பகத் சிங்: தூக்கு கயிற்றை முத்தமிட்ட மாவீரன் உடலை பாதி எரித்து ஆற்றில் வீசிய ஆங்கிலேயர்கள்

Webdunia
வியாழன், 25 மே 2023 (19:41 IST)
(பிபிசி கடந்த வாரம் முதல் இளம் வயது, உயர்ந்த வாழ்க்கை; என்ற புதிய வாராந்திர தொடரைத் தொடங்கியுள்ளது. அதிக புகழ் சம்பாதித்த, ஆனால் 40 வயதிற்கு முன்பே இந்த உலகில் இருந்து விடைபெற்றவர்களின் கதை இதில் வழங்கப்படுகிறது. இதன் இரண்டாவது. அத்தியாயத்தில் பகத் சிங்கின் கதை உங்களுக்காக.)
 
அவர் தூக்கிலிடப்பட்ட நேரம் சற்று அசாதாரணமானது.
 
மார்ச் 23ஆம் தேதி மாலை 7:30 மணிக்கு சூரியன் மறைந்திருந்தது.
 
லாகூர் சிறைச்சாலையின் தலைமைக் கண்காணிப்பாளரான மேஜர் பிடி சோப்ரா, 23 வயதான மெலிந்த இளைஞர் மற்றும் அவரது இரண்டு தோழர்களுடன் தூக்கு மேடையை நோக்கி நடந்து கொண்டிருந்தார்.
 
இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த சிறை துணைக் கண்காணிப்பாளர் முகமது அக்பர் கான் தனது கண்ணீரை அடக்கிக் கொள்ள கடுமையாக முயன்றார்.
 
தூக்கு மேடையை நோக்கி நகர்ந்துகொண்டிருந்த அந்த நபர் அந்த நேரத்தில் இந்தியாவின் மிகவும் பிரபலமான ஒருவராக மாறியிருந்தார்.
 
பகத் சிங்குடன் அவரது தோழர்களான சுக்தேவ் மற்றும் ராஜ்குருவும் நடந்து சென்றுகொண்டிருந்தனர்.
 
தாங்கள் மூவரும் அரசியல் கைதிகள் என்பதால் சாதாரண குற்றவாளிகளைப் போல தாங்கள் தூக்கிலிடப்படாமல், சுட்டுக் கொல்லப்பட வேண்டும் என்று பிரிட்டிஷ் அரசிடம் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
 
பகத் சிங்: ஜேம்ஸ் ஸ்காட்டுக்கு பதிலாக ஜான் சாண்டர்ஸ் கொல்லப்பட்டது எப்படி?
 
ஆனால் அவர்களது கோரிக்கையை பிரிட்டிஷ் அரசு நிராகரித்தது. நடுவில் பகத்சிங் நடந்து கொண்டிருந்தார். சுக்தேவ் அவரது இடதுபுறமும், ராஜகுரு வலதுபுறமும் இருந்தனர்.
 
’தில் ஸே நா நிக்லேகி வதன் கி உல்ஃபத், மேரி மிட்டி ஸே பி குஷ்பு எ வதன் ஆயேகி’ என்ற பாடலை பகத் சிங் பாடிக்கொண்டிருந்தார். ‘நான் இறந்தாலும் என் மனதிலிருந்து நாட்டின் மீதுள்ள அன்பு மறையாது, நாட்டின் மணம் என் மண்ணிலிருந்தும் வரும்' என்பது அதன் பொருள்.
 
பகத் சிங் தூக்கில் போடப்படுவதற்கு முன் தூக்குக் கயிற்றை முத்தமிட்டார்.
 
"இந்தத் தருணத்தை உணர்வதற்காக பகத் சிங், அதை நாட்டிற்காகத் தியாகம் செய்தார். அவர் இந்தத் தருணத்திற்காக காத்திருந்தார். இதுகுறித்து திட்டமிடப்பட்டது.
 
