வேங்கைவயல் சம்பவம்.. இன்றோடு 2 ஆண்டுகள் நிறைவு! இதுதான் திராவிட மாடல்..? - பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்!

Prasanth Karthick

வியாழன், 26 டிசம்பர் 2024 (15:13 IST)

வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவுகள் கலக்கப்பட்டு இன்றோடு 2 ஆண்டுகள் முடிந்து விட்டதை சுட்டிக்காட்டியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், இதுவரை இதுகுறித்து அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததை நினைத்து திராவிட மாடல் அரசு தலைகுனிய வேண்டும் என கூறியுள்ளார்.

 

 

இதுகுறித்து விளக்கமாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர் “புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட கொடிய நிகழ்வு நடந்து இன்றுடன் இரு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. ஆனால், இந்த விவகாரத்தில் குற்றம் செய்தது யார்? என்பதைக் கூட இன்னும் கண்டுபிடிக்க முடியாமல் தமிழக காவல்துறை திணறிக் கொண்டிருக்கிறது. ஸ்காட்லாந்து யார்டு காவல்துறைக்கு இணையான காவல்துறை என்று போற்றப்பட்ட தமிழக காவல்துறையால், இந்த விவகாரத்தில் துப்புதுலக்க முடியவில்லை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. காவல்துறையின் கைகள் கட்டப்பட்டிருப்பது தான் இந்த வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்படாததற்கு காரணம்.

 

2022&ஆம் ஆண்டு இதே திசம்பர் 26&ஆம் தேதி தான் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த்  தொட்டியில் மனிதக்கழிவுகள் கலக்கப்பட்டன. அதற்கு அடுத்த நாளே விசாரணை தொடங்கியது. பின்னர் சிபிசிஐடி விசாரணைக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. மொத்தம் 31 பேருக்கு டி.என்.ஏ ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 3 பேருக்கு குரல் மாதிரி ஆய்வு செய்யப்பட்டது. ஆனாலும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அதைத் தொடர்ந்து வழக்கின்  விசாரணை அதிகாரிகள் மாற்றப்பட்டனர். கடைசியாக சில மாதங்களுக்கு முன் தஞ்சாவூர் மாவட்ட சி.பி.சி.ஐ.டி அதிகாரி கல்பனா தத் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
 

ALSO READ: 2023 - 24ஆம் ஆண்டில் பாஜக, காங்கிரஸ், திமுக பெற்ற நன்கொடைகள் எத்தனை கோடி? ஆச்சரிய தகவல்..!

அவர் தீவிரமாக விசாரணை நடத்தியும் எந்த பயனும் ஏற்படவில்லை. பல மாதங்களாகியும் இந்த வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய முடியவில்லையா? என சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. அதன் பிறகும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. குற்றப்பத்திரிகை எப்போது தாக்கல் செய்யப்படும்? என்று நீதிமன்றம் வினா எழுப்பியும் அதற்கு காவல்துறை பதிலளிக்கவில்லை. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கடந்த ஓராண்டிற்கும் மேலாக ஒவ்வொரு மாதமாக அவகாசம் கோரிக் கொண்டிருக்கிறது காவல்துறை.

 

வேங்கைவயலில் பட்டியலின மக்களுக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதிக்கு 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் நீதி வழங்க முடியாததற்காக திராவிட மாடல் அரசு தலைகுனிய வேண்டும். வேங்கை வயல் விவகாரத்தில் குற்றவாளிகள் யார்? என்பது ஆட்சியாளர்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனால், அவர்களைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகளில் தான் திராவிட மாடல் அரசு ஈடுபடுகிறதே தவிர, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்க அக்கறை காட்டவில்லை. இது தான் திராவிட மாடலா? திமுக ஆட்சியில் பட்டியலின மக்களுக்கு தொடர்ந்து அநீதி இழைக்கப்பட்டு வருகிறது. பட்டியலின மக்களின் நலனுக்காக ஒதுக்கப்பட்ட நிதி வேறு காரியங்களுக்கு திருப்பி விடப் படுகிறது; பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்பட்ட 10 ஆயிரத்திற்கும் கூடுதலான பின்னடைவுப் பணியிடங்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிரப்பப்படாமல் உள்ளன. இவை ஓராண்டில் நிரப்பப்படும் என திமுக அரசு அறிவித்து 2 ஆண்டுகள் ஆகியும் கூட அந்த இடங்கள் நிரப்பப் படவில்லை. பட்டியலின மக்களுக்கு தொடர்ந்து அநீதி இழைத்து வரும் திமுக அரசுக்கு அந்த மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். வேங்கைவயல் வழக்கில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாவிட்டால், வழக்கை சி.பி.ஐ வசம் தமிழக அரசு ஒப்படைக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்