பாகிஸ்தானில் இந்திய வான் தாக்குதல் நடத்தியதை இந்த புகைப்படங்கள் உறுதி செய்கின்றனவா?

Webdunia
வெள்ளி, 1 மார்ச் 2019 (12:40 IST)
பாகிஸ்தானில் இந்திய விமானப்படை செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்திய இடம் இதுதான் என்று கூறும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகின்றன.பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் பயிற்சி முகாமில் தாக்குதல் நடத்தியதாகவும், அந்த பயங்கரவாத அமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாகவும் இந்தியா கூறியது.
இதனை ஒரு முன் தற்காப்பு நகர்வு என இந்திய அரசு கூறியது. அதாவது, அந்த அமைப்பு இந்தியாவில் பல இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாகவும் அதன் பொருட்டே முன்னதாக தாக்குதல் தொடுத்ததாகவும் இந்தியா கூறியது. முன்னதாக, புல்வாமாவில் பிப்ரவரி 14ஆம் தேதி அந்த அமைப்பு நடத்திய தாக்குதலில் 40க்கும் மேலான சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர்.
 
இந்த வான் தாக்குதல் குறித்து எந்த புகைப்படத்தையும் இந்திய அதிகாரிகள் வெளியிடவில்லை. ஆனால், பாகிஸ்தான் சில புகைப்படங்களை வெளியிட்டது. இந்த தாக்குதலால் எந்த பாதிப்பும் இல்லை என்றும் பாகிஸ்தான் கூறியது.
இரு தரப்பும் வெவ்வேறான கருத்துகளை பகிர்ந்துள்ள நிலையில், இந்தியாவில் சமூக ஊடகங்களில் பல புகைப்படங்கள் பகிரப்பட்டன. அந்த புகைப்படங்களில் இந்தியா நடத்திய தாக்குதலினால் கடுமையான சேதம் ஏற்பட்டதுபோல காட்சிகள் இருந்தன.
 
இந்த புகைப்படங்கள் பல்லாயிரக்கணக்கான பேரால் பல்லாயிரம் முறை பகிரப்பட்டன.
இது குறித்து பிபிசி ஓர் ஆய்வினை மேற்கொண்டது. அந்த ஆய்வில் இந்த புகைப்படங்கள் போலியானவை என கண்டறியப்பட்டன.
 
பாகிஸ்தானில் உள்ள பாலகோட் பகுதிக்கு மோசமான அழிவை இந்திய விமானப் படையின் வான் தாக்குதல் ஏற்படுத்தியதாக கூறி இந்த புகைப்படம் பகிரப்பட்டது.
 
இந்த புகைப்படத்தில், வீடுகள், கட்டடங்கள் முற்றும் முழுவதுமாக சிதிலமடைந்து காணப்பட்டன. ஆனால், இந்த புகைப்படத்திற்கும் இந்தியா பாகிஸ்தான் இடையே ஏற்பட்டிருக்கும் பதற்றத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
 
இது ஒரு தசாப்த பழமையான புகைப்படம். இந்த புகைப்படமானது பாகிஸ்தானால் நிர்வகிக்கப்படும் காஷ்மீரில் 2005ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது எடுக்கப்பட்டது.
 
அந்த நிலநடுக்கத்தில் ஏறத்தாழ பல்லாயிரம் பேர் பலியானதாக தகவல் தெரிவிக்கின்றன. பலியானவர்களில் பெரும்பான்மையானவர்கள் பாகிஸ்தானால் நிர்வகிக்கப்படும் காஷ்மீர் பகுதியை சேர்ந்தவர்கள்.
இப்போது பகிரப்படும் இந்த புகைப்படமானது, ஏ.எஃப்.பி செய்தி முகமையால் 2005ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதி வெளியிடப்பட்டது.
 
இந்த புகைப்படம் பல வாட்ஸ்-ஆப் குழுக்களிலும், வலதுசாரி ஃபேஸ்புக் பக்கமான "I Support Amit Shah"விலும் பகிரப்பட்டது.
 
இந்த புகைப்படமும் அதே நிலநடுக்கத்தின்போது எடுக்கப்பட்டதுதான். இந்த புகைப்படமும் ஒரு பேரழிவு ஏற்பட்டு இருப்பதை காட்டுகிறது.
 
இந்த புகைப்படமானது பவுலா ப்ரோன்ஸ்டைனால் எடுக்கப்பட்டது. இந்த படம் கெட்டி இமேஜ் தளத்திலும் உள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்