தூக்கு கயிற்றை அவர் தாமே கழுத்தில் மாட்டிக்கொண்டார். அதற்குப் பிறகு ராஜகுரு மற்றும் சுக்தேவ் ஆகியோருடைய கழுத்திலும் கயிறு அணிவிக்கப்பட்டது” என்று சத்விந்தர் ஜஸ் தனது 'தி எக்ஸிகியூஷன் ஆஃப் பகத் சிங்' என்ற புத்தகத்தில் எழுதுகிறார்.
 
கழுத்தில் போடப்படுவதற்கு முன்பு அவர்களும் கயிற்றை முத்தமிட்டனர். அவர்களது கை, கால்கள் கட்டப்பட்டன.
 
"தூக்கில் இடுபவர் ’யார் முதலில் செல்வார்கள்’ என்று கேட்டார். நான் முதலில் செல்வேன் என்று சுக்தேவ் பதிலளித்தார். தூக்கிலிடுபவர் ஒன்றன்பின் ஒன்றாக மூன்று முறை விசையை இழுத்தார். மூவரின் உடல்களும் தூக்கு மேடையில் நீண்ட நேரம் தொங்கிக் கொண்டிருந்தன,” என்று குல்தீப் நய்யர் தனது 'வித்தவுட் ஃபியர், தி லைஃப் அண்ட் ட்ரையல் ஆஃப் பகத் சிங்' என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்.
 
இதையடுத்து அங்கிருந்த டாக்டர்கள் அவர்கள் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். அந்த இளம் புரட்சியாளர்களின் துணிச்சலால் மிகவும் கவரப்பட்ட அங்கிருந்த சிறை அதிகாரி ஒருவர், அவர்களின் சடலங்களை அடையாளம் காண மறுத்துவிட்டார். உடனடியாக அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
 
இவர்கள் மூவரின் இறுதிச் சடங்கையும் சிறையிலேயே நடத்தலாம் என முதலில் திட்டம் போடப்பட்டிருந்தது. புகை எழும்புவதைக் கண்டால் வெளியில் நின்றுகொண்டிருக்கும் மக்கள் ஆவேசமடைவார்கள் என்ற அச்சம் காரணமாக இறுதிச் சடங்குகளை சட்லஜ் நதிக்கரையில் நடத்த முடிவு செய்யப்பட்டது.
 
இரவோடு இரவாக சிறையின் பின்புறம் இருந்த சுவர் உடைக்கப்பட்டது. அங்கிருந்து ஒரு லாரி உள்ளே கொண்டு வரப்பட்டது. இந்த மூவரின் உடல்களும் இழுத்துச் செல்லப்பட்டு அந்த லாரிகளில் வீசப்பட்டன.
 
"இரண்டு பூசாரிகள் சட்லஜ் ஆற்றங்கரையில் அந்த சடலங்களுக்காகக் காத்திருந்தனர். மூவரின் சடலங்களும் சிதையில் வைக்கப்பட்டு தீ மூட்டப்பட்டது.
 
பொழுது விடியத் தொடங்கியதும், எரியும் தீ அணைக்கப்பட்டு பாதி எரிந்த உடல்கள் சட்லஜ் ஆற்றில் வீசப்பட்டன. பின்னர் இந்த இடம் சௌகி எண் 201 என அடையாளம் காணப்பட்டது.
 
காவல்துறையினரும், பூசாரிகளும் அங்கிருந்து சென்றவுடன் கிராம மக்கள் தண்ணீருக்குள் குதித்தனர். பாதி எரிந்த உடல் உறுப்புகள் தண்ணீரிலிருந்து எடுக்கப்பட்டு பின்னர் முறையாக தகனம் செய்யப்பட்டது," என்று மன்மத்நாத் குப்தா தனது ' ஹிஸ்டரி ஆஃப் இந்தியன் ரெவல்யூஷனரி மூவ்மெண்ட்’ என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்.
 
