இலங்கை எம்.பி இப்படியும் செய்வாரா? பல கோடி தங்க கடத்தலில் ஈடுபட்டதாக சர்ச்சை
புதன், 24 மே 2023 (23:17 IST)
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹிம் சட்டவிரோதமான முறையில் தங்கம் மற்றும் கையடக்கத் தொலைபேசி கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டு உள்ளார்.
துபாய்க்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்த அலி சப்ரி ரஹிம், நேற்றைய தினம் நாட்டிற்கு திரும்பியிருந்தார்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் விசேட பிரமுகர்கள் வருகைத் தரும் நுழைவாயிலின் ஊடாக, நாடாளுமன்ற உறுப்பினர் வருகைத் தர முயற்சித்துள்ளார்.
இந்த நிலையில், கிடைக்கப் பெற்ற ரகசிய தகவலொன்றை அடுத்து, கொழும்பு சுங்க அதிகாரிகள் குழுவொன்று விமான நிலையத்தை நோக்கி விரைந்துள்ளது.
இவ்வாறு விமான நிலையத்திற்கு சென்ற விசேட குழு, நாடாளுமன்ற உறுப்பினரின் பயண பைகளை சோதனைக்கு உட்படுத்தியுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் வசமிருந்து தங்கம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதன்படி, நாடாளுமன்ற உறுப்பினரிடமிருந்து 3 கிலோ 397 கிராம் தங்கம் மீட்கப்பட்டதுடன், அதன் இன்றைய சந்தை பெறுமதியாக 74 மில்லியன் இலங்கை ரூபா மதிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், 91 கையடக்கத் தொலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ளன.
இவ்வாறு மீட்கப்பட்ட கையடக்கத் தொலைபேசிகளின் இன்றைய சந்தை பெறுமதியாக 4.2 மில்லியன் ரூபா மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹிமிடமிருந்து 78.2 மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்களை இலங்கை சுங்க அதிகாரிகள் மீட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து சுங்க அதிகாரிகளால் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டு கொழும்பு சுங்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
விசாரணைகளின் பின்னர் 7.5 மில்லியன் தண்டப் பணம் அறவிடப்பட்டு, நாடாளுமன்ற உறுப்பினர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினரிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்கள் அனைத்தும், அரசுடமையாக்கப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தங்க கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட இரண்டாவது நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹிம் என தகவல்கள் கூறுகின்றன.
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.டேனில், தங்க கடத்தல் குற்றச்சாட்டிற்கு இலக்காகி, 1982ம் ஆண்டு காலப் பகுதியில் பதவி விலகியிருந்தார்.
இந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் தங்க கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரண்டாவது சந்தர்ப்பம் இதுவென தெரிவிக்கப்படுகின்றது.
தங்க கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹிம்மிற்கு எதிராக எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்க முடியும் என்பது தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணியும், இலங்;கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளருமான பிரதீபா மஹானாமஹேவாவிடம் பிபிசி தமிழ் வினவியது.
விசேட பிரமுகவர்கள் வருகைத் தரும் நுழைவாயிலை பயன்படுத்தி, சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டமை முதலாவது குற்றச்சாட்டு என அவர் கூறுகின்றார்.
விசேட பிரமுகர்களின் நுழைவாயிலின் ஊடாக வருகைத் தருவோர், இவ்வாறு சோதனைக்குட்படுத்தப்படுவதில்லை எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
இதன்படி, சட்டவிரோத பொருட்களை நாட்டிற்குள் கொண்டு வந்ததன் ஊடாக, நாடாளுமன்ற உறுப்பினருக்கான சிறப்புரிமைகளை அவர் தவறாக பயன்படுத்தியுள்ளார் என அவர் தெரிவிக்கின்றார்.
''இந்த விடயம் தொடர்பில் சபாநாயகர் விசேட விசாரணையொன்றை நடத்த வேண்டும். சபாநாயகருக்கு இந்த விசாரணைகளை நடத்த முடியும்" என அவர் குறிப்பிடுகின்றார்.
''குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரிகளுக்கும், சுங்கத் திணைக்கள அதிகாரிகளுக்கும் விசேடமாக நன்றி தெரிவிக்க வேண்டும். இவ்வாறான நடவடிக்கைகள் எடுத்தமை தொடர்பில் நன்றி தெரிவிக்க வேண்டும். சட்டத்தை சரியான முறையிலும், சமமாகவும் பயன்படுத்தியுள்ளனர்.
ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இது முன்னுதாரணமாக காணப்படும். தண்டனை சட்டகோவையின் பிரகாரம் இவர் தவறிழைத்துள்ளதாக கூறப்படுகின்றது. எனினும், போலீஸ் விசாரணையொன்று நடத்தப்பட வேண்டும். போலீஸ் விசாரணைகளின் ஊடாக சந்தேகநபரிடம் வாக்குமூலம் பெறப்பட்டு, சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பில் சபாநாயகர் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்ட திருத்தங்களை மேற்கொள்ள முடியும். இந்த விசாரணைகளை இயலுமான விரைவில் நடாத்தப்பட்டு, தண்டனை வழங்கப்பட வேண்டும். பதவி விலக்கும் வகையில் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும்.
விசாரணைகளில் உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில், தண்டனைக்கு அமைய அவரை பதவி விலக்க முடியும்." என பிரதீபா மஹானாமஹேவா தெரிவிக்கின்றார்.
தங்க கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் முதலாவதாக பதவி விலகிய எம்.ஏ.டேனியலில் விசாரணை அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, அலி சப்ரி ரஹிம்மின் விசாரணைகளையும் நடத்த முடியும் என ஜனாதிபதி சட்டத்தரணியும், இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளருமான பிரதீபா மஹானாமஹேவா தெரிவிக்கின்றார்.