ரஷ்யாவில் ஓடுபாதையிலேயே விமானத்தை சுற்றி வளைத்த கும்பல் - உள்ளே இருந்தது யார்?

Webdunia
புதன், 1 நவம்பர் 2023 (21:14 IST)
ரஷ்யாவின் விமான நிலையம் ஒன்றை யூத எதிர்ப்பு கும்பல் முற்றுகையிட்டதற்கு யுக்ரேன் மற்றும் மேற்கு நாடுகளே காரணம் என ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் கூறியதை அமெரிக்கா நிராகரித்துள்ளது. 
 
ஞாயிற்றுக்கிழமை இரவு ரஷ்யாவின் மகாச்காலா (Makhachkala ) விமானநிலையத்தை நூற்றுக்கணக்கான நபர்கள் முற்றுகையிட்ட வீடியோ ஒன்று , சமூக ஊடகங்களில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.
 
இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில் இருந்து ரஷ்யாவுக்கு ஒரு  விமானம் வந்தபோது கோபமடைந்த ஒரு கும்பல் விமான ஓடுதளத்துக்கே சென்றது. அங்கே இஸ்ரேலில் இருந்து வந்த விமானத்தை சுற்றி வளைத்தது. 
 
சமூக ஊடகங்களில் வெளியான வீடியோக்களை பார்க்கும்போது நூற்றுக்கணக்கான நபர்கள் கையில் பாலத்தீன கொடியுடன் கதவுகள் மற்றும் ஜன்னல்களை அது நொறுக்கினர். அப்போது கூட்டத்தில் பலர் யூத இன வெறுப்பு கோஷங்களை எழுப்பினர், வேறு சிலர் அல்லாஹு அக்பர் என கோஷங்களை எழுப்பினர். 
 
விமான நிலைய அதிகாரிகளிடம் யூதர்கள் எங்கே எனக்கேட்டு அவர்களை தேடிச் செல்வது போன்ற காட்சிகளும் வீடியோவில் இடம்பெற்றுள்ளன.
 
 
ஒய்நெட் ( Ynet) ஊடகத்திடம் பேசிய ஒரு இஸ்ரேல் பயணி, விமானத்தில் இருந்து இறங்கி பேருந்தில் சென்ற பயணிகள் ஒவ்வொருவரிடமும் வன்முறையாளர்கள் நீங்கள் முஸ்லீமா அல்லது யூதரா என விசாரித்ததாகவும், அந்த விமானத்தில் இருந்த பல யூதர்களுக்கு நல்லவேளையாக ரஷ்ய மொழி பேச தெரிந்திருந்ததால் தப்பித்ததாகவும் கூறியுள்ளார். அந்த பேருந்தில்  மரணத்தை பார்த்தேன் என அவர் கூறியுள்ளார். 
 
விமான நிலையத்திற்கு வெளியே பயணிகள் வீடு திரும்பும்போது, போராட்டக்காரர்கள் கார்களை மறித்து ஆவணங்களை பரிசோதித்ததாகவும்  உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
 
பாதுகாப்புப் படையினர் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்ததாக ரஷ்ய விமான போக்குவரத்து அதிகாரிகள் கூறுகின்றனர். ஞாயிற்றுக்கிழமை இரவு விமான நிலையம் மூடப்பட்டு, பிறகு திங்கட்கிழமை காலை திறக்கப்பட்டது. இஸ்ரேலில் இருந்து வடக்கு காகசஸ் பிராந்தியத்திற்கு   வரும் விமானங்கள் தற்காலிகமாக அருகில் உள்ள நகரங்களுக்கு திருப்பிவிடப்பட்டன.
 
இந்த சம்பவத்தில் இதுவரை 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ரஷ்ய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சில காவல்துறை அதிகாரிகள் உள்பட 20 பேர் காயம் அடைந்ததாகவும் அதில் இருவர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் ரஷ்ய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 
 
டாஜஸ்தான் என்பது ரஷ்யாவில்  வடக்கு காகசஸ் பிராந்தியத்தில் உள்ள ஒரு இஸ்லாமிய ரஷ்ய குடியரசு. இங்கே 31 லட்சம் பேர் வசிக்கின்றனர்.  பல்வேறு இனக்குழுக்கள் உங்கே வசிக்கின்றனர். இது  முஸ்லிம்கள் அடர்த்தியாக வாழும் ஒரு பகுதியாக உள்ளது. இங்கு பழங்காலத்தில் இருந்தே யூதர்களும் கணிசமாக வாழ்கின்றனர்.
 
  பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மீறி போராட்டக்கார்கள் விமான நிலையத்தில் ஒன்றுகூட சமூக ஊடகம் பெரிதும் உதவியிருக்கிறது. இந்த முற்றுகையின் பின்னணியில் மார்னிங் டாஜஸ்தான் (Morning Dagestan) எனும் பிரபலமான டெலிகிராம் சேனல் ஒன்று உள்ளது  
 
மார்னிங் டாஜஸ்தான் ஒரு ரஷ்ய எதிர்ப்பு இஸ்லாமிய சேனலாகும். ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு ஆட்சியை முடிவுக்கு கொண்டுவருவதே எங்களது நோக்கம் என இதன் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். இந்த சேனலில் யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு மற்றும் இஸ்ரேல் பாலத்தீன  மோதல் குறித்த செய்திகள், ஹமாஸ் ஆயுத குழுவுக்கு ஆதரவான செய்திகள் உள்ளன. இந்த சேனலில் 65 ஆயிரத்துக்கு மேற்பட்ட சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். 
 
மார்னிங் டாஜஸ்தான் குழுவை பிபிசி ஆராய்ந்தபோது, இந்த முற்றுகை போராட்டம் எவ்வாறு ஒன்றிணைக்கப்பட்டது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
 
விமான நிலைய போராட்டத்திற்கு மார்னிங் டாஜஸ்தான் சேனலில் அழைப்பு விடுக்கப்பட்டதோடு போராட்டக்கார்கள் எப்படி செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
 
டெல் அவிவில் இருந்து விமானம் ஞாயிற்றுக்கிழமை, உள்ளூர் நேரப்படி இரவு 7 மணிக்கு தரையிறங்கலாம். எதிர்பாராத பார்வையாளர்களை சந்திக்கலாம் என யூதர்களை குறிப்பிட்டு செய்தி பகிரப்பட்டுள்ளது.
 
விமானத்தில் இருந்து பயணிகள் வெளியே வரும்போது விமான நிலையத்தை விட்டு வெளியேறும் பகுதியை சுற்று ஒரு குழுவாக கூட வேண்டும்.
 
விமானத்தில் இருந்து வருவோரை ஒவ்வொருவராக வெளியே அனுப்ப வேண்டும். இஸ்ரேலை சபித்து முழக்கம் எழுப்ப வேண்டும். பிறகு அங்கிருந்து கலைந்து செல்லலாம். இஸ்ரேலை சபிக்க அனுமதி மறுக்கப்பட்டால் விமான நிலையத்தை முற்றுகையிடலாம்.
 
பயணிகளின் முகங்களை புகைப்படம் எடுத்து, அவர்கள் செல்லும் கார்களை பிந்தொடர்ந்து டாஜஸ்தானில் எங்கே தங்குகிறார்கள் என்கிற விபரத்தையும் நாம் சேகரிக்க வேண்டும் என போராட்டக்காரர்களுக்கு மார்னிங் டாஜஸ்தான் சேனலில் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது..
 
முன்னதாக இந்த சேனலில் வெளியிடபப்ட்ட செய்திகளில்  இருபது லட்சம் முஸ்லிம்களுக்கு ஆதரவாக மகாச்காலா உள்ளிட்ட பகுதிகளில் பேரணியில் திரள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததது. இந்த சேனலில் யூத இன வெறுப்பு செய்திகளும் இடம்பெற்றிருந்தன. உள்ளூர் மக்கள் யூதர்களுக்கு வாடகைக்கு வீடு தொடக்கூடாது என குறிப்பிடப்பட்டிருந்தது. 
 
2016 ஆம் ஆண்டு யுக்ரேனுக்குத் தப்பிச் சென்று அங்கேயே குடியுரிமையையும் பெற்ற ரஷ்யாவின் முன்னாள் எம்.பி. இலியா பொனோமரேவ் உடன் மார்னிங் டாஜஸ்தான் சேனல் தொடர்புபடுத்தப்படுகிறது.
 