மகாத்மா காந்திக்கு எதிரான போராட்டம்
 
பகத் சிங் மற்றும் அவரது தோழர்கள் மார்ச் 24 அன்று தூக்கிலிடப்பட இருந்தனர், ஆனால் திட்டமிட்ட நேரத்திற்கு 11 மணி நேரத்திற்கு முன்னதாக அவர்கள் தூக்கிலிடப்பட்டனர். இந்தச் செய்தி பரவியதும் இந்திய மக்களிடையே கோபமும் அதிர்ச்சியும் ஏற்பட்டது.
 
நியூயார்க்கில் உள்ள 'டெய்லி ஒர்க்கர்' நாளிதழ் இந்தத் தூக்கு தண்டனையை, பிரிட்டிஷ் லேபர் அரசின் ரத்தக்களறி என்று கூறியது. அந்த நாட்களில் கராச்சிக்கு பயணம் சென்றிருந்த மகாத்மா காந்தி மீது இந்த மரணதண்டனைகளின் பொறுப்பு நேரடியாக அல்லாமல் மறைமுகமாக சுமத்தப்பட்டது.
 
"காந்திஜியின் ரயில் கராச்சி நிலையத்திற்கு வந்தவுடன் எதிர்ப்பாளர்கள் அவரது கைகளில் கருப்புப் பூக்களை அளித்தனர். இந்தியாவின் எதிர்காலம் குறித்து உரையாடல் நடைபெறவிருந்த நிலையில், பகத் சிங் தூக்கிலிடப்படக்கூடாது என்ற நிபந்தனையை இர்வின் பிரபுவிடம் அவர் வைக்கவில்லை என்று காந்திஜி மீது குற்றம் சாட்டப்பட்டது,” என்று சத்விந்தர் சிங் ஜஸ் எழுதுகிறார்.
 
ஜவஹர்லால் நேரு இந்த தூக்கு தண்டனைகளைக் கடுமையான வார்த்தைகளில் கண்டித்தார்.
 
"பகத் சிங் போன்ற ஒருவரின் தைரியத்தையும் சுய தியாகத்தையும் நான் பாராட்டுகிறேன். பகத் சிங் போன்ற தைரியம் மிகவும் அரிதானது. இந்த தைரியத்தை நான் பாராட்டமாட்டேன் என்று வைஸ்ராய் எதிர்பார்த்திருந்தால் அது அவரது தவறான என்ணம்.
 
பகத் சிங் ஓர் ஆங்கிலேயராக இருந்து, இங்கிலாந்துக்காக இந்த நடவடிக்கையை எடுத்திருந்தால் அவர் என்ன செய்திருப்பார் என்று தனது இதயத்தை அவர் கேட்க வேண்டும் என்று நேரு குறிப்பிட்டார்,” என்று ஸ்ரீராம் பக்‌ஷி தனது ' ரெவல்யூஷனரீஸ் அண்ட் தி பிரிட்டிஷ் ராஜ்’ என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்.
 
இருபதாம் நூற்றாண்டின் முதல் தசாப்தத்தில், ஆங்கிலேயர்களுக்கு எதிரான கிளர்ச்சியின் நெருப்பு நாடு முழுவதும் பரவியிருந்தது. பகத் சிங்கின் சித்தப்பா அஜித் சிங், தந்தை கிஷன் சிங் இருவரும் கதர்(Ghadar) கட்சியின் உறுப்பினர்கள்.
 
1907 செப்டம்பர் 28ஆம் தேதி பகத் சிங் பிறந்த நாளன்று, அவரது தந்தையும் சித்தப்பாவும் பிரிட்டிஷ் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
 
முன்பு பகத் சிங்கிற்கு பகன்லால் என்று பெயர் சூட்டப்பட்டது. 1923இல் அவர் லாகூரில் உள்ள தேசிய கல்லூரியில் சேர்ந்தார்.
 
படிப்பில் அவர் சிறந்து விளங்கினார். அவர் உருது, இந்தி, குர்முகி, ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருத மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்தார்.
 
1924இல் குடும்ப உறுப்பினர்கள் அவரை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தத் தொடங்கினர்.
 
