கிரிக்கெட்: ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்தியா முதலிடத்தை இழந்தது ஏன்?

Webdunia
வெள்ளி, 1 மே 2020 (15:28 IST)
ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் முதலிடத்தை 2016 அக்டோபருக்கு பிறகு முதல்முறையாக இந்தியா இழந்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்ட டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் முதலிடத்தை 116 புள்ளிகள் பெற்ற ஆஸ்திரேலியா பிடித்துள்ளது. அடுத்த நிலையில் நியூசிலாந்தும் (115 புள்ளிகள்), 114 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தையே இந்தியா பிடித்துள்ளது.

2016-17 காலகட்டத்தில் முதலிடத்தை பிடித்த இந்தியா 12 டெஸ்ட்களில் வென்றது. ஒரு போட்டியில் மட்டுமே தோற்றது.

அந்த தரவுகளை தற்போதைய தரவரிசை மதிப்பீட்டில் இருந்து நீக்கியுள்ளனர். இதனால்தான் முதலிடத்தை இந்தியா இழந்துள்ளதாக கூறப்படுகிறது.

அண்மைய தரவரிசை பட்டியல் மதிப்பீட்டில், 2019 மே மாதத்துக்கு பிறகு நடந்த போட்டிகளுக்கு 100 சதவீதமும், அதற்கு முந்தைய இரண்டு ஆண்டுகளில் நடந்த போட்டிகளுக்கு 50 சதவீதமும் மதிப்பீடு செய்ய கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
அதேவேளையில் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் லீக்கில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது.

ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் தொடர்ந்து இங்கிலாந்து நீடிக்க, இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.

இங்கிலாந்து 127 புள்ளிகளும், இந்தியா 119 புள்ளிகளும் பெற்றுள்ளன.
டி20 போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் 278 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா முதலிடத்தை பெற்றுள்ளது.

2011-ஆம் ஆண்டில் அணிகளுக்கான தரவரிசை பட்டியல் அறிமுகமானதில் இருந்து முதல்முறையாக ஆஸ்திரேலியா டி20 போட்டி பிரிவுகளுக்கான தரவரிசை பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டி20 போட்டிகளுக்கான அண்மைய தரவரிசை பட்டியலில் 268 புள்ளிகளை பெற்ற இங்கிலாந்து இரண்டாவது இடத்தையும், 266 புள்ளிகள் எடுத்துள்ள இந்தியா மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.

கொரோனா வைரஸ் பாதிப்பால் கடந்த 2 மாதங்களாக உலகெங்கும் கிரிக்கெட் போட்டிகள் எதுவும் நடைபெறாத நிலையிலும், அடுத்த 6 மாதங்களுக்கு கிரிக்கெட் போட்டிகளுக்கு வாய்ப்பில்லை என்ற கருத்துக்கள் இடம்பெற்று வரும் சூழலில் இன்று வெளிவந்த ஐசிசி தரவரிசை பட்டியல் சமூகவலைத்தளங்களில் கிரிக்கெட் ரசிகர்களிடையே விவாதங்களை தொடங்கி வைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்