சிலம்பரசன் பற்றிய சர்ச்சையும் அறியாத சில தகவல்களும்!

வியாழன், 3 பிப்ரவரி 2022 (10:18 IST)
பிப்ரவரி 3ஆம் தேதி - தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் சிம்புவின் 38வது பிறந்தநாள். தனது தந்தையும் இயக்குநருமான டி. ராஜேந்திரர் இயக்கத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவில் தனக்கென ஓரிடத்தை தக்க வைத்திருக்கிறார் அவர்.
 
நடிகர், பாடகர், இயக்குநர், பாடலாசிரியர் என பன்முகம் கொண்ட சிலம்பரசன் தனது திரைப்பயணத்தில் சாதித்தவை, அவர் எதிர்கொண்ட சவால்கள், தற்போது அவருடைய பயணம் என்பது குறித்து இங்கே தொகுத்து வழங்குகிறோம்.
• குழந்தை நட்சத்திரமாக தனது ஒரு வயதில் இருந்தே நடிக்க ஆரம்பித்து விட்டார் சிம்பு என்கிற சிலம்பரசன். குழந்தை நட்சத்திரமாக கிட்டத்தட்ட 12 படங்களில் அவர் நடித்திருக்கிறார்.
 
• கடவுள் நம்பிக்கை அதிகம் உள்ள சிலம்பரசனுக்கு பிடித்த கடவுள் 'சிவன்'.
 
• 'காதல் அழிவதில்லை' படம் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானவர், பின்பு 'அலை', 'கோவில்', 'குத்து' என கிட்டத்தட்ட ஒரே மாதிரியான காதல் கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வந்தார். 'மன்மதன்' படம் மூலமாக திரைக்கதை ஆசிரியர் ஆனார் சிம்பு. பிறகு இயக்குநராக இவர் இயக்கிய 'வல்லவன்' திரைப்படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
 
• வழக்கமான ஹீரோயிசம், இளமை துள்ளும் காதல் காட்சிகள் என இருந்த சிலம்பரசனின் 'விண்ணைத்தாண்டி வருவாயா' திரைப்படம் அவருடைய முதிர்ச்சியான நடிப்புக்காகவும் கதைக்காகவும் இப்போதும் ரசிகர்கள் பலரது விருப்பப் பட்டியலில் இருக்கிறது. மேலும் காதல் படங்கள் என்றாலே தன்னுடைய முதல் விருப்ப தேர்வு எப்போதும் இயக்குநர் கெளதம் மேனன் தான் என்பார்.
 
• ஆனால், 2010ஆம் வருடத்திற்கு பிறகு நடிகர் சிம்புவின் பெயர் சொல்லும் படியாக வெற்றி படங்கள் எதுவும் வரவில்லை. 'வானம்', 'வாலு', 'அச்சம் என்பது மடமையடா', 'செக்க சிவந்த வானம்' என கிட்டத்தட்ட அந்த பத்து வருடங்களும் வெளியான சிம்புவின் பெரும்பாலான படங்கள் பெரிதாக ரசிகர்களிடையே வரவேற்பை பெறவில்லை.
குறிப்பாக 'அச்சம் என்பது மடமையடா', 'செக்க சிவந்த வானம்' என இந்த படங்களில் உடல் எடை அதிகரித்து இருந்தார். அதிலும் 'செக்க சிவந்த வானம்' படத்தில் அதிகரித்திருந்த உடல் எடையால் ஒரு காட்சியில் அவர் ஓடுவதற்கு சிரமப்பட அந்த காட்சி எல்லாம் சமூக வலைதளங்களில் கேலிக்குள்ளாயின.
 
• அடிக்கடி உங்களை சுற்றி சர்ச்சைகள் வருகிறதே என்று பேட்டி ஒன்றில் சிம்புவிடம் கேட்க, 'சர்ச்சைகள் இருந்தால்தான் சிம்பு! அது இல்லை என்றால் எனக்கே அயர்ச்சியாக இருக்கும்' என்றார் சிரித்து கொண்டே. அதேபோல, பிறரை புண்படுத்தும் படியாக மீம் என்ற பெயரில் வரும் விஷயங்கள் சுத்தமாக பிடிக்காது என்பார். சிம்புவுக்கு அவர் தங்கை இலக்கியா மீது அதிக பாசம் உண்டு. தன்னுடைய நண்பர்கள், பிரச்னைகள் என எல்லாவற்றையும் அவருடன் பகிர்ந்து கொள்வார். அதேபோல தன்னுடைய காதல் தோல்வி கதைகளை எல்லாம் ஜாலியாக நடிகை த்ரிஷாவிடம் அதிகம் பகிர்ந்து கொள்வேன் என ஒரு பேட்டியில் தெரிவித்து இருக்கிறார் சிம்பு.
 