பெற்றோரை சம்மதிக்க வைக்க முடியாமல் பகத்சிங் லாகூரில் உள்ள தனது வீட்டைவிட்டு வெளியேறி கான்பூருக்கு வந்தார். அங்கு பிரபல சுதந்திரப் போராட்ட வீரர் கணேஷ் சங்கர் வித்யார்த்தியின் ‘பிரதாப்’ என்ற வாரப் பத்திரிகையில் பணியாற்றினார். அந்த நாளிதழில் பல்வந்த் என்ற பெயரில் கட்டுரைகள் எழுதி வந்தார்.
 
கான்பூரில் அவர் மற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களான படுகேஷ்வர் தத், ஷிவ் வர்மா மற்றும் பி.கே.சின்ஹா ​​ஆகியோரைச் சந்தித்தார்.
 
அஜய் கோஷ் தனது 'பகத் சிங் அண்ட் ஹிஸ் காமரேட்ஸ்' என்ற புத்தகத்தில்," படுகேஷ்வர் தத் எனக்கு பகத் சிங்கை அறிமுகம் செய்து வைத்தார்.
 
அந்த நாட்களில் அவர் உயரமாகவும், மிக ஒல்லியாகவும் இருந்தார். அவருடைய ஆடைகள் பழையதாக இருந்தன. அவர் மிகவும் அமைதியாக, படிக்காதவரைப் போல் இருப்பார்.
 
அவரிடம் தன்னம்பிக்கையே இருக்கவில்லை. முதல் பார்வையில் அவரை எனக்குப் பிடிக்கவில்லை. அவர் போன பிறகு இதை நான் படுகேஷ்வர் தத்திடம் சொன்னேன்," என்று எழுதியுள்ளார்.
 
"இரண்டு ஆண்டுகளில் பகத் சிங்கின் ஆளுமையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது. அவர் ஒரு சிறந்த பேச்சாளராகிவிட்டார். தன்னை பின்பற்றாமல் மக்களால் இருக்க முடியாது என்று அவர் வலுவாகவும், ஆர்வத்துடனும், நேர்மையுடனும் பேசினார்.
 
அவர் 1924இல் ஹிந்துஸ்தான் குடியரசுக் கழகத்தின் உறுப்பினரானார். சந்திரசேகர் ஆசாத் அதன் தலைவராக இருந்தார். பகத் சிங் அவருக்கு மிக நெருக்கமானவராக ஆனார்," என்று அவர் மேலும் குறிப்பிடுகிறார்.
 
1927இல், ககோரி சம்பவம் தொடர்பாக பகத்சிங் முதல்முறையாக கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்தை ஆதரித்து 'வித்ரோஹி' என்ற பெயரில் அவர் ஒரு கட்டுரையை எழுதினார்.
 
லாகூரில் நடந்த தசரா கண்காட்சியில் குண்டுவெடிக்கச் செய்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. பின்னர் நல்ல நடத்தைக்காக சிறையிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார். அதே ஆண்டில் சைமன் கமிஷன் இந்தியா வந்தபோது, ​​லாலா லஜ்பத்ராய் அதைக் கடுமையாக எதிர்த்தார்.
 
போராட்டத்தின்போது, ​​எஸ்பி ஜேஏ ஸ்காட், கூட்டத்தினர் மீது தடியடி நடத்த உத்தரவிட்டார். லாலா லஜ்பத் ராயை தூரத்திலிருந்தே அவர் பார்த்தார். அவர் மீது தடியடி நடத்த ஆரம்பித்தார்.
 
உடலில் இருந்து ரத்தம் கசிந்து தரையில் விழும் வரை தடிகளால் அவர் தாக்கப்பட்டார். மயங்கி விழுவதற்கு முன் அவர், 'என் மீது விழுந்த ஒவ்வோர் அடியும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் சவப்பெட்டியில் அடிக்கப்பட்ட ஆணி என்பது நிரூபணமாகும்' என்று கத்தினார்.
 