ரஷ்யாவில் போராட்டங்களை நடத்துவது, மற்றும் விளாதிமிர் புதின் ஆட்சியை அகற்றுவது தொடர்பாக பல சமூக ஊடக சேனலை போனோமரெவ் (Ponomarev) நடத்தி வருகிறார். சில காலம் முன்பு, டாஜஸ்தானி உள்ள இஸ்லாமிய குழு ஒன்று, தன்னை தொடர்பு கொண்டதாகவும், யுக்ரேன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்பை கண்டித்து பேரணி நடத்தவும் அதற்கு நிதியளிப்பதற்கும் உதவியதாகவும் ஆனால் 2002 செப்டம்பர் மாதத்தோடு அந்த சேனலுடனான தொடர்பை துண்டித்துவிட்டதாக  திங்கட்கிழமை போனோமரெவ் கூறினார்.
 
 
மார்னிங் டாஜஸ்தான் டெலிகிராம் சேனலைப் பயன்படுத்தி, யுக்ரேனில் இருந்து துரோகிகளால் இந்த கலவரம் தூண்டப்பட்டது என டாஜஸ்தான் ஆளுநர் செர்ஜி மெலிகோவ் குற்றம்சாட்டினார்.
 
இதனை மறுத்த மார்னிங் டாஜஸ்தான் குழு, தங்கள் சேனலுக்கும் பொனோமெரெவ் அல்லது யுக்ரேனுடன் எவ்வித தொடர்பும் இல்லை என தெரிவித்தது.
 
யூதர்கள் மற்றும் இஸ்ரேலியர்களுக்கு எதிராக தூண்டப்படும் வன்முறைகளுக்கு எதிராக ரஷ்யா தீர்க்கமாக செயல்பட வேண்டும். யூதர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என இந்த சம்பவம் தொடர்பாக இஸ்ரேல் கூறியது. 
 
ரஷ்யாவில் விமான நிலையத்தில் நடந்த தாக்குதலை யுக்ரேன் அதிபர் ஜெலின்ஸ்கி கண்டித்தார். 
 
இந்த நிலையில், ரஷ்ய பாதுகாப்பு கவுன்சிலுக்கு மத்தியில் பேசிய ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், ரஷ்யாவில் ஒருசிலர் குழப்பம் ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். மகாச்காலாவில் நிகழ்ந்த சம்பவம் சமூக ஊடகங்களின் வாயிலாக தூண்டப்பட்டிருக்கிறது. யுக்ரேன் மட்டுமின்றி மேற்குலக ஏஜெண்டுகள்  பங்கு இதில் இருக்கிறது. கொடிய குழப்பத்தை யார் ஏற்படுத்துகிறார்கள் இதில் இருந்து யார் ஆதாயம் அடைகிறார்கள் என்பது எனக்குத் தெளிவாகத் தெரியும் என விளாதிமிர் புதின் கூறினார்.
 
ரஷ்யாவின் குற்றச்சாட்டுகள் குறித்து பதிலளித்த அமெரிக்க பாதுகாப்பு கவுன்சிலின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி , உங்கள் நாட்டில் தவறு நடந்தால், அதற்கு இன்னொருவர் மீது பழிசுமத்துவதா என்றார். இந்த சம்பவத்திற்கும் மேற்குலக நாடுகளுக்கும் சம்மந்தம் இல்லை. இது முற்றிலும் வெறுப்பு, மத வெறி தொடர்புடையது என ஜான் கிர்பி பேசினார். விமான நிலையத்தில் நடந்த காட்சிகளும், ரஷ்யாவில் 19ம் நூற்றாண்டின் இறுதி மற்றும் 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் யூதர்களுக்கு எதிராக நிகழ்ந்த படுகொலை சம்பவங்களையும் ஒப்பிடும்போது இரண்டும் ஒத்துப்போவதாக அவர் விமர்சித்தார்.
 
டாஜஸ்தானைச் சேர்ந்த சமூகவியல் நிபுணர், ரசூல் அப்துல்காலிகோவ் (Rasul Abdulkhalikov) ரஷ்யாவில் பாலத்தீன ஆதரவு பேரணிகளை நடத்த பிராந்திய அதிகாரிகள் அனுமதி மறுப்பதே, இந்த யூத எதிர்ப்பு வன்முறை வெடித்ததற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என நம்புவதாக கூறுகிறார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்