• ஷாப்பிங் செய்வது என்றால் மிகவும் பிடிக்கும். பெண்களுக்கே சவால் விடும் அளவுக்கு ஷாப்பிங் செய்வது குறிப்பாக துணிகள் வாங்க மிகவும் பிடிக்கும் என்பார்.
 
• காதல் இல்லாமல் யாரும் இங்கே இருக்க முடியாது என்பவர் இப்போது தான் சந்தித்த காதல்களால் மனது பக்குவமாகி இருக்கிறது என காதல் குறித்தான கேள்விக்கு பேட்டி ஒன்றில் பதில் சொல்லி இருக்கிறார்.
• சிம்புவுக்கு பிடித்த இசையமைப்பாளர்களில் யுவன் ஷங்கர் ராஜாவும் ஒருவர். 'எனக்கு திருமணத்திற்கு பெண் பார்க்க வேண்டும். உங்கள் ராசி, லக்கனம் என்னவென்று சொல்லுங்க பிரதர். அந்த அளவிற்கு உங்களுக்கும் எனக்கும் பொருந்தி போகிறது' என 'மாநாடு' மேடையில் கலகலப்பாக கூறினார்.
 
 கிட்டத்தட்ட 10 வருடங்கள் தனது வெற்றி படத்திற்காக காத்திருந்தவருக்கு வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான 'மாநாடு' திரைப்படம், நல்லதொரு மறுவரவாக அமைந்தது.
 
• கொரோனா காலகட்டத்தில் உடல் எடை முற்றிலுமாக குறைத்து அப்படியே முற்றிலும் வேறொரு சிலம்பரசனாக வந்தார். இதற்காக கொரோனா காலத்தில் வீட்டை சுற்றி ஓடுவது, கேரளாவில் சிகிச்சை, முறையான உடற்பயிற்சி என இந்த மாற்றத்திற்காக சிம்பு கொடுத்த உழைப்பு என அத்தனையும் தன்னுடைய சமூக வலைதளங்களில் காணொளியாக வெளியிட்டார் சிம்பு.
 
• கடந்த 2017ல் வெளியான 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் சம்பள பிரச்சனை காரணமாக சிம்புவின் அடுத்தடுத்த படங்கள் வெளியாவதில் சிக்கல் இருப்பதாக அவரது தந்தை டி. ராஜேந்தர் மற்றும் தாயார் உஷா பத்திரிகையாளர்களை சந்தித்து கொடுத்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியது.
 
• இதே பிரச்னையை சொல்லி என்னுடைய படத்தை வெளியிட விடாமல் பிரச்னை செய்கிறார்கள். பிரச்னைகளை நான் பார்த்து கொள்கிறேன். என்னை நீங்கள் பார்த்து கொள்ளுங்கள் என 'மாநாடு' திரைப்படத்தின் முன்னோட்ட விழா மேடையில் சிம்பு ரசிகர்கள் முன்னிலையில் அழுத காணொளி சமூக வலைதளங்களில் வைரலானது.
• 'அச்சம் என்பது மடமையடா', 'செக்க சிவந்த வானம்' பட சமயங்களில் உடல் எடை அதிகம் இருந்ததற்காக தான் சமூக வலைதளங்களில் கேலி செய்யப்பட்டதையும் உடல் எடை அதிகம் இருக்கும் தன்னையே தன்னால் பார்க்க முடியவில்லை ஒரு இடத்தில் இருந்து ஓட முடியவில்லை என மன அழுத்தத்திற்கு சென்று அந்த சமயத்தில் துன்பப்பட்டதாக பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார் சிலம்பரசன். அதன் பின்பே தன்னுடைய உடல் எடையை தீவிரமாக குறைத்ததாகவும் கூறியிருக்கிறார்.
 
• 'லிட்டில் சூப்பர் ஸ்டார்', 'யங் சூப்பர் ஸ்டார்' என தன் பெயருக்கு முன்னால் எந்தவொரு பெயரும் வேண்டாம் வெறும் சிலம்பரசன் என்று மட்டுமே இருந்தால் போதுமானது என்று அறிவித்தவர் அதன்பின்பு அவரின் ஆன்மீக சிந்தனையையும் கருத்தில் கொண்டு 'ஆத்மன்' சிலம்பரசன் என சமூக வலைதளங்களில் பெயர் மாற்றினார். 'ஆத்மன்' என்பது எப்படி வாழ வேண்டும் என்ற வாழ்க்கை முறை என்கிறார் சிம்பு.
 
• இப்போது அவர் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்து கொண்டிருக்கும் 'பத்து தல' படத்தில் இருந்து அறிவிப்பு, 'வெந்து தணிந்தது காடு' படத்தில் இருந்து அறிவிப்பு வரும் என படக்குழு அறிவித்து இருக்கிறது. தற்போது காமன் டிபி, ரசிகர்களின் வாழ்த்து என சமூக வலைதளங்களில் நடிகர் சிலம்பரசனின் பிறந்தநாளை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்