காவல்துறையின் இந்தச் செயலைக் கண்டித்த ஜவஹர்லால் நேரு, ‘இதுவொரு தேசிய அவமானம்’ என்றார். லாலா லஜ்பத் ராய் நவம்பர் 17 அன்று காலமானார்.
 
1928 டிசம்பர் 10ஆம் தேதி பகவதிசரண் வோஹ்ராவின் மனைவி துர்கா தேவி தலைமையில், நாடு முழுவதும் இருந்து வந்திருந்த புரட்சியாளர்களின் கூட்டம் லாகூரில் நடைபெற்றது.
 
இந்தக் கூட்டத்தில் லாலாஜியின் மரணத்திற்கு பழிவாங்குவது என முடிவு செய்யப்பட்டது. லாலாஜியின் மரணத்தை இந்தியா சகித்துக் கொள்ளாது என்பதை பகத் சிங்கும் அவரது தோழர்களும் உலகுக்குச் சொல்ல விரும்பினார்கள்.
 
எஸ்பி ஸ்காட்டை கொல்லும் பணியில் பகத்சிங், சுக்தேவ், சந்திரசேகர் ஆசாத் மற்றும் ஜெய் கோபால் ஆகியோர் பங்கேற்பது என்று முடிவு செய்யப்பட்டது.
 
இரண்டு நாட்களுக்கு முன்பு, அதாவது டிசம்பர் 15 அன்று, புரட்சியாளர்கள் ஸ்காட்டை கொல்ல இருந்த இடத்திற்குச் சென்று பார்வையிட்டனர்.
 
பகத் சிங் சிவப்பு நிற பார்டர் கொண்ட சுவரொட்டியைத் தயாரித்தார். அதில் 'ஸ்காட் கொல்லப்பட்டார்' என்று எழுதப்பட்டிருந்தது. கையால் எழுதப்பட்ட அந்த சுவரொட்டி பின்னர் லாகூர் சதி வழக்கில் அவருக்கு எதிராக ஆதாரமாகப் பயன்படுத்தப்பட்டது.
 
ஸ்காட் காவல் நிலையத்திற்கு வந்ததும், இந்த மூவரிடமும் இதைப் பற்றி தகவல் சொல்லவேண்டும் என்று இளைஞரான ஜெய்கோபாலுக்கு பொறுப்பு வழங்கப்பட்டது. ஸ்காட் சென்ற காரின் நம்பர் பிளேட் 6728. இந்த எண்ணை நினைவில் வைத்துக் கொள்ளுமாறு ஜெய்கோபாலிடம் சொல்லப்பட்டது.
 
ஸ்காட்டை இதுவரை ஜெய்கோபால் பார்த்ததில்லை என்பதுதான் இங்கு ஆச்சர்யமான விஷயம். அன்று ஸ்காட் காவல் நிலையத்திற்கு வரவில்லை. அன்றைய தினம் அவரது மாமியார் இங்கிலாந்தில் இருந்து லாகூர் வர இருந்ததால் அவர் ஒரு நாள் விடுமுறை எடுத்திருந்தார்.
 
காவல் நிலையத்திலிருந்து உதவி எஸ்பி ஜேபி சாண்டர்ஸ் வெளியே வந்தபோது ​​ஜெய்கோபால் அவரை ஸ்காட் என்று நினைத்தார். இந்தத் தகவலை அவர் பகத்சிங் மற்றும் ராஜகுருவிடம் தெரிவித்தார்.
 
பிற்பகலில் காவல் நிலையத்திலிருந்து வெளியே வந்த சாண்டர்ஸ் மோட்டார் சைக்கிளை ஸ்டார்ட் செய்து கொண்டிருந்தபோது ​​ராஜகுரு தனது ஜெர்மன் மவுஸர் துப்பாக்கியால் அவரைச் சுட்டார்.
 
'இல்லை, இல்லை, இல்லை அவர் ஸ்காட் இல்லை' என்று பகத்சிங் கத்திக்கொண்டே இருந்தார். ஆனால் அதற்குள் மிகவும் தாமதமாகிவிட்டது. சாண்டர்ஸ் கீழே விழுந்தபோது ​​பகத் சிங்கும் அவரது உடலில் சில தோட்டாக்களைச் சுட்டார்.
 
