தது.
 
மனிதர்களின் மலம் இரவோடு இரவாக உள்ளூர் விவசாயிகளுக்கு விற்கப்பட்டது. சிறுநிர் சேகரிக்கப்பட்டு லெதர் பொருட்களை மிருதுவாக்க பயன்படுத்தப்பட்டது.
இன்றைய காலத்தில் ஆற்றலுக்கான தேவை
 
நமது முன்னோர்களின் கழிவறை அணுகுமுறையிலிருந்து நாம் பலவற்றை கற்றுக் கொள்ளலாம்.
 
கழிவிலிருந்து ஆற்றல் தயாரிப்பது சூரிய சக்தியை போன்றோ அல்லது காற்றாலையை போன்றோ நிரந்தரமற்றது இல்லை. உடலுக்கு தேவையான நார்ச்சத்தை எடுத்து கொண்டால் எந்த சிரமமும் இல்லாமல் மலம் கழிக்கலாம்.
 
கழிவு நீர் சுத்தீகரிக்கப்பட்டு மீதமிருக்கும் சக்கையிலிருந்து மீத்தேன் தயாரிக்கப்படுகிறது. நவீன சுத்தீகரிப்பு இயந்திரங்கள் இந்த சக்கையில் பாக்டீரியாவை சேர்க்கிறது இதன்மூலம் பயோ கேஸ் உருவாகிறது. இதை வீட்டிற்கோ அல்லது வாகனங்களுக்கோ எரிபொருளாக பயன்படுத்தலாம். பெட்ரோல் மற்றும் டீசலை காட்டிலும் சுத்தமான ஆற்றல் இது.
 
மனித மலத்தால் பல நன்மைகள் இருந்தாலும், சிறுநீருக்குதான் முதல் இடம். உலகில் 72 சதவீத தண்ணீர் விவசாயத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. ஒரு பக்கம் மக்கள் தொகை அதிகரித்து கொண்டே செல்கிறது. மறுபக்கம் பருவநிலை மாற்ற பிரச்னை. சில நாடுகளில் தண்ணீர் இல்லாத காரணத்தால் அதிகப்படியான இடம் பெயர்வும் நடைபெறுகிறது. பிரிட்டனில் நாள் ஒன்றுக்கு ஒரு மனிதர் 2 லிட்டர் சிறுநீர் கழிக்கிறார். அதுமட்டுமல்லாமல் 140 லிட்டர் நீரை செலவு செய்கிறார்.
 
நீரை மறு சுழற்சி செய்வது பேராபத்துகளில் இருந்து நம்மை காக்குமா?
நிச்சயமாக. இதற்கான தொழில்நுட்பம் ஏற்கனவே பயன்பாட்டில்தான் உள்ளது. இஸ்ரேலில் கிட்டதட்ட 90 சதவீத பயன்படுத்தப்பட்ட நீர் மறுசுழற்சிக்கு உட்படுத்தப்பட்டு அது விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. இது 56 ஆயிரம் ஒலிம்பிக் நீச்சல் குளங்களின் அளவு.
விவசாயம் குறித்து பேசும்போது பாஸ்பரஸ் குறித்தும் பேசுவோம். ஒவ்வொரு உயிரினத்திற்கும் உயிர் வாழ பாஸ்பரஸ் தேவைப்படுகிறது. ஆனால் அதிகப்படியான சுரங்க நடவடிக்கைகளால் பாஸ்பரஸ் குறைந்து கொண்டே வருகிறது. இந்த இயற்கை வளம் மீண்டும் உற்பத்தி ஆவது கடினம். அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் அடுத்த தலைமுறையில் பாஸ்பரஸ் விநியோகம் இல்லாமல் போகலாம்.
 
இந்த சத்து இல்லாமல் விவசாயம் செய்வது கடினம். இன்றைய காலகட்டத்தில் உற்பத்தி ஆகும் உணவில் பாஸ்பரஸ் இல்லாமல் போனால் பாதி அளவே உற்பத்தி செய்யப்படும்.
 
தீர்வு என்ன?
நாம் நமது முன்னோர்களை பின்பற்றி கழிவுநீரை மீண்டும் மண்ணில் செலுத்தலாம். மலத்தை உரமாக்கும் உலர் கழிவறைகள் மிகப்பெரிய ஒரு தீர்வு.
 
தற்போதைய சூழலில் 4.2 பில்லியன் மக்கள் பாதுகாப்பான கழிப்பறை இல்லாமல் வாழ்கின்றனர். எனவே கழிவறைகளை மாற்றி வடிவமைப்பது அவர்களுக்கும் கழிவறை என்பது சாத்தியமாக்கும்.
 
அதேபோன்று நீர் இல்லாமல் பயன்படுத்தப்படும் கழிவறையை புதுயுக்தியாக வடிவமைப்பதன் மூலம் ஒவ்வொரு நாளும் உயிரிழக்கும் 800 குழந்தைகளின் இறப்பை தடுக்கலாம்.
 
இம்மாதிரியான புதிய வகை கழிவறைகள் உயிர்காக்கும் ஒன்றாக மட்டுமல்ல லாபம் தரும் ஒன்றாகவும் இருக்கும் என மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் கணித்துள்ளார்.
 
2030ஆம் ஆண்டு வாக்கில் கழிவறை என்பது ஆறு பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான சந்தையாக மாறும். இதற்காக செலவழிக்கப்படும் ஒவ்வொரு டாலருக்கும் ஐந்து டாலர்கள் லாபம் வரும்.
 
மலம் கழிப்பது என்று கூறும் போது உங்களுக்கு சிரிப்பு வரலாம் அல்லது முகத்தை சுழிக்கலாம் ஆனால் நாம் உடனடியாக சிந்தித்து செயல்பட்டால் மனித மலம் இந்த பூமியை காக்க உதவலாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்