முன்பே முடிவு செய்தபடி பகத் சிங்கும் ராஜகுருவும் டிஏவி கல்லூரியை நோக்கி ஓடினார்கள். அங்கு சந்திரசேகர் ஆசாத் அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க காத்திருந்தார்.
 
சுதந்திரப் போராட்ட வீரர் ஷிவ் வர்மா தனது 'ரிமினிசன்ஸ் ஆஃப் ஃபெலோ ரெவல்யூஷனரிஸ்' என்ற புத்தகத்தில், "சாண்டர்ஸை கொன்றுவிட்டு பகத்சிங்கும் ராஜகுருவும் ஓடும்போது, ​​தலைமைக் காவலர் சனன் சிங் அவர்களைத் துரத்தத் தொடங்கினார்.
 
ஆசாத் கத்தியபோதும் அவர் நிற்கவில்லை, அதனால் ராஜகுரு அவரையும் சுட்டுக் கொன்றார். அப்போது பலர் ஹாஸ்டல் ஜன்னலில் இருந்து இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர் ஃபைஸ் அகமது ஃபைஸ், அவர் பின்னர் சிறந்த கவிஞரானார்," என்று எழுதியுள்ளார்.
 
அடுத்த நாள் நகரின் சுவர்களில் சிவப்பு மையால் எழுத்தப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன, அதில் ’ சாண்டர்ஸ் இறந்துவிட்டார். லாலா லஜ்பத் ராயின் படுகொலைக்கு பழிவாங்கப்பட்டது’ என்று எழுதப்பட்டிருந்தது.
 
சாண்டர்ஸின் படுகொலைக்குப் பிறகு லாகூரிலிருந்து வெளியே செல்வது முடியாத ஒன்றாக ஆகிவிட்டது. நகரின் மூலை முடுக்கெல்லாம் போலீசார் குவிக்கப்பட்டனர்.
 
சாண்டர்ஸை கொல்வதற்கு முன்பு பகத் சிங் தனது தலைமுடியை வெட்டிவிட்டார். அவரது புதிய மாறுவேடத்தைப் பற்றி போலீஸாருக்கு தெரியவில்லை.
 
முடி மற்றும் தாடியுடன் ஒரு சீக்கிய இளைஞனை அவர்கள் தேடிக்கொண்டிருந்தனர். பகத் சிங் பெரிய மனிதர் போல உடைகளை அணிந்து ரயிலில் செல்வது என்றும் துர்கா பாபி அவருடைய மனைவியாக உடன் பயணிப்பார் என்றும் முடிவு செய்யப்பட்டது.
 
மல்விந்தர்ஜீத் சிங் வராய்ச் தனது 'பகத் சிங் தி எடர்னல் ரெபெல்' என்ற புத்தகத்தில், "பகத் சிங் ஓவர் கோட் மற்றும் தொப்பி அணிந்திருந்தார். அவர் தனது கோட்டின் காலரை தூக்கி வைத்திருந்தார். தனது முகம் தெரியாதவாறு அவர் துர்கா பாபியின் மகன் ஷாச்சியை மடியில் வைத்திருந்தார்.
 
பகத் சிங் மற்றும் துர்கா பாபி முதல் வகுப்பு கூபேயில் இருந்தார்கள். ராஜ்குரு வேலைக்காரன் வேடத்தில் மூன்றாம் வகுப்பில் பயணம் செய்து கொண்டிருந்தார். இருவரும் தோட்டாக்கள் நிரம்பிய ரிவால்வர்களை வைத்திருந்தனர்,” என்று எழுதியுள்ளார்.
 
லக்னெள ஸ்டேஷனில் இறங்கிய பிறகு, ஸ்டேஷனின் காத்திருப்பு அறையில் சில மணிநேரம் கழித்தனர். இங்கிருந்து ராஜ்குரு வேறுபுறம் சென்றார்.
 
பகத் சிங்கும் துர்கா பாபியும் கல்கத்தாவை நோக்கிச் சென்றனர். துர்கா பாபியின் கணவர் பகவதிசரண் வோஹ்ரா ஏற்கெனவே அங்கு இருந்தார்.
 
கல்கத்தாவில் சில நாட்கள் தங்கிய பிறகு பகத் சிங் ஆக்ராவுக்கு வந்தார், அங்கு 'ஹிங் கி மண்டி' பகுதியில் இரண்டு வீடுகளை வாடகைக்கு எடுத்தார்.
 
ஆக்ராவில் பகத் சிங் மற்றும் அவரது தோழர்களின் கூட்டம் நடந்தது, அதில் சாண்டர்ஸை கொன்றதன் விளைவு குறித்துப் பெரிய விவாதம் நடந்தது. இந்தக் கொலையால் தாங்கள் எதிர்பார்த்த பலன் இல்லை என்று அனைவரும் கருதினர். இதற்குப் பயந்து ஏராளமான ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறுவார்கள் என்று அவர்கள் எதிர்பார்த்திருந்தனர்.
 
அந்த நாட்களில், இரண்டு மசோதாக்கள் அசெம்ப்ளியில் பரிசீலிக்கப்பட இருந்தன. ஒன்று, பொதுமக்கள் பாதுகாப்பு மசோதா. அதில் விசாரணையின்றி யாரையும் காவலில் வைக்கும் உரிமை அரசுக்கு வழங்கப்பட்டது. இரண்டாவதாக, தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் செய்யத் தடை விதிக்கும் வர்த்தக தாவா மசோதா.
 
இந்த மசோதாக்கள் சமர்ப்பிக்கப்படும் நாளில் அதாவது ஏப்ரல் 8ஆம் தேதி, பகத் சிங்கும் படுகேஷ்வர் தத்தும் காக்கிச் சட்டை, ஷார்ட்ஸ் அணிந்து அசெம்ப்ளியின் பார்வையாளர்கள் கேலரியை அடைந்தனர். விட்டல்பாய் படேல், முகமது அலி ஜின்னா, மோதிலால் நேரு போன்ற பல பெரிய தலைவர்கள் அப்போது அங்கு இருந்தனர்.
 
 
”அசெம்ப்ளி உறுப்பினர் யாரும் இல்லாத இடத்தில் பகத்சிங் மிக கவனமாக வெடிகுண்டை உருட்டிவிட்டார். வெடிகுண்டு வெடித்தவுடன் மண்டபம் முழுவதும் இருள் சூழ்ந்தது.
 
படுகேஷ்வர் தத் இரண்டாவது குண்டை வீசினார். பின்னர் பார்வையாளர்கள் கேலரியில் இருந்து துண்டுப் பிரசுரங்கள் பறக்கத் தொடங்கின. 'இன்குலாப் ஜிந்தாபாத்' மற்றும் 'பாட்டாளி வர்க்கம் வாழ்க' என்ற முழக்கங்களையும் உறுப்பினர்கள் கேட்டனர்,” என்று குல்தீப் நய்யர் எழுதுகிறார்.
 
அந்தத் துண்டுப் பிரசுரங்களில், 'காது கேட்காதவர்களுக்கு கேட்க வைக்க உரத்த குரல் தேவை' என்று எழுதப்பட்டிருந்தது. பகத் சிங்கும் படுகேஷ்வர் தத்தும் அங்கிருந்து தப்ப முயலவில்லை. அவர்கள் கைதாவதாக முன்பே முடிவு செய்யப்பட்டிருந்தது.
 
அதேநேரத்தில் பகத்சிங் சாண்டர்ஸை கொன்ற தனது கைத்துப்பாக்கியை ஒப்படைத்தார். சாண்டர்ஸ் கொலையில் அவர் ஈடுபட்டதற்கு இந்த கைத்துப்பாக்கி மிகப்பெரிய ஆதாரமாக இருக்கும் என்பதை அவர் அறிந்திருந்தார்.
 
இருவரும் வெவ்வேறு காவல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பகத் சிங் பிரதான காவல் நிலையத்திற்கும், படுகேஷ்வர் தத், சாந்தினி சௌக் காவல் நிலையத்திற்கும் அழைத்து வரப்பட்டனர். இருவரையும் தனித்தனியாக விசாரித்து உண்மையைக் கண்டறிய வேண்டும் என்பதே அதன் நோக்கமாக இருந்தது.
 
இந்தத் தாக்குதலுக்காக பகத் சிங் மற்றும் படுகேஷ்வர் தத்துக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் சாண்டர்ஸின் கொலைக்காக பகத் சிங், ராஜ்குரு மற்றும் சுக்தேவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
 
பகத்சிங் அசெம்ப்ளியில் வெடிகுண்டு வீசியபோது இந்த சட்டையை அணிந்திருந்தார்
 
பகத் சிங் தூக்கிலிடப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு பண்டிதர் மதன் மோகன் மாளவியா வைஸ்ராய் இர்வின் பிரபுவுக்கு ஒரு தந்தி அனுப்பினார்.
 
பகத் சிங்கின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும் என்று அவர் கோரினார். ஆனால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
 
பகத் சிங் தூக்கிலிடப்பட்ட மறுநாள் லாகூர் முழுவதும் ஹர்த்தால் அனுசரிக்கப்பட்டது. அவரது நினைவாக ’நீலா கும்பத்’ இல் இருந்து இரங்கல் ஊர்வலம் புறப்பட்டது. இந்த இடம் சாண்டர்ஸ் சுடப்பட்ட இடத்திற்கு மிக அருகில் இருந்தது.
 
மூன்று மைல் நீளம் இருந்த இந்த ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான இந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும் சீக்கியர்கள் கலந்து கொண்டனர். ஆண்கள் தங்கள் கைகளில் கருப்பு நிற பட்டை அணிந்திருந்தனர். பெண்கள் கருப்பு சேலை அணிந்து எதிர்ப்பு தெரிவித்தனர். கடைவீதியைக் கடந்ததும் ஊர்வலம் அனார்கலி சந்தையின் நடுவில் நின்றது.
 
அப்போதுதான் பகத்சிங்கின் முழு குடும்பமும் மூன்று தியாகிகளின் அஸ்தியுடன் ஃபிரோஸ்பூரில் இருந்து லாகூர் வந்தடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
 
மூன்று மணி நேரம் கழித்து பூக்கள் தூவப்பட்ட மூன்று சவப்பெட்டிகள் ஊர்வலத்தின் ஒரு பகுதியாக மாறின. அங்கிருந்த அனைவரின் கண்களிலும் கண்ணீர் பெருகியது.
 
அப்போது உருது நாளிதழ் ஒன்றின் ஆசிரியர் மௌலானா ஃஜாபர் அலிகான் கவிதை ஒன்றை வாசித்தார். பகத் சிங் தூக்கிலிடப்பட்ட சிறையின் வார்டன் சரத் சிங், மெதுவாக நடந்து தனது அறைக்குச் சென்று கதறி அழத் தொடங்கினார்.
 
தனது 30 ஆண்டு வாழ்க்கையில் பலர் தூக்கிலிடப்படுவதை அவர் பார்த்திருக்கிறார். ஆனால் பகத் சிங் மற்றும் அவரது இரு தோழர்களைப் போல யாரும் இதுவரை இத்தனை துணிச்சலாக மரணத்தைத் தழுவியதில்லை.
 
பகத் சிங் இறந்து 16 ஆண்டுகள், 4 மாதங்கள் மற்றும் 23 நாட்களுக்குப் பிறகு, இந்தியா சுதந்திரமடைந்தது. ஆங்கிலேயர்கள் என்றென்றைக்குமாக இங்கிருந்து வெளியேற வேண்டியதாயிற்